August 9, 2009

சொர்கத்துக்கு ஒருகடிதம்

அனுப்புநர்

வசந்தகுமார்

நரகம் , பூமியிலிருந்து,

பெறுநர்

என் தங்கை

சொர்க்கம்,வானில்.

அன்பு தங்கைக்கு பாசமுள்ள? சகோதரன் வசந்த் எழுதுவது...

என்னவென்றால் இங்கு நான்,நம் அப்பா அம்மா அனைவரும் நலம் அது போல் அங்கு நீ நம் பாட்டைய்யா,அப்பத்தா,தாத்தா,மாமா அனைவர் நலம் அறிய ஆவல்.(இவர்களும் உன்னுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்)

பிறந்து 25 நாளில் இறந்த நீ கண்டிப்பா சொர்கத்துக்குத்தான் சென்றிருப்பாய் என்ற நம்பிக்கையுடன் சொர்கத்திற்க்கு இக்கடிதத்தை அஞ்சலிடுகிறேன்.

அளவற்ற தாய்பாசம்,அன்பான தந்தையின் நேசம் இவற்றை விட்டு சீக்கிரம் உன்னை தன்னோடு அழைத்துக்கொண்ட அந்த கடவுளை நான் சாடுகிறேன்.தீயை விட மோசமான பெண்ணிய தீண்டுதல்கள் புரியும் கயவர்களையும்,கூடவே இருந்து குழி பறிக்கும் பச்சோந்திகளையும்,காட்டிக்கொடுக்கும் கபடதாரிகளையும்,தாயையும்,தந்தையயும் தவிக்கவிடும் நன்றிகெட்டவர்களையும்,சொத்துக்காக உடன்பிறந்தவர்களை சாகடிக்கும் பேராசைபிடித்த பேய்களையும்,கைம்பெண்ணை ஏசும் கருநாக்கு பாம்புகளையும்,என்போல் வெளிநாடு வந்திருக்கும் சகோதரர்களின் மனைவிகளை தவறான் நோக்கில் அணுகும் மண்ணுலிபாம்புகளையும் விட்டு விட்டு உன் போல் ஒன்றுமறியா பச்சிளம் குழந்தையை தன்னுடன் சேர்த்துக்கொள்ள எப்படி அந்த கடவுளுக்கு மனசு வந்தது?

நான் தாய்மாமன் சீர் கொடுக்கமுடியவில்லை,சின்ன சின்ன செல்ல சண்டைகள் போடவும் கொடுத்துவைக்கவில்லை,நான் அணிந்த சட்டையை நீ அணிந்து நான் பார்க்கும் பாக்கியமில்லை,உனக்கு மாப்பிள்ளை பார்க்கும் சந்தர்ப்பமும் இல்லை,உனக்காக ஆபரணங்கள் சேர்க்கமுடியவில்லை,கல்லூரிக்கு ஆசையாய் என்னுடைய பைக்கில் கூட்டிப்போகும் சந்தர்ப்பம் இல்லை,எனக்கு வரப்போகும் மனைவிக்கு செல்லமாய் கிண்டல்களும், சண்டையும் போடும் நாத்தனார் இல்லை,உனக்கு பிறக்கும் குழந்தையை தோளில் போட்டு சுமக்கும் பாக்கியம் இல்லை,மச்சினன் உறவு கிடைக்கவில்லை,எல்லாத்துக்கும் மேல எனக்கு பாசம் காட்ட அப்பா அம்மாவ தவிர்த்து யாருமில்லை.

ஒருவேளை போலி பாசங்கள் வேண்டாமென்று ஒதுங்கிவிட்டாயா? நாம் இருவர்நமக்கு ஒருவர் என்ற அரசு விளம்பரம் உனக்கு 22 வருடங்களுக்கு முன்பே தெரிந்துவிட்டதா? இல்லை கொடுக்கமுடியாத வரதட்ச்சணை கேட்க்கும் வரன்கள் உனக்கு கிடைத்து அது தந்தையால் கொடுக்க முடியாமல் போய்விடுமென்றெண்ணி மூச்சை அடக்கி கொண்டாயா?பெரியவளாகி பேருந்தில் சென்றால் இடிமன்னர்களின் இம்சை வருமென்றெண்ணி இடிந்துவிட்டாயா?கணவன் வீட்டுக்கு சென்றால் மாமனார் மாமியார் கொடுமைக்கு ஆளாக வேண்டுமென்றெண்ணிவிட்டாயா?

நீயிருந்திருந்தால் எனக்கு தெரியாமல் என் டயரியையாவது படித்திருப்பாய்,அதிலிருக்கும் என் கவிதைகளுக்கு முதல் வாசகியாயிருப்பாய்.நீயிருந்திருந்தால் போலியில்லா பாசம் எனக்கு கிடைத்திருக்கும்,அன்பில்லாமல் அன்னிய தேசத்திலிருக்கும் என்னை அடிக்கடி தொலைபேசியில் விசாரிக்கும் அன்பு கிடைத்திருக்கும் உனக்காக நிறைய பரிசுப்பொருள்கள் வாங்கியிருப்பேன்.நீயிருந்திருந்தால் அண்டை அயலவர் உற்றார் உறவினர்களிடம் ஒத்தக்குரங்கு என்று பெயர் வாங்கியிருக்கமாட்டேன் அத்தனையும் வெறும் நனவாகவே போய்விட்டது.

சகோதரி நான் உன்னை நினைக்கும் இவ்வேளையில் நீயும் என்னை நினைத்துகொண்டிருப்பாய் என்றெண்ணுகிறேன்,அங்கு உனக்கு எவ்வித தீங்கும் ஏற்படாமலிருக்கும் என்றெண்ணுகிறேன் ஏனென்றால் அங்கு இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களே.கண்டிப்பாக அங்கு வாழும் அன்னை தெரேசா,காந்திஜி,நேரு,ஆகியோரை நல்ம் விசாரித்ததாக கூறவும்.கண்டிப்பாக நான் சொர்கத்திற்க்கு வரும் பாக்கியம் எனக்கு இல்லை.மறுபிறவியென்று ஒன்று இருந்தால் சகோதரியாய் சந்தோசப்படவில்லை நீ ஆனால் நீ எனக்கு மகளாகவாவது பிறந்து நீயிழந்த சந்தோஷங்களை பெற்றுக்கொள்ள உன்னை மிகவும் அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

இவண் உன் பாசத்திற்க்கும் நேசத்திற்க்குமுரிய சகோதரன்

பிரியமுடன்...வசந்த்.




41 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நெகிழ்வான பதிவு வசந்த். உங்கள் தங்கை கடவுள் பக்கத்தில் இருப்பாள். நம்புங்கள்.
ஒருசிலர் தான் அத்தனை பாக்கியம் பெற்றவர்கள். வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை . மனதைப் பிசைந்து விட்டீர்கள்.

Anonymous said...

//ஒருவேளை போலி பாசங்கள் வேண்டாமென்று ஒதுங்கிவிட்டாயா? //

என்ன இப்படி சொல்லீட்டீங்க. இது போலி பாசமா, மனதைத்தொடும் பதிவு

sakthi said...

ஆனால் நீ எனக்கு மகளாகவாவது பிறந்து நீயிழந்த சந்தோஷங்களை பெற்றுக்கொள்ள உன்னை மிகவும் அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

வசந்த் என் மனதை நெகிழ வைத்த பதிவு

Admin said...

ஒரு வித்தியாசமான இடுகையாக இருந்தாலும் நிறையவே சிந்திக்க வைத்துவிட்டது வசந்த்..... சிந்திக்க வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றது..

நட்புடன் ஜமால் said...

நெகிழவைத்து விட்டீர்கள் வசந்த்.

ரொம்ப ரொம்ப ...

சரவணகுமரன் said...

நெகிழ்வான கடிதம்

ஜெட்லி... said...

கடிதத்தை படிக்கும் போது ஒரு ஒரு வரியும் மனதை
ஏதோ செய்தது.... சொல்ல வார்த்தைகள் இல்லை....

M.Thevesh said...

உங்கள் கடிதம் என்நெஞ்சை
உருக்கி விட்டன.

VISA said...

நெகிழ்வான பதிவு. உங்கள் ஏக்கங்களிலும் கவலைகளிலும் நாங்களும் பங்கு கொள்கிறோம்.

சரி இதென்ன நீங்களே முடிவு பண்ணிட்டீங்க.....?

//
கண்டிப்பாக நான் சொர்கத்திற்க்கு வரும் பாக்கியம் எனக்கு இல்லை.
//

Anonymous said...

போடா அழவச்சிட்ட!!! அன்பைச் சொல்ல யாருமில்லை எனச் சொல்லாதே நானிருக்கேன்.. உன் சகோதரி இடத்தை என்னால் பூர்த்தி செய்ய இயலாது தான்..இருந்தாலும் உனக்கினி நானிருக்கேன்...தாயாய் சகோதரியாய் மகளாய் தோழியாய்.... இத்தனை அன்பை மனதில் சுமக்கும் உன் இதயமும் ஒரு சொர்கம் தான்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

வழக்கம் போல வாழ்த்த முடியவில்லை... மனம் கனக்கிறது.. வார்ததையை கொண்டு நிரப்ப முடியவில்லை.. ஆகவே மௌனமாய் ....

ஈரோடு கதிர் said...

//நரகம் , பூமியிலிருந்து,//

பூமி என போட்டாலே அது நரகம் தானே


//பிறந்து 25 நாளில் இறந்த நீ கண்டிப்பா சொர்கத்துக்குத்தான் சென்றிருப்பாய்//

ம்ம்ம்ம்


//அந்த கடவுளை நான் சாடுகிறேன்.//

இப்படி அநியாயம் செய்பவன் கடவுளா!!!

//மண்ணுலிபாம்புகளையும்//

அது என்ன மண்ணுலிபாம்போடு உவமை

//அந்த கடவுளுக்கு மனசு வந்தது?//
அநியாயம் புரிபவர்களை விடுத்து பச்சிளம் குழந்தையை கொன்றவனை கடவுள் என்று எப்ப்டி அழைக்க!!!


//நான் தாய்மாமன் சீர் கொடுக்கமுடியவில்லை,சின்ன சின்ன செல்ல சண்டைகள் போடவும் கொடுத்துவைக்கவில்லை,நான் அணிந்த சட்டையை நீ அணிந்து நான் பார்க்கும் பாக்கியமில்லை,உனக்கு மாப்பிள்ளை பார்க்கும் சந்தர்ப்பமும் இல்லை,உனக்காக ஆபரணங்கள் சேர்க்கமுடியவில்லை,கல்லூரிக்கு ஆசையாய் என்னுடைய பைக்கில் கூட்டிப்போகும் சந்தர்ப்பம் இல்லை,எனக்கு வரப்போகும் மனைவிக்கு செல்லமாய் கிண்டல்களும், சண்டையும் போடும் நாத்தனார் இல்லை,உனக்கு பிறக்கும் குழந்தையை தோளில் போட்டு சுமக்கும் பாக்கியம் இல்லை,மச்சினன் உறவு கிடைக்கவில்லை,எல்லாத்துக்கும் மேல எனக்கு பாசம் காட்ட அப்பா அம்மாவ தவிர்த்து யாருமில்லை.//

நெஞ்சை அடைக்கும் கவிதை வரியடா நண்பா


//ஒருவேளை போலி பாசங்கள் வேண்டாமென்று ஒதுங்கிவிட்டாயா?//

இதில் கொஞ்சம் முரண்படுகிறேன்


//நீயிருந்திருந்தால் நான் சிகரெட் பிடிப்பதை அப்பாவிடம் கூறி அடிவாங்கியாவது சிகரெட் பிடிப்பதை நிறுத்தியிருப்பேன் இல்லையேல் உன் பாசத்திற்க்காகவாவது நிறுத்தியிருப்பேன்,நீயிருந்திருந்தால் எனக்கு தெரியாமல் என் டயரியையாவது படித்திருப்பாய்,அதிலிருக்கும் என் கவிதைகளுக்கு முதல் வாசகியாயிருப்பாய்.//

உருக்கமான ஏக்கம் தான்



//நீயிருந்திருந்தால் அண்டை அயலவர் உற்றார் உறவினர்களிடம் ஒத்தக்குரங்கு என்று பெயர் வாங்கியிருக்கமாட்டேன்//

அய்யோ!!!

//கண்டிப்பாக நான் சொர்கத்திற்க்கு வரும் பாக்கியம் எனக்கு இல்லை.//

ஏன் ராசா!

வசந்த் மிக உருக்கமான, நேசம் மிகுந்த பதிவு, சில நையாண்டிகளுடன்

யோ வொய்ஸ் (யோகா) said...

எனக்கும் ஒரு தங்கை இல்லை, உங்கள் பதிவை பார்த்த பின் அந்த கவலை ரொம்பவே அதிகரித்துவிட்டது.
சிறப்பான பதிவு..

S.A. நவாஸுதீன் said...

வசந்த், கலங்கிய கண்களுடன் என்னால் கூடுதலாக விமர்சிக்க முடியவில்லை. ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு நண்பா.

SUFFIX said...

என்ன சொல்வதுன்னு தெரியவில்லை வஸ்ந்த்!! நெகிழ்வான கடிதம், உங்கள் பாசத்திற்க்குரிய நண்பர்கள் நாங்கள் இருக்கின்றோம்.

கார்த்திக் said...

மனம் நெகிழ்ந்தேன்..

Beski said...

தங்கை இல்லாத வருத்தம் எனக்கும் உண்டு வசந்த்.

ரொம்ப நெகிழ்ச்சியா எழுதியிருக்கீங்க.

யாழினி said...

வசந்த் மனதை கனக்க வைத்து விட்டீர்கள். எவ்வளவு பாசமான அண்ணா நீங்கள். வசந்த் கவலைப் படாதீர்கள் நிட்சயமாக உங்கள் தந்தை கடவுள் பக்கத்தில் தான் இருப்பார். உங்களுக்கும் நிட்சயமாக நல்லாசிகள் கிடைக்கும் வசந்த்.

லோகு said...

நெகிழ்ச்சியான பதிவு வசந்த்... இழப்பின் வலி ரொம்ப கொடுமையானது.. உங்கள் தங்கை உங்களுக்கு மகளாக பிறக்க கடவுள் ஆசீர்வதிக்கட்டும்..

. said...

பதிவு எப்பவும் போல நல்லா எழுதி இருக்கீங்க அண்ணா நீங்க... ஆனா, அத படிச்சது லேருந்து என் மனசு தான் கனமா இருக்குது!
வேற என்ன சொல்றதுன்னு தெரியலைண்ணா எனக்கு... நடந்ததுக்கு வருத்தமா இருக்கு... உங்க தங்கையளவுக்கு என்னால ஈடு கட்ட முடியலைன்னாலும், நானும் உங்க தங்கை தான்.. மறந்துடாதீங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

மனதை நெகிழ வைத்த பதிவு

அப்துல்மாலிக் said...

வஸந்த் நெகிழவைத்துவிட்டீர்

இது மாதிரி எத்தனையோ பேர் பாசக்காரர்களை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு இந்த பதிவுஒரு ஆறுதல்

உங்க பாசத்தில் நானும் பங்கு எடுத்துக்கொள்கிறேன்

ராமலக்ஷ்மி said...

உருக்கம். நிச்சயம் மகளாக வந்து பிறப்பாள் தங்கை!

sarathy said...

// நீ எனக்கு மகளாகவாவது பிறந்து நீயிழந்த சந்தோஷங்களை பெற்றுக்கொள்ள உன்னை மிகவும் அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் //

நிச்சயம் உங்கள் தங்கை, தங்களின் மடிசேர்வார் நன்மகளாய்...

கலையரசன் said...

இதுவும் ஒரு வித்தியாச பதிவுதான்...

:-(

அத்திரி said...

வரிக்கு வரி நெகிழ்ந்துவிட்டேன்.......வசந்த்

அன்புடன் அருணா said...

இதயம் பிழியும் சோகத்தைப் பதிந்திருக்கிறீர்கள் வசந்த்.

Unknown said...

அழுத்தமான பதிவு...இவ்வளவு பாசம் காட்டும் அண்ணன் எனக்கும் இல்லையே என்ற ஏக்கத்தை தவிர்க்க முடியவில்லை!!!

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி ஜெஸ்வந்தி
நன்றி சின்ன அம்மிணி
நன்றி சக்தி அக்கா
நன்றி சந்ரு
நன்றி ஜமால் அண்ணா
நன்றி சரவணகுமரன்
நன்றி ஜெட்லி
நன்றி தெவெஷ்
நன்றி விசா
நன்றி தமிழரசி
நன்றி ராஜ்
நன்றி கதிர்
நன்றி யோ
நன்றி நவாஸ்
நன்றி ஷஃபி
நன்றி கார்த்திக்
நன்றி யாழினி
நன்றி லோகு
நன்றி ப்ரியா
நன்றி கார்த்திகேய பாண்டியன்
நன்றி அபு
நன்றி ராமலஷ்மி மேம்
நன்றி சாரதி
நன்றி கலை
நன்றி அத்திரி
நன்றி அருணா
நன்றி தாமரை செல்வி

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி எவனோ ஒருவன்

சுசி said...

வசந்த்.. நான் உங்க நண்பி மட்டுமில்ல சகோதரியும்தான். இவ்ளோ ஆழமா அதையும் விளையாட்டா எழுதி எல்லாரையும் ஏங்க வச்சிட்டீங்க.

Menaga Sathia said...

நெகிழ்வான பதிவு வசந்த்,படிக்கும் போது கண்ணில் நீர் வந்துடுச்சு.உங்கள் தங்கை எப்பவும் உங்க கூடவே இருப்பாங்க அவ்வளவு ஏன் உங்கள் மகளாகவே பிறப்பாங்க.என்னையும் உங்க சகோதரியா நினைத்துக்குங்க..இதுக்கு பேல் என்ன எழுதறதுன்னு தெரியல....

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி சுசி

நன்றி மேனகாசத்யா

சுரேகா.. said...

:(

வார்த்தைகள் தோன்றவில்லை நண்பரே!
மனம் கனக்கிறது!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கவலைப்படாதீர்கள் நண்பா. எங்கிருந்தாலும் உங்கள் தங்கை உங்களை பார்த்துக்கொண்டு ஆசிர்வதித்து கொண்டுதான் இருப்பார்.

Krishh said...

Nanbha vasanth... Enakku blogs padikkum pazakkam ippodhudaan vanthadhu...padithathil piditha blog ungaludayadhu....un thavippu un varthaigalil kandaien...kalakkam kollathe...

krishna

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி சுரேகா

நன்றி ரமேஷ்

நன்றி கோபாலகிருஷ்ணன்

Kavinaya said...

//உருக்கம். நிச்சயம் மகளாக வந்து பிறப்பாள் தங்கை!//

வழிமொழிகிறேன்!

"உழவன்" "Uzhavan" said...

கடிதமா எழுதி கலக்குறீங்க

கண்ணகி said...

கலங்க வைத்துவிட்டாய் வசந்த்.நீ என் மகன். என் மகன் உனக்கும் சகோதரன். என் மகள் உனக்கு சகொதரி. உறவுகள் ஆயிரம் உள்ளது. வருந்ததே

iniyavan said...

வசந்த்,

காலையிலேயே என் கண்களை கலங்க வைத்து விட்டாய்.

உன் தங்கை இறந்தது 25 நாளில். என் தங்கை இறந்தது 25 வயதில்.

இதற்கு மேல் இங்கு இப்போது என்னால் எதுவும் எழுத முடியவில்லை.