December 31, 2010

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை..!


இவங்கதாங்க என்னோட அம்மா அப்பா என்னடா திடீர்ன்னு அம்மா அப்பா பத்தி சொல்றேன்னு பாக்குறீங்களா விஷயம் இருக்கு படிங்க ...

எவ்வளவு சந்தோஷமா சிரிச்சுட்டு இருக்காங்க பாத்தீங்களா புகைப்படத்திற்க்காக பூத்த புன்னைகையில்லைங்க இது எப்பவுமே இப்படித்தான் சிரிச்ச முகத்தோட ரெண்டுபேருமே கலகலன்னு இருப்பாங்க. Made For Each Otherன்ற விஷயம் அழகுலயும் படிப்பிலயும் மட்டும்ன்னா அது இவங்களுக்கு கொஞ்சம் கூட பொருந்தாது.அப்பா அந்த காலத்து பி.யூ.சி.படித்தவர் . அம்மா மூன்றாம் வகுப்போடு படிப்பை நிறுத்தியவர். அப்பா நிறமானவர் அம்மா கருப்பு, அப்பா உயரமானவர் அம்மா குட்டையா இருப்பாங்க ஆனா இந்த விஷயங்களை அப்பா பெரிய வித்யாசமா எடுத்துகிட்டதில்லை .அம்மாதான் அடிக்கடி அப்பாகிட்ட நான் உங்களுக்கு பொருத்தமானவளே இல்லைங்கன்னு சொல்லி வருத்தப்படுவாங்க ஆனா அப்பா அம்மாவை ஒருநாள் கூட அப்படி சொல்லி வருத்தப்படுத்தினதே கிடையாது.மாறாக Made For Each Other ன்ற விஷயம் அன்புக்கு மட்டும்ன்னா அது இவங்களுக்கு 100% பொருந்தும்.

ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்க மாட்டாங்களே ஒழிய ஒருத்தருக்கொருத்தர் நல்லா கிண்டல்பண்ணிப்பாங்க அப்பா கோடுபோட்ட பட்டாபட்டி டவுசர் போட்டு வேஷ்டி கட்டியிருப்பார் . வேஷ்டியை தூக்கிகட்டும்பொழுது டவுசர் வெளியே தெரியும் அதனால அப்பா எங்கயாவது வெளியில் போய்ட்டு வீட்டுக்கு திரும்பி வரும்பொழுது டவுசர் பாண்டி வந்துட்டார்டான்னு அப்பாவை அம்மா கிண்டல் பண்ணுவாங்க . அப்பா இருக்காரே அம்மா வைக்கிற ஒவ்வொரு சமையலையும் கிண்டல் பண்ணிட்டே இருப்பார். ஆனா அவங்க சமைக்கிற சாப்பாடு மட்டும்தான் அவருக்கு பிடிக்கும் வெளியில எங்கயும் சாப்பிட மாட்டார். வெளிலதான் ஒருத்தருக்கொருத்தர் கிண்டல் பண்ணிப்பாங்களே ஒழிய உள்ளுக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் அவ்ளோ அந்நியோன்யமா இருப்பாங்க நானே நிறைய தடவை பொறாமை பட்ருக்கேன்னா பார்த்துக்கங்க...

அம்மா படிக்காதவங்கன்னாலும் அவங்களை தின நாளிதழ்கள் வாசிக்கிற அளவுக்கு படிக்க வச்சது அப்பாதான். அப்பாவோட முன்னால் காதல் அதோட தோல்வி எல்லாமே அம்மாவுக்கு தெரியும் . இருந்தாலும் அதை சொல்லி அவரை வருத்தப்படுத்தியது கிடையாது .ஆனா கிண்டல் பண்ணுவாங்க இப்போதாங்க உங்களோட பேருக்கு அர்த்தம் தெரியுதுன்னு (அப்பா பேர் தேவதாஸ்) . அதுமட்டுமில்லாம ரெண்டுபேருமே அழகா பாடுவாங்க ஒரே ஒரு ஊரிலேன்னு ஆரம்பிக்கும் படிக்காத மேதை பாடலை டூயட்டா ரெண்டு பேரும் படிப்பதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்போலிருக்கும் .பின் அன்பினாலே உண்டாகும் இன்பநிலை என்ற பாடல், எப்பவாது சின்னதா முகம் சுளித்து இருவரும் பேசாமலிருந்தால் இந்த பாடல் அவர்களை சேர்த்துவைக்கும். ஒருத்தருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டாலோ ஒருத்தரை ஒருத்தர் ஒரு நாள் இரண்டுநாள் பிரிந்திருக்க வேண்டியோ வரும்பொழுது அவர்கள் படும் பாட்டை சொல்லி மாளாது.எங்கப்பா ஆணாதிக்கவாதியும் இல்ல எங்கம்மா பெண்ணியவாதியும் கிடையாது ஆனாலும் இவங்க ரெண்டுபேர் வாழ்ற அந்த வாழ்க்கை அவ்ளோ அழகா போய்ட்டு இருக்கு. இதே மாதிரிதாங்க நானும் வாழணும்ன்னு ஆசப்படறேன்.தப்பா? 

எங்கப்பா மெத்தப்படித்தவர் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் அப்பாவுக்கு ஆறு தம்பிகள் நான்கு தங்கைகள் வீட்ல ஏதாவது ஒரு விஷேசம்ன்னா வெளியில இருந்து யாரும் வரவேண்டியதே இல்லை எங்க குடும்பம் போதும், அப்படிப்பட்ட பெரிய குடும்பத்தில் தலை மகனாய் பிறந்து தம்பிகள் அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமைத்து தந்து தங்கைகளை திருமணம் முடித்து கொடுத்துன்னு வாழ்க்கையில் நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறார். அந்த பாடங்களையெல்லாம் நான் எப்பொழுதாவது அவரிடம் சந்தேகங்களோ விளக்கமோ கேட்கும் பொழுது சொல்லிக்கொடுப்பார். வாழ்க்கையில் நேர்மையாக வாழ்வது எப்படி, வறுமைன்னா என்ன , படிப்பறிவு எதற்க்கு ,பண்பாடுன்னா என்ன என்பதெல்லாம் நான் புத்தகங்களை படித்து கற்று கொண்டது கிடையாது. யாராவது நாம் செய்த நன்றியை மறந்து நம்மை ஒருவர் தரக்குறைவாக பேசும்பொழுது பதிலுக்கு நாமும் பழிவாங்குவிதமாக தராதரமிழந்து பேசக்கூடாது இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிட வேண்டும் என்ற குறளினை மேற்கோள் காட்டி பேசுவார்.
என்னோட அப்பா எனக்கு சிறந்த ஆசான் .செல்லமா கூட என்னை அடித்தது கிடையாது. கண்டிப்பு இருக்கும் அந்த கண்டிப்பிலும் கண்ணியம் இருக்கும்.அவர் சொல்லித்தந்ததில் நான் பின்பற்றாதது கோபப்படுவது மட்டும்தான் அதுக்குண்டான வினைகளை அறுக்கும்பொழுதுதான் அவரின் வார்த்தைகளின் அருமை தெரிகிறது.அதுமட்டுமில்லாமல் கடின உழைப்பாளி சோம்பல் எனபதே கிடையாது இப்போ வரைக்கும் எதாவது வேலைகளை இழுத்துபோட்டுக்கொண்டு செய்து கொண்டே இருப்பார்.

இன்னும் எங்கப்பா பத்தி நிறையவே சொல்லிட்டே போகலாம் (கண்டிப்பா சொல்வேன்)

இப்படியான என் அப்பா தொலைபேசியில் என்னய்யா கண்ணு என்று அழைக்க ஆரம்பிக்கும்பொழுது கண்களில் கண்ணீர் வந்துவிடுகிறது. அப்பா எவ்வளவோ கதைகள் சொல்லி வாழ்க்கை பாடத்தை புரிய வைத்த நீங்களும் அம்மாவும் நான் வாழும்காலம் வரை வரவேண்டும் என்பதுதான் என் ஆசை.
இன்றைக்கு அப்பாவின் பிறந்தநாள்.

பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா.இதே புன்னகையுடனே வாழ்நாள் முழுவதும் சந்தோஷம் கிடைத்திருக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்..

ப்ரியமுள்ள மகன்
வசந்தகுமார் தேவதாஸ்.

பதிவை வாசித்த அனைவருக்கும் நன்றிகள்.


No comments: