Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

December 31, 2013

மகனுடன் இருந்த நாட்கள் மகாநாட்கள் ...!

வணக்கம் வில்சன் ,

2013ம் ஆண்டு ஆரம்பமே கவலைகளுடனேதான் ஆரம்பித்தது இந்த கவலை மேமாதம் வரை நீடித்தது என்ன பெரிய கவலையென்கிறாயா? வேலை தான் . ஒரு மனிதனுக்கு சுவாசம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் வேலையும் முக்கியம். உப்பில்லா பண்டமும் வேலையில்லா மனிதனும் குப்பையில்தான். வேலையில்லா நாட்களில் தின்ற சாப்பாட்டை செரிக்கும்படியாக்கியவன் மகன் , மகனுடன் இருந்த நாட்கள் மகாநாட்கள். மகனின் மூத்திரத்தில் குளித்தநாட்களும் மூத்திர சுவாசத்தை உட்கொண்ட நாட்களுக்கும் ஈடு இல்லை. வேலையில்லாமல் வீட்டிலிருக்கிறேன் என்ற கவலை எனக்கு மட்டுமே இருந்தது , என் மனைவிக்கோ என் பெற்றோருக்கோ கொஞ்சம் கூட கவலையில்லை எப்படி கவலையிருக்கும் எப்பொழுதும் வீட்டை விட்டு பிரிந்தே இருக்கும் நான் வீட்டிலே இருப்பது அவர்களுக்கெப்படி கவலை தரும் ?

ஜூன் மாதம் வேலைகிடைத்து மஸ்கட் வந்தாயிற்று. புதிய கம்பெனி புதியவேலை புதிய நண்பர்கள் புது அனுபவம் முன்பு பணிபுரிந்த சூழ்நிலைகளைவிட முற்றிலும் மாறுபட்ட புதிய சூழ்நிலை . அலுவலகத்தில்தான் பணி வெம்மையிலேயே பணிபுரிந்து பழக்கப்பட்ட எனக்கு குளிரூட்டப்பட்ட அறையில் வேலைபார்க்கும் அனுபவம் புதிது, எனக்கென கொடுக்கப்பட்ட வேலை புதிது, தோளில் கைபோட்டு பேசுகின்ற ஜெனரல் மேனேஜர் புதிது , ஈகோ இல்லாமல் பழகும்  நண்பர்கள் புதிது , வாரம் ஐந்து நாட்கள் தினம் எட்டு மணிநேரம் மட்டுமே வேலை என்பது புதிது, அதைவிட புதிது மகனை பிரிந்த கவலை. நான் பிரிந்து செல்லும்பொழுதெல்லாம் அப்படித்தானே இருந்திருக்கும் என்பெற்றோர்களுக்கும்?

நாட்கள் பறந்து கொண்டிருந்தது, மகனுடைய முதலாவது பிறந்தநாள் டிசம்பர்10ல் வருகிறது விடுமுறை கேட்டால் கொடுப்பார்களோ இல்லையோ என்ற கவலை . நான் பாக்கியம் செய்தவனா இல்லை கடவுள் புண்ணியத்திலா தெரியவில்லை கேட்டதும் விடுமுறை கிடைத்தது . இதுகூட எனக்கு புதிதுதான் ஏனென்றால் முன்பு கத்தாரில் இருந்த கம்பெனியில் திருமணத்திற்க்கு விடுமுறை கேட்டதும் திருமணத்திற்க்கு முதல் நாள் செல் என்று சொன்னார்கள். அவர்களை மிரட்டித்தான் அங்கிருந்து வரவேண்டியதாகிற்று . ஆனால் இங்கு கேட்டதும் விடுமுறை கொடுத்தார் ஜெனரல் மேனேஜர் . அவர் நீண்ட நாட்கள் நல்ல உடல்நலமுடன் வாழவேண்டும். 

ஊருக்கு வந்த பிறகு எனக்கு நிறைய அதிர்ச்சிகள் காத்திருந்தது. முதலாவது மகனுக்கு காய்ச்சல் வந்து மெலிந்திருந்தான். இரண்டாவது மனைவி அவனைவிட மெலிந்திருந்தாள் . மகன் மெலிந்ததற்க்கு காரணம் உடல் காய்ச்சல் ,மனைவி மெலிந்ததற்க்கு காரணம் உள்ளக்காய்ச்சல், வைரஸ் நான். நிலைமை ஓரளவுக்கு சரியாகி மகனின் முதலாவது பிறந்தநாள் கேக் வெட்டி அக்கம் பக்கம் உறவினர்களுக்கு விருந்தளித்து என்று சிறப்பாகவே நடந்தது. மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மறுநாள் வரவிருந்த என்னுடைய பிறந்தநாளை மறந்திருந்தேன். அன்றிரவு அப்பா என்னுடைய பிறந்தநாளுக்கு கேக் ஆர்டர் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் . இந்த அப்பாக்களுக்கு தன்னுடைய பிள்ளைகள்தான் எவ்வளவு உசத்தி?

பதினைந்துநாட்கள் பதினைந்து நிமிடங்களாக கரைந்து விடுமுறை முடிந்தது. மகனை குடும்பத்தினரை பிரிந்து மீண்டும் மஸ்கட் வந்தாயிற்று. விமானசெலவு ஊரில் இருந்தபொழுது வந்தசெலவு புத்தாடைகள் செலவு என அறுபதாயிரங்கள் பஞ்சாய் பறந்தாலும் குடும்பத்துடன் இருந்த மகிழ்ச்சியை எத்தனை ஆயிரங்கள் இருந்தாலும் பெறமுடியாது இல்லையா?

ஆண்டிறுதியில் சிலருக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் என்னுடைய அருகாமையை தவறவிடும் மகனுக்கும் , பெற்றோர்களுக்கும்,  என்னை பிரிந்து இருக்கவேண்டிய சூழலில் பல்லைக்கடித்துக்கொண்டு நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கும் மனைவிக்கும், வேலையிடத்தில் கிடைத்த புதிய மேனேஜருக்கும் , மற்றும் நண்பர்கள் சிலருக்கும் , இவர்களை எனக்கு கொடுத்த இறைவனுக்கும் மிக்க நன்றி.

ஆகவே இந்த புதியவருடத்தில் இருந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் இருக்க என்ன வழிகளோ அந்த வழிகளின் திறவுகோல்களை கண்டுபிடித்துவிட்டேன் . திறப்புவிழாவுக்கு நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

ஆண்டிறுதி மிக மகிழ்ச்சியாக முடிவடைகிறது. வரும் 2014ம்ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும் , நல்ல உடல் நலத்தையும் தரவேண்டும் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்.நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ப்ரியமுடன் வசந்த்

மகனின் சில படங்கள் 




மகனின் பிறந்தநாள் புகைப்படங்கள்





 மகனின் காலில் பெயிண்ட் செய்து அதை பட்டாம்பூச்சியாய் உலவவிட்டது 




என்னுடைய பிறந்தநாள் புகைப்படங்கள்





சாப்பாட்டு ரா......




என்னுடைய வீட்டில்




April 2, 2012

தாழம்பூ

திருமணம் 

கடந்த மாதம் நடந்த என்னுடைய திருமணம் சொந்தபந்தங்கள் , நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. பதிவுலகின் எஸ்ரா என்றழைக்கப்படும் நண்பர் கார்த்திகைபாண்டியன் நேரில் வந்திருந்து வாழ்த்தினார். ஏனைய நண்பர்கள் தொலைபேசியிலும் மெயிலிலும் முகப்புத்தகத்திலும் வாழ்த்தினார்கள் . தோழி ரேவதி தன் வலையில் பதிவொன்றிட்டு தன் அன்பினை வெளிப்படுத்தினார். அவருக்கும் வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் தேனி மற்றும் ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டர்கள் , தேனி டி எஸ் பி , ஆண்டிபட்டி டி எஸ் பி , கோவில்பட்டி டி எஸ் பி மற்றும் ஏராளமான காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு திருமணத்தை சிறப்பித்தனர் . மேலும் கவிஞர் ஞானபாரதி அவர்களும் கலந்து கொண்டு திருமணத்தை சிறப்பித்தார்.



மாங்கல்யம் தந்துனானே.... 





என்னுடைய நட்புகள்....


கார்த்திகேய பாண்டியனுடன்..




அப்பா மற்றும் உறவினர்கள் எவ்வளவோ சொல்லியும் திருமணத்திற்க்கு கோட் சூட் அணிந்து கொள்ளவில்லை ..எனக்கு பட்டுவேஷ்டி பட்டுசட்டை அணிந்திருப்பதே பிடித்திருந்தது...


திருமணம் முடிந்து வேறொரு நாள் வைகை அணைக்கு சென்றிருந்த பொழுது எடுத்த புகைப்படம்..


ஜோவின் கலைத்திறன்...

நான் சொல்லித்தருகிறேன் கவிதை எழுதிப்பழகு என்றேன் ஒருமுறை, இன்னொருமுறை இல்லை இல்லை நீயே என் மீதான காதலில் கவிதை எழுதிவிடுவாய் என்றேன் இரண்டையும் வைத்து கார்ட்டூன் ஒன்று வரைந்திருக்கிறாள்


என்னை மாதிரி வரைந்தாளாம் அவ்வ்...


முதன்முறை அவளைப்பார்க்க அவள் ஊருக்கு சென்றபொழுது கிளியூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற வாசகத்துடன் கூடிய அவளே செய்த பொக்கேவை கொடுத்தாள்.. கிளியூர்ன்னா என்னாவாம்?கிளியூர் படிச்சீங்கன்னா புரியும்..


திருமணத்திற்க்கு பிறகொரு நாள் நான் தூங்கி கொண்டிருந்த பொழுது என் கையில் POOH கார்ட்டூனை வரைந்திருக்கிறாள். உடலிலும் முகத்திலும் ஓவியம் வரையும் கலையும் கற்றிருக்கிறாள்.இந்த கார்ட்டூனை பற்றி தெரியாதவர்கள் இந்த பதிவை படித்திடலாம்... என்ன பார்க்குறீங்க? ஆமா ஆமா பெட் கவர்லயும் அந்த கார்ட்டூன்தான் அவ்வ்வ் ...


திருமணத்திற்க்கு முதல்நாள் ஃபேசியல் பண்ணும்போது எடுத்தது த்ருஷ்டிக்கு ஹிஹிஹி...பயந்துடாதீக...



ப்ரியமுடன் வசந்த்..


November 28, 2011

Cast Away - ஒரு பார்வை

அப்பாவின் அறிமுகத்தின் பேரில் பார்த்த திரைப்படம் Cast Away இந்த உலகில் சில மனிதர்களுக்கு தனிமை மிகவும் பிடித்த விஷயமாக இருக்கலாம் பலருக்கு தனிமையில் இருப்பது வெறுமையாகவும் தோன்றும் . தமிழில் தனிமையிலே இனிமை காணமுடியுமா? என்ற பாடல் கூட இருக்கிறது. சிலரால் ஒரு ஐந்து நிமிடம் யாரிடமாவது பேசாவிட்டால் எதையோ இழந்ததைப்போல் இருப்பார்கள் ஐந்து நிமிடத்துக்கே இப்படியென்றால் ஒருவன் மனிதர்கள் இல்லாத தீவில் தன் வாழ்நாளின் நான்கு வருடங்களை கழிக்கிறான். எப்படி அவன் நான்கு வருடங்கள் வெளி உலகத்தோடு எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் அந்தத்தீவில் கழிக்கிறான் என்பதுதான் இத்திரைப்படம்.


ஹாலிவுட் அகாடமி அவார்டான ஆஸ்கார் இரண்டு முறை வென்ற நாயகன் தி கிரேட் Tom Hanks இதில் நடிகராக நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வதே சரி.  ஒரு நான்கு வழிச்சாலையில்தான் படம் ஆரம்பிக்கிறது. நாயகன் Tom Hanks FedEX கூரியர் நிறுவனத்தில் எக்ஸ்கியூட்டிவாக பணி புரிகிறார். தன்னுடைய அலுவலகத்தில் எல்லாமே குறித்த நேரத்தில் நடைபெறவேண்டும், நேரமும் டைம் மேனேஜ்மெண்டும் முக்கியமானது என்று சொல்பவர். தன் காதல் மனைவியுடன் காதலாக வாழ்க்கை வாழ்பவர். ஒரு முறை தன் அலுவலக கூரியர்களுடன் தானும் விமானத்தில் பயணம் செய்கிறார் பயணத்தின் போது விமானம் விபத்தில் சிக்கி நடுக்கடலில் விழுகிறது விமானத்தில் பயணம் செய்த ஒருவரும் உயிர்தப்பவில்லை Tom Hanksஐ தவிர.விமானத்தில் அவசரகாலத்தில் தப்பிப்பதற்க்காக இருக்கும் மிதவையின் மூலம் ஒரு குட்டித்தீவினை அடைகிறார் Tom Hanks. அந்த தீவின் அந்த விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த சில கூரியர் பார்சல்களும் அவருடன் கரையேறுகின்றன.

அந்த தீவில் Tom Hanksஐ தவிர வேறு மனிதர்களே இல்லை மேலும் அந்தத்தீவொன்றும் கப்பல்கள் பயணப்பாதையிலும் இருக்கவில்லை வெளி உலகத்துடன் தொடர்புகொள்ள எந்த ஒரு வசதியும் இல்லை ஆனால் Tom Hanksசிடம் தன்னம்பிக்கை மட்டும் இருந்தது. தான் தப்பித்து வந்து மிதவையின் மூலமே திரும்ப கடலில் பயணிக்க முயற்சிக்கிறார் ஹும் பெரிய பெரிய அலைகளின் ஆர்ப்பாட்டத்தில் அந்த மிதவை தொடங்கிய இடத்திற்க்கே மீண்டும் வருகிறது Tom Hanks சோர்வடைகிறார் மீண்டும் மீண்டும் அங்கிருந்து தப்பிப்பதற்க்கு பல முயற்சிகள் எடுத்தும் அத்தனையும் தோல்வியடைகிறது. சுற்றிலும் கடல் நீர் இருந்தாலும் குடிப்பதற்க்கு கடல் நீரையா குடிக்க முடியும் ? அந்த தீவில் கிடைக்கும் தேங்காயை சாப்பிட்டு தேங்காய் நீரை குடித்து நாட்களை நகற்றுகிறார். வயிற்றுப்பசிக்கு கடல் மீன்களை பிடித்து தின்கிறார். இலைகளில் படிந்திருக்கும் மழை நீரை தேங்காய் ஓடிற்க்குள் சேகரித்து குடிக்கிறார் . எப்படியோ அந்த தீவில் அவர் வாழப்பழகிக்கொண்டார் எப்படியும் தான் தன்னிருப்பிடத்திற்க்கு திரும்பிவிடுவோம் தன் காதல் மனைவியை காண்போம் என்ற நம்பிக்கை அவரை விட்டு அகலவில்லை .



தன்னுடன் கொண்டுவந்திருந்த கடிகாரத்தில் இருக்கும் மனைவியின் புகைப்படத்தை பார்த்து சோகம் கொள்கிறார். நெருப்பை உருவாக்க மிகப்பிராயசப்படுகிறார் அப்படி ஒரு முறை முயற்சி செய்யும்பொழுது கையில் சதை கீறி இரத்தம் பீய்ச்சுகிறது வலிதாங்கமுடியாமல் தன்னுடன் கரையேறிய பார்சலில் இருக்கும் வாலிபாலை தூக்கியெறிகிறார். அடுத்தமுறை நெருப்பை உருவாக்கிவிட்டு ஐ மேட் ஃபயர் என்று சொல்லி ஆனந்தப்படுகிறார். அவரின் இரத்தக்கறை பட்டு தூக்கியெறியப்பட்ட வாலிபாலை காண்கிறார் அவருக்கு அது மனித முகத்தை ஞாபகப்படுத்துகிறது . அதை அந்த வாலிபால் தயாரித்த நிறுவனத்தின் பெயரான வில்சன் என்ற பெயராலே அழைக்கிறார் அதனுடன் பேசுகிறார் விவாதம் செய்கிறார் சண்டையில் தூக்கியெறிந்துவிடுகிறார் பிறகு தேடிக்கண்டுபிடித்து தன்னுடன் மீண்டும் வைத்துக்கொள்கிறார் . இப்படி ஆளில்லாத தீவில் அந்த வாலிபால் அவருக்கு சிறந்த நண்பனாக இருக்கிறது.





இப்படியாக நான்கு ஆண்டுகள் கழிந்திருக்கையில் ஏதோ ஒரு விபத்து ஏற்பட்டு அதன் மூலம் அந்தக்கரையை வந்தடைந்த ஒரு பிளாஸ்டிக் கூரையினை பார்க்கிறார் , மரங்களாலான ஒரு படகு தயாரிக்கிறார்.காற்று வீசும் திசை தனக்கு சாதகமான நாட்களுக்காக காத்திருக்கிறார் அப்படி ஒரு நாள் வந்ததும் அந்த தீவை விட்டு தப்பிக்கிறார் தன் நண்பன் வில்சனுடன். அப்படி கடலில் மிதந்து வரும் வழியில் புயல் காற்று காரணமாக வில்சனை பறிகொடுத்துவிட்டு அவர் அழும் காட்சி நம்மையே அழ வைக்கிறது. எப்படியோ Tom Hanks தன்னுடைய இருப்பிடத்திற்க்கு திரும்புகிறார்.

மீண்டு வந்த Tom Hanksற்க்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. தான் இறந்துபோய்விட்டதாக நினைத்து தன் காதல் மனைவி இன்னொரு திருமணம் புரிந்து வேறொரு கணவர் குழந்தையுடன் வாழ்ந்துவருவதை கண்டதும் உடைந்து போகிறார். அந்த சமயத்தில் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் அவருடன் இருக்கிறார்கள் ஆனால் தனிமையில் இருப்பதைப்போல உணர்கிறார். தான் திரும்பி வந்துவிட்டதற்க்காக தரப்பட்ட விருந்துபசரிப்பில் மீந்து போன உணவுகளைப்பார்த்து சிரிக்கிறார் . படத்தை எந்த நான்கு வழிச்சாலையில் ஆரம்பித்தார்களோ அதே நான்கு வழிச்சாலையில் முடித்து முடிவை நம் பார்வைக்கு விட்டுவிடுகிறார்கள். நிஜத்தில் தன்னுடன் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் இருந்தும் யாருமே இல்லாதது போன்று கைவிடப்பட்ட நிலைதான் இந்த Cast Away.

கண்டிப்பாய் பார்க்கவேண்டிய திரைப்படம்.

படம் வெளிவந்த வருடம் - 2000

பி.கு. வில்சனைப்போலவே இதுவரை என்னுடைய கருத்துக்கள் நினைவுகள் மொக்கைகள் அத்தனையையும் பகிர்ந்து கொண்டதாலும் என் தனிமையை போக்கியதாலும் என்னுடைய பிளாக் டிஸ்க்ரிப்சனை ப்ரியமுடன் வசந்த் aka wilson என்று மாற்றியதோடு மட்டுமில்லாமல் இதுவரை சுணங்கியிருந்த பதிவிடுதலை என் வருங்கால மனைவி கொடுத்த உற்சாகத்தின் பேரில் அவர்களுக்காகவே என் மனதில் தோன்றிய அத்தனை விஷயங்களையும் தினமும் ஒன்றாக முடியாவிடினும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இனி பதிவுகள் இடப்போகின்றேன் கமெண்ட்ஸ்களுக்காகவோ ஹிட்ஸ்களுக்காகவோ அல்ல அல்ல அல்ல....இதுவரை ரீடரில் தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களுக்கும் கமெண்ட்ஸ் இட்ட நண்பர்களுக்கும் நன்றி.