கவிஞர் : சித்திரையிரவின்
நித்திரை கலைந்திருக்கிறேன்
நித்திரையில் வந்தவளால்
புண்பட்ட இதழ் இதமடைய
சூடான தேநீர் தருவாயா?
தந்தால் சொல்கிறேன்
நித்திரையில் வந்தவள்
யாரென்று!
கவிஞர் மனைவி : தூ காலங்காத்தாலே ஆரம்பிச்சுட்டீகளா ராஸா? எந்திரிச்சு பல்லு கூட விலக்கலை ஊத்தவாய்ல கவிதை சொல்ல ஆரம்பிச்சுட்டாரு...போங்க போயி பல் விலக்குங்க அப்புறம் டீ சாப்டலாம்...
கவிஞர் : ஏன் விலக்குகிறேன்
என்றே தெரியாமல் தினமும்
விலக்குகிறேன்
விரல் வலிக்க
விலக்கி விலக்கி
பார்த்தும் விலகவில்லை
பற்கள் இது என்ன மரபோ?
கவிஞரின் மனைவி : செருப்பு நேத்து ராத்திரி தின்ன பிரியாணி வாய்ல நின்னு ஊசிப்போய் இங்க கப்படிக்குது சீக்கிரம் பல்ல விலக்கிட்டு வாருமய்யா!
கவிஞர் : சூடான தேநீர் கேட்டேன்
சூடான்காரன் தேநீர்
கொடுக்கிறாய் ஏன்?
பாலில் தேநீர் உருவாக்கும்
வித்தை கற்கவில்லையா
பெண்ணே?
கவிஞரின் மனைவி : வெங்காயம் பால்காரனுக்கு மூணு மாச கடன் பாக்கி இதுல பால் டீ வேணுமாம்ல குடுத்தத குடிச்சுட்டு வேலைக்கு கிளம்ப வேண்டிய வேலைய பாருங்க ராஸா!!!!
கவிஞர் : ஒரு வாளி கடலில்
நான் குளிக்கும்
ஆனந்த குளியலே
ஒரு கவிதையாய்...
ஒருவேளை
ஆனந்த விகடனில்
வருமோ?
கவிஞரின் மனைவி : பிபிசியில வரும் பிச்சுபுடுவேன் பிச்சு குளிச்சுட்டு சீக்கிரம் வாங்க சாப்பாடு எடுத்து வச்சுருக்கேன் தின்னுட்டு கிளம்புங்க...
கவிஞர் : இலைச்சோறு
சாப்பிடாமல்
இளைத்துவிட்டேன்
என்கிறேன்
நீயோ பழைய
சோறு சாப்பிடுங்கள்
பருத்து விடுவீர்கள்
என்கிறாய் எந்த ஊர்
நியாயம் இது?
கவிஞரின் மனைவி : மீந்தது யார் தின்னுவா உங்களை தவிர ? என் ராசா இல்ல மதியானத்துக்கு சூடா கொடுத்தனுப்புறேன் சாப்பிட்டு கிளம்புங்க என் கண்ணுல்ல...
கவிஞர் : பொடி போட்டுக்கொண்டே
பொடிநடையாய்
நடக்கிறேன்
பொறம்போக்கு
வீட்ல சொல்லிட்டு
வந்துட்டியா?
என்கிறான் சைக்கிள்
ஓட்டும் பொடிப்பையன் !
மனைவியின் மனசாட்சி : பிசினாரி காசு கொடுத்து பஸ்ல போக மாட்டீங்களாக்கும்?
கவிஞர் : ஓடிபோய் பஸ் ஏறி
பிடிங்க துட்டு
கொடுங்க சீட்டு
என்றேன் ஓட்டுனரிடம்
யோவ் கண்ணாடிய சரியா
போடுமய்யா நடத்துனர்
பின்னாடி இருக்கார்
என்றவரிடம்
எப்படிச்சொல்வேன்
மனைவியின் பிக்கல்
தாங்காமல் மேலோகத்திற்க்கு
செல்ல சீட்டு கேட்டது
அவரிடம் தானென்று !
மனைவியின் மனசாட்சி : சார் அவருக்கு ஒரு சீட்டு கொடுத்துடுங்க சார்!!!!!
முற்றும்...
.