October 10, 2011

பேசுகிறேன்...

குடும்பம்


வீட்டில் பெண் பார்த்து நிச்சயம் செய்தபிறகு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் அம்மா அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார்கள்..கேட்க கேட்க ஒருபுறம் மிக அதிக மகிழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்வுகள் அனைத்தையும் அருகிலிருந்து பார்ப்பதற்க்கோ கேட்பதற்க்கோ தவறுவதை நினைத்து மறு புறம் வருத்தமாகவே இருக்கிறது..ஆனாலும் திருமண நிகழ்வையொட்டி உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் குறைவில்லை..!


அம்மாவும் அப்பாவும் இத்திருமணத்தினால் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பது மட்டும் அவர்கள் தங்களுக்குள் செய்துகொள்ளும் கிண்டல் கேலிகளை என்னிடம் பகிர்ந்துகொள்ளும் தொணியிலே தெரிந்துவிட்டது..ஆனால் இருவருக்கும் திருமணத்திற்க்கு பிறகு நான் அவர்களை விட்டு பிரிந்துவிடுவேனோ என்ற பயமும் வந்திருப்பது அவர்களின் பேச்சில் அப்பட்டமாக தெரிகிறது..நான் அப்படியெல்லாம் உங்களை விட்டு போக மாட்டேன் என்பது போன்ற மறைமுக உத்திரவாதம் அளிக்கும்பொழுதுதான் ஓரளவு மனதிருப்தியடைகிறார்கள்..! நானிருக்க பயமேன்?


மிஸஸ்..வசந்த்


இவங்களைப்பற்றி என்ன கூறுவது ? சின்ன சின்ன கவிதைகளும் கதைகளும் கூறும்பொழுது சிரிப்பார், சில சமயம் நான் சொன்ன எளிய கவிதைகளுக்கு இரண்டு மணி நேர விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது..ஆரம்பத்தில் பேசுவதற்க்கு மிகவும் கூச்சப்பட்டவர்கள் நாளாக நாளாக பேசுவதில் அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்திருக்கிறார்,விளைவு சென்ற மாத சம்பளத்தில் பாதி தொலைபேசி பில் தின்று தீர்த்துவிட்டது, ஒன்றைப்பெற மற்றொன்றை இழக்கத்தானே வேண்டும் ஆதலால் அதுபற்றியெல்லாம் இப்பொழுது கவலையில்லை என்னை பொறுத்தமட்டிலும் என் அளவுக்கு சரிசமமாக பேசவோ என்னை கிண்டல் செய்யும் அளவிற்க்கோ கொண்டுவந்துவிட்டு விடவேண்டும் அவ்வளவுதான்.. கிட்டத்தட்ட பேச ஆரம்பித்து ஒருமாத காலம் ஆகியிருக்கும் நிலையில் ஒரு கவிதை ஒன்று எழுதியிருக்கிறார்கள்..


''இதயம் துடிப்பதற்க்கு மறக்கலாம்
ஞாபகங்கள் மனதிலிருந்து விலகலாம்
பாலைவனம் கூட நதியாக மாறலாம்
உன் முகம் என் கண் முன் தோன்றும்போது வரும்
புன்னகையை எதனாலும் தடுக்க முடியவில்லை..!'' - ஜோ

இதுதான் அவர்கள் எனக்கு எழுதிய முதல் கவிதை.. கவிஞி இருக்க பயமேன்?


வேலை


திருமணம் பேசுவதற்க்கு முன்பே எடுத்த முடிவுதான் , திருமணத்திற்க்கு பின்பு இந்தியாவில்தான் பணிபுரியவேண்டுமென்று ஆதலால்  பணியை ராஜினாமா செய்ய இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் நான்கு வருடங்களாக என்னிடம் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் இதுவரை காட்டிவந்த அந்நியோன்யத்தை குறைக்க ஆரம்பித்திருக்கிறேன்,ஏனென்றால் அவர்களைவிட்டு பிரியும்பொழுது என்னால் அவர்களோ ,அவர்களால் நானோ வருத்தமடைந்துவிடக்கூடாது என்பதனால் சிறிது விலகியே இருக்கிறேன்...அதற்க்கு முன் இங்கு இதுவரை வாங்கிய நற்பெயரால் என்னுடைய ராஜினாமாவை நூறுசதவீதம் ஏற்கமாட்டார்கள் கிட்டதட்ட நான்கைந்து மேலதிகாரிகளை பேசி சம்மதிக்கவைக்க வேண்டும் அவர்களை எப்படியெல்லாம் சொல்லி சம்மதிக்க வைப்பது என்பதில்தான் இப்பொழுது ஒரே சிந்தனையாய் இருக்கிறது. திருமண நாள் குறித்து திருமண மஹால் முன்பதிவு செய்தாகிவிட்டது பிரச்சினை எதுவும் இல்லாமல் அவர்கள் என்னை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் இறைவா என்பதும் தின வேண்டுதலாகிவிட்டது.திருமணத்திற்க்கு பின்பு இந்தியாவில் பணிபுரிய வேண்டும் என்பதால் இந்தியாவில் இருக்கும் நல்ல கம்பெனிகளுக்கு விண்ணப்பங்கள் அளித்து காத்திருக்கிறேன் பார்க்கலாம்..திறமையிருக்க பயமேன்..?


உடல் நிலை..


இப்பொழுதெல்லாம் இரண்டு மூன்று மணி நேரம் கணிணியை பார்த்தாலே கண் சிவந்து தூக்கம் வந்துவிடுகிறது அல்லது கண் எரிய ஆரம்பித்துவிடுகிறது கணிணியை ஆன் பண்ணியபடி ஷட்டவுன் செய்யாமலே தூங்கிவிடுகிறேன்..முடிந்தவரையில் கணிணியை தவிர்க்க முயற்சித்துவருகிறேன் ஊருக்கு சென்றுதான் நல்ல கண் மருத்துவரை கலந்தாலோசித்து கண்ணை காக்கவேண்டும்..


காதிலோ மூக்கிலோ மயிருள்ளவர்களை பார்த்தால் எனக்கு ஒருவிதமான முகச்சுளிப்பு ஏற்படும் இப்பொழுது எனக்கும் காதில் நீண்ட மயிர் முளைக்க ஆரம்பித்திருக்கிறது எது நமக்கு வேண்டாமென்று விலகுகிறோமோ அதுதான் நம்மை ப்ரியத்துடன் ஆட்கொள்கிறது என்ன செய்ய? கத்தரிக்கோல் இருக்க பயமேன்? கட் த மயிர்..மயிரைப்போலவே பொறாமையோ காழ்ப்புணர்ச்சியோ உள்ள நட்புகளையும், உறவுகளையும் வெட்டிவிட புதுவித கத்தரிக்கோல் இருந்தால் தேவலாம்..!
சுபம்..!