December 28, 2010

வளந்த வெதம் அப்டி...!



பிள்ளையாரப்பா எனக்கு நல்லா பேச கத்து கொடுத்த...சிரிக்க கத்து கொடுத்த...கவிதை எழுத கத்து கொடுத்த இந்த காதல் பண்றது எப்டின்னு கத்து கொடுக்க மறந்துட்டியே பிள்ளையாரப்பா...(வேட்டைக்காரன்ல இந்த மாதிரி ஒரு சீன்லதான் தலைவரு சும்மா நச்சுன்னு டயலாக் டெலிவரியில இருந்து பாடி லாங்குவேஜ் வரைக்கும் பின்னிட்டாரு )அதான் நானும் சொல்லிப்பாத்தேன்...

எம்புட்டுபேரை சைட்டடிச்சுருக்கேன் சின்னவயசுல இருந்து இப்போ வரைக்கும் ம்ஹ்ஹும்...ஒண்ணு கூட செட் ஆவலை ஹா ஹா ஹா ஒண்ணாவது படிக்கும் போது கொண்டை போட்ட மேரி டீச்சர்மேல ஆசை, ஏன்னா என்னைய பிடிக்கும் அவங்களுக்கு முதன் முதல்லா நம்ம ஊர் எம்.இ.எல்.ஐ. எம். இந்த ஸ்கூலுக்கு போயி சேர்ந்ததில இருந்துன்னு வச்சுக்கோயேன் ஆமா பக்கத்துலதான் நீயும் இருந்து என்னைய வாட்ச் பண்ணிட்டே இருந்தியே அந்த ஸ்கூல்தான்...

ஸ்கூல்ல வாத்தியார் எல்லாம் நல்லாத்தான் சொல்லி கொடுப்பாங்க ஆனா நாந்தான் மரமண்டையாச்சே ம்ஹ்ஹும் ஒண்ணுகூட மண்டையில ஏறலை இதே டிசம்பர் மாசம் 1987ல 5வதுபிறந்த நாள் வந்தப்போ ஒண்ணாப்பு டீச்சர் மேரி என்னைய மடியில தூக்கிவச்சு கிஸ் பண்ணி ஹேப்பி பர்த்டே சொன்னாங்க. அப்போ இன்னும் பாசம் அதிகமாயிடுச்சு அதனாலவோ என்னவோ அடுத்த வருசத்தில இருந்து இன்னி வரைக்கும் அவங்கள பார்க்க முடியல ம் இப்போவும் சொல்றேன் ஐ லவ் யூ மேரி டீச்சர்...

அடுத்த வருசம் ரெண்டாப்புக்கு போனேன் எப்படியோ பாசாக்கி விட்டுட்டாங்க எப்படின்னு இன்னி வரைக்கும் எனக்கே தெரியல நீதான் காரணம்ன்னு நினைக்கிறேன் பின்ன தினமும் உன்னை வந்து பார்த்துட்டு தானே ஸ்கூலுக்கு போறது இதுகூட செய்யமாட்டியா என்ன? ஆங் அந்த ரெண்டாவது வகுப்பு இன்னும் ஞாபகமிருக்கு இருட்டா பயமா இருக்கும் பின்னாடி முள் காடு வேற அந்த பக்கம் ஒரு ஜென்னலு ரெண்டாப்பையும் மூணாப்பையும் மறைக்க ஒரு உடைஞ்சு போன தட்டி, கோடு விழுந்து வருசத்துக்கு ஒரு நாள் புதுசா பெயிண்ட் அடிக்கிற ப்லாக்போர்டு , ப்லாக் போர்ட் வலதுபக்க மேல் மூலையில கலர் கலர் சாக் பீஸ்ல எழுதியிருந்த வருகை நிலவரம் இன்னும் ஞாபக மிருக்கு ரூபி டீச்சர்தான் கிளாஸ் டீச்சர் , ரூபி டீச்சரும் நல்லவங்கதான் ஆனா அவங்க மேல ரெஸ்பெக்ட்தான் வந்திச்சு பாசம் வரலை..கால் பரிட்சை அரைபரிட்சை முழுப்பரிட்சை இதெல்லாம் எதுக்குன்னு கூட தெரியாம படிச்சுகிட்டு இருந்தேன் ம்ஹும் ஸ்கூலுக்கு போயிட்டு வந்துட்டு இருந்தேன்

ஆமா அங்க போய் அந்த ஸ்கூல்ல இருக்குற மரத்தை சுத்தி சுத்தி ஓடி விளையாடவும் பொன்னம்மா கடையில விக்கிற கேசரி வாங்கித்தின்னவும் கொடிக்காரம் வாங்கித்தின்னவும் மட்டும்தான் ஸ்கூலுக்கு போனேன்...ம் தின்னிப்பயலா இருந்திருக்கியேடான்னு நீ சொல்றது எனக்கு கேக்குது பிள்ளையாரப்பா நீ மட்டும் என்னவாம் தினமும் வாழைப்பழம் கொழுக்கட்டை அது இதுன்னு தின்னுட்டு வயித்த வளர்த்து வச்சுருக்கதான அப்பறமென்ன?

சொல்ல வந்தது விட்டுட்டு எங்கயோ போயிட்டேன் முழுப்பரிட்சை சமயம் பெரியம்மை போட்டுடுச்சு பரிட்சை எழுத போக முடியல அப்படி இல்லாட்டினாலும் ஒண்ணும் எழுதியிருக்க மாட்டேன்றது வேற விஷயம்...அந்த சொட்டத்தலை ஹெட் மாஸ்டர் போனா போகுதுன்னு என்னை ரெண்டாப்புல இருந்து மூணாப்புக்கு பாசாக்கிவிட்டுட்டாரு மூணாப்பு போனதும் ரொம்ப குஷி பெஞ்ச் எல்லாம் போட்ருப்பாங்க இரண்டுவருசமா தரையில உட்கார்ந்து உட்கார்ந்து சலிச்சுருந்தது , ம் மூணாப்புல நான் குட்டையா இருந்ததுனால முன்னாடி பெஞ்சில உட்கார வச்சுட்டாங்க ம் ஸ்கூலுக்கு வட்டி ஆமா வட்டிலத்தான் அப்டி வட்டி வட்டின்னு நாங்க சொல்லுவோம் பின்ன வளர்ந்து பெரியவன் ஆன பிறகுதான் வட்டிக்கும் வட்டிலுக்கும் வித்யாசம் தெரிஞ்சது . அந்த வட்டிய தவால் பைல எடுத்துட்டுத்தான் ஸ்கூலுக்கு போவோம்.

 மதியம் சோத்து மணி அடிச்சதும் அந்த வட்டிய எடுத்துகிட்டு சமையல் கார பொன்னம்மா சாப்பாட்டு அண்டாவ எடுத்து வச்சுகிட்டு இருக்குற சமையல் கூடம் ஆமா ரெண்டாப்புதான் சாப்பாடு போடுற எடம் அங்க வரிசையில நின்னு சாப்பாடு வாங்கி நம்ம ஃப்ரண்ட்ஸ் சக்திவேலு, அழகேசன், வெங்கடேஷ், வேலுச்சாமி,ஜெயக்குமாரு, முத்து இவனுங்களோட சேர்ந்து பெரிய வட்டம் போட்டு சாப்டுவோம் புதன் கிழமையாச்சுன்னா முட்டை போடுவாங்க அதை அப்டியே தோலை உரிச்சுட்டு வெள்ளைகருவ தூக்கி தூரவீசிட்டு மஞ்சள் கருவ சோத்துல போட்டு சாம்பாரோட பிசைஞ்சு சாப்பிடுவோம் எப்டியிருக்கும் தெரியுமா அந்த சாப்பாடு இப்போ நினைச்சாலும் நாக்குல எச்சிலூறுது எனக்கு .

புதன் கிழமை எப்படா வரும்ன்னு இருக்கும் ,ஆமா பின்ன இருக்காதா சுடு தண்ணியில மஞ்சள கலந்து ஊத்துன மாதிரி ஒரு சாம்பாரு இதுல கொள்ளை லாபம் அடிச்சுட்டா அந்த சமையல்காரி பொன்னம்மா இதெல்லாம் எங்கப்பாகிட்ட சொன்னப்போ சின்ன தூக்குவாளியில காலையில குழம்பு மட்டும் கொடுத்துவிட்டாங்க பின்னாடி ஒரு நாள் நம்ம வீட்டுல அம்மா நல்லாத்தானப்பா சமைக்கிறாங்க பின்ன ஏன் வீட்டுல இருந்து எனக்கு சாப்பாடு குடுத்துவிடலைன்னு அப்பாகிட்ட கேட்டப்போ நீ மட்டும் வீட்டு சாப்பாடு கொண்டுபோய் உன்னோட ஃப்ரண்ட் எல்லாம் இலவச சத்துணவு சாப்பிட்டா பின்னாடி உனக்கு தலைக்கனம் ஜாஸ்தியாயிருக்கும் உன்னோட ஃப்ரண்ட்ஸ்ம் வருத்தப்பட்ருப்பாங்களேன்னு நாலுபக்கத்துக்கு வெளக்கம் குடுத்தாரு அப்பாரு.இந்த மாதிரி சின்ன குழந்தையில நான் கேட்குற ஒவ்வொரு விஷயத்துக்கும் அவுரு எனக்கு வெளக்கம் குடுக்குறேன்னு சொல்லித்ததந்த பாடத்தையெல்லாம் எழுதணும்னா ரெண்டு மூணு மாசமாகும் அம்புட்டு இருக்கு.மத்த அப்பா மாதிரியில்ல சின்னவயசுலயே என்னை தூக்கி தோள் மேல தூக்கி போட்டு தோளுக்கு மீறினா தோழன்னு சொல்லிட்டு கெடந்தாரு எங்கப்பாரு...

அதுக்கப்புறம்.ம் ரொம்ப சந்தோஷமா போயிட்டு இருந்த இந்த மூணாப்புல ஒரு காதலும்(முளைச்சு மூணு இலை விடல காதலான்னு கேக்காத பிள்ளையாரப்பா அப்போ அந்த வயசுல அது ஒரு ஈர்ப்புன்னு சொல்லலாம்), ரெண்டு முக்கியமான விஷயமும், இரண்டு அதி பயங்கரமான விஷயமும் ரொம்பவே பாதிச்சுடுச்சு நாளைக்கு அதை சொல்றேன் இப்போ ஜூட்....

(பின்னூட்டப்பெட்டி காலவரையறையின்றி மூடிவைக்கப்பட்டுள்ளது)

,