சில வருடங்களுக்கு முன் என்னையும் என் சகோதரியையும் நட்டநடுத்தெருவில் என் தாய் விட்டு சென்றுவிட்டாள், எவனோ பொறம்ப்போக்கு ஒருவன் வந்தான் இவளும் அவன் பின்னாடியே சென்று விட்டாள் தாயா அவள் பேய், பின் பிறந்து மூன்றே மாதம் ஆன எங்களை விட்டுச்செல்ல அந்த கல் நெஞ்சக்காரிக்கு எப்படி மனது வந்ததென்றே தெரியவில்லை ஹும் ..
இத்தனைக்கும் நானும் என் சகோதரியும் ஒரே பிரசவத்தில் பிறந்த ட்வின்ஸ் நிறைய பேர் ட்வின்ஸ் பிறக்கவில்லையென்று வருத்தப்படுகிறார்கள் இவள் என்னடாவென்றாள் எங்களை யாரும் இல்லாத அநாதையைப்போல் விட்டுச்சென்றுவிட்டாள்...இதுவரையிலும் அவள் ஏன் எங்களை விட்டுச்சென்றாள் என்ற காரணம் தெரியவே இல்லை...
திக்குத்தெரியாமல் நட்ட நடுத்தெருவில் நின்றுகொண்டிருந்த எங்கள் இருவரையும் கண்ட ஒரு பணக்கார மனிதர் நாங்கள் இருவரும் சாலையில் கத்திகொண்டிருப்பதை கேட்டு தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு அவருடைய வீட்டிற்க்கு கூட்டிச்சென்றார்..
அங்கு சென்றதும் அவர் எங்களை தன்னுடைய பிள்ளையைப்போல பாலுட்டி சீராட்டி வளர்த்தார் சீரும் சிறப்புமாய் நாங்கள் வளர்ந்து வந்தோம் . திடீரென்று ஒருநாள் அந்த செல்வ சீமானின் தங்கை ஒருத்தி விடுமுறைக்கென நாங்கள் வாழ்ந்து வரும் வீட்டிற்க்கு வந்தாள் அவளுக்கு என் சகோதரியை மிகப்பிடித்துப்போய்விட்டது விடுமுறை முடிந்து தன் வீட்டிற்க்கு திரும்பும் பொழுது அவளையும் தன்னோடு அழைத்து சென்றுவிட்டாள்...
தங்கையை பிரிந்த சோகம் என்னை மிகவும் வாட்டியது . பின் அத்துயரம் செல்வச்சீமான் ராஜதுரையின் மகன் ரமேஷ் மூலம் மறைந்தே போனது. அவன் என்னைவிட இரண்டோ மூன்றோ வயது மூத்தவனாய் இருக்கலாம் ரொம்பவும் அன்பாய் இருப்பான் நானென்றால் அவனுக்கு உயிர் எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச்செல்வான் அவனைப்போலவே எனக்கும் உடையணிவித்து அழகு பார்ப்பான்..
ரமேஷ் ஒருநாள் ராஜதுரை அவர்களை அப்பா என்று அழைத்தபோது நானும் அவனைப்போலவே அழைக்க வாயெடுத்தபோது வெறும் சத்தம் மட்டும்தான் வந்தது பேச்சு வரவில்லை அப்பொழுதுதான் தெரிந்தது நான் ஒரு ஊமையென்று ஊமையாய் பிறத்தல் எவ்வளவு கொடுமையென்று எனக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை...
சில வருடங்களில் ரமேஷ் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான் நான் வீட்டிலேயே முடங்கிகிடந்தேன் ரமேஷ் எப்பொழுது பள்ளிவிட்டு வருவான் என்ற ஆவலில் வீட்டு வாசலே கெதியென்று கிடந்தேன் , பள்ளி விட்டதும் துள்ளி குதித்து வரும் ரமேஷை கண்டது எனக்கு உற்சாகம் பற்றிக்கொள்ளும் நல்ல நட்பு ஒன்று வளர்ந்தது எங்களிருவருக்கும் இடையில் , துளிர்க்காமலே வெட்டுபடப்போகிறதென அறியாமல்...
ரமேஷ் மேற்படிப்பு படிக்க வெளியூர் செல்லும் வரையில் அந்த நட்பு தொடர்ந்தது ஒரு நாள் ரமேஷும் என்னை விட்டு வெளியூர் சென்றுவிட்டான் அதுவரையிலும் ரமேஷின் தோழனாகவே என்னை பார்த்த ராஜ துரை அவர்கள் அவன் போனதிலிருந்து என்னை நடத்தும் விதம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஆம் ராஜதுரை அவர்களின் படுக்கையில் ரமேசோடு சேர்ந்து என்னையும் தூங்கவைத்த அவர் , அவன் என்னை விட்டு பிரிந்து சென்றதிலிருந்து என்னை வீட்டுக்குள் விடுவதேயில்லை மீறி சென்றால் முதுகில் ஓங்கி ஒரு உதைவிடுவார் அந்த உதையை நினைத்தாலே நெஞ்சே பகீரென்கிறது....
இதைவிட பெரிய கொடுமை ஒருநாள் அந்த வீட்டில் அதுவரை கூர்க்காவாய் வேலைபார்த்த சொக்கனை கணக்கு செட்டில் பண்ணி அனுப்பினார் நான் ஏனென்பது மாதிரி அவரைப்பார்த்தேன் , மூன்று வேளையும் நன்றாக தின்று தெண்டச்சோறாய்த்தானே நீயிருக்கிறாய் அதனால் உனக்கு அந்த வேலையை தரப்போகிறேன் என்றார் சொன்னபடியே என்னை அந்த வீட்டு காவலாளியாக்கினார் ஊதியமில்லாத வேலைக்காரன் ஆனேன்...
நல்ல மதிய வேளையொன்றில் ராஜதுரை அவர்களுக்கு மொபைல் அழைப்பு ஒன்று வந்தது மொபைலை எடுத்து பேசியவர் விஷயத்தை கேட்டதும் பதறிப்போய் அப்படியே தலையில் கை வைத்து உட்கார்ந்தவரின் தோளைப்பிடித்து அவரின் மனைவி என்னங்க விஷயம் என்றார்..
நம்ம ரமேஷ் காலேஜ்ல தன்னோட படிக்கிற பொண்ணை கல்யாணம் செய்துகிட்டு வெளியூருக்கு ஓடிவிட்டானாம் அவனோட காலேஜ் பிரின்ஸ்பால் இப்போதான் போன்ல சொன்னார் என்று கூறிக்கொண்டே மயக்கமடைந்தார்... உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் அவரது மனைவி...
மருத்துவ மனையிலிருந்து திரும்பி வந்த அவரின் உடல் நிலை நாளாக நாளாக கவலைக்கிடமானது ரமேஷ் அவருக்கு ஒரே மகன் என்பதால் அவனின் பிரிவு அவருக்கு மிகவும் கவலையை தந்தது. எல்லாரும் பயந்தது போலவே ஒருநாள் அவர் இவ்வுலகை விட்டு சென்றார். உடல் நடு ஹாலில் கிடத்தப்பட்டு இருந்தது அவரது மகன் ரமேஷின் வருகைக்காக அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர் நேரம்தான் கழிந்ததே தவிர ரமேஷ் வரவேயில்லை அவரது இறுதிச்சடங்கிற்க்காக அவரது உடல் இடுகாட்டிற்க்கு எடுத்து செல்லப்பட்டது நானும் பின்னாடியே சென்றேன்
அவரது ஈமக்காரியங்கள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டது அந்த நேரம் அவரின் வளர்ப்பு மகன் என்ற முறையில் என்னுடைய வாலைத்தான் ஆட்ட முடிந்திருந்தது.....
தலைப்பு இலங்கை கண்டி தமிழர்கள் உதவி ம்ம்ம் அப்படித்தான் அவர்கள் என்னை அழைப்பார்கள்....
.