September 3, 2010

நானும் நித்யாவும் காதலும் ! (கடைசி பாகம்)



Part 1, Part 2, Part 3


பேருந்து பயணம் முழுவதும் நித்யாவின் கல்யாண பத்திரிக்கையும் அப்பாவைப்பற்றிய தொலைபேசி அழைப்பு நினைப்புகளும் மாறி மாறி வந்து பேருந்து சீக்கிரம் ஊருக்கு சென்றுவிடாதா என்ற நினைப்பு ஒரு புறம் வந்தாலும் நித்யாவின் கல்யாண பத்திரிக்கையே மனம் முழுவதும் ஆக்ரமித்திருந்தது.

ஒரு வழியாக ஊருக்கு போய் சேர்ந்தேன் மாமா சொல்லியிருந்த ஆஸ்பத்திரி இருக்கும் இடம் பற்றி ஏற்கனவே தெரியுமென்பதால் சீக்கிரமே என்னால் செல்ல முடிந்தது.ரிசப்சனிஸ்ட்டிடம் அப்பா பெயர் தெரிவித்ததும் "ரூம் நம்பர் 22க்கு போங்க" என்றார்.

"கதவைத்திறந்து உள்ளே சென்றேன் அப்பா அமைதியாக தூங்கி கொண்டிருந்தார்"

அம்மா அப்பாவின் அருகிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார்.

"என்னாச்சும்மா...?"

முட்டிக்கொண்ட அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு அம்மா பேச ஆரம்பித்தார் "நல்லாத்தான் இருந்தார்ப்பா என்னாச்சுன்னு தெரியலை தோட்டத்துப்பக்கம் போய்ட்டு வந்து மதிய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு கைகால் கொஞ்சம் அசாத்தியமா இருக்குடி அப்படின்னு சொல்லிகிட்டே மயக்கம் போட்டுட்டார் என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்து மாமாவ கூப்பிட்டு ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்தா அப்பாவோட இரண்டு கிட்னியும் ஃபெயிலாயிட்டதாவும் உடனே வேற கிட்னி மாத்துனாத்தான் அவர் உயிர் பிழைக்க முடியும்ன்னு டாக்டர் சொல்லிட்டாருப்பா , என்னோட ப்ளட் குரூப் மாமாவோட ப்ளட் குரூப் அப்பாவோட ப்ளட் குரூப்போட சேராதுன்றதால எங்களால கிட்னி கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டார் அப்போதான் உன்னோட ப்ளட் க்ரூப் அப்பாவோட ப்ளட் குரூப்பும் ஒரேதுன்ற ஞாபகம் வந்து உன்னை உடனே வரச்சொன்னோம் இப்போ டாக்டருக்கு தகவல் சொல்லியிருக்கோம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவார்" என்றார்.

டாக்டரும் வந்து என்னுடைய ப்ளட் குரூப் அப்போவோட ப்ளட் குரூப் ஒன்று தானா என்று ஒருமுறை செக் செய்துவிட்டு ஆப்பரேசனுக்கு நாள் குறித்து விட்டார் இரண்டு நாட்கள் கழித்து ஆம் நித்யாவின் திருமண நாள் அன்றுதான் அதற்க்குள் ஆப்ரேசனுக்குரிய பணம் 2லட்சம் ஏற்பாடு செய்துகொண்டு வாருங்கள் என்று சொல்லவும் அடுத்த இரண்டு நாட்களும் பணத்தை ஏற்பாடு செய்வது ஆஸ்பிட்டல் என்று நகர்ந்து சுத்தமாக நித்யாவோட திருமணம் பற்றிய விஷயம் மறந்துவிட்டிருந்தது.

ஆப்ரேசன் செய்யும் நாள் வந்தது ஆப்ரேசனும் வெற்றிகரமாக முடிந்தது மயக்கம் தெளிந்து விழித்து பார்த்ததும் "கங்ராட்ஸ் வசந்த் என்றவாறே டாக்டர் என்னுடைய கையை பிடித்து உங்க அப்பாவைப்பற்றி இனி கவலையில்லை பிழைத்து விட்டார் இன்னும் ஒரு வாரம் இருவருமே பெட் ரெஸ்ட்டில் அவசியம் இருக்க வேண்டும் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்" என்றும் ஸ்டாஃப் நர்சிடம் "இரண்டு பேரின் உடல் நிலையையும் கண்காணித்து எனக்கு அப்டேட் செய்யுங்கள்" என சொல்லி சென்றுவிட்டார்.

அப்பா பிழைத்துவிட்டார் என்ற சந்தோஷம் நித்யாவின் திருமணம் தந்த சோகத்தை முற்றிலும் மறக்கடித்திருந்தது.முதல் நாள் சித்தப்பாவோட அலுவலக ஆடிட்டிங் பணியென்பதால் வர இயலாததால் மறு நாள் சித்தப்பா தன்னோடு சித்தி கீதா ப்ரியா அருண் சந்தோஷ் அனைவரையும் அப்பாவை பார்க்க அழைத்துவந்திருந்தார்.

"என் அருகில் அமர்ந்து ஒரு வித சோகத்துடன் என்னையே பார்த்து கொண்டு இருந்தாள் கீதா!"

"என்னாச்சு கீதா? ஏன் சோகமா இருக்க? அப்பாக்கு சரியாயிடும் கவலைப்படாதே!"

"அப்பாவுக்கு சரியாயிடும்ன்னு தெரியும்ண்ணா !"

"பின்ன என்ன...?"

"நேற்றைக்கு நித்யாவோட மேரேஜ் போயிருந்தேன் !!"

"நல்லபடியா நடந்ததா...?"

"ம்ம் நடந்துச்சு நித்யா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல சொன்னாள்"

"என்ன சொன்னாள்...?"

அன்னிக்கு அவங்கப்பா உங்க இரண்டு பேரையும் பார்த்ததுல சந்தேகப்பட்டு வீட்டுக்கு போனதும் உங்களைப்பத்தி கேட்டிருக்கார் அவளும் உங்களைப்பத்தியும் உங்க காதலைப்பத்தியும் சொல்லியிருக்கா அவங்கப்பா உங்க காதலை ஒத்துகிடலை உடனே கோயம்புத்தூரில் இருக்கும் அவங்க அத்தை பையனையே நிச்சயம் பண்ணி திருமணத்துக்கு நாள் குறிச்சு பத்திரிக்கையடிச்சுட்டார் அவளும் எவ்வளவோ எடுத்து சொன்னாளாம் அவர் பேச்சை மீறினா உன்னை கொலை செய்துடுவேன்னு சொன்னதால நீ நல்லாருக்கணும்ன்றதுக்காக கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாளாம்ண்ணா இத உன்கிட்ட சொல்லி நீ அவளை மறந்து வேறொரு பொண்ண பார்த்து கல்யாணம் செய்துகிடணும்ன்னு சொல்லச்சொன்னாள்,

"இது நான் எதிர்பார்த்ததுதான் கீதா"

"அண்ணா உங்களுக்கு கவலையே இல்லியா..?"

"இருக்கு இப்போ கவலைப்பட்டு என்ன செய்ய முடியும் அதான் நடக்குறது எல்லாம் நடந்துடுச்சே!"

"சரிண்ணா உடம்ப பார்த்துக்கோங்க உடம்பு சரியானதும் மதுரைக்கு வருவீங்க தான?"

"ம் கண்டிப்பா வருவேன் நித்யா!"

அப்படியே ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் கழிந்தது அப்பாவும் நானும் டிஸ் சார்ஜ் ஆகி வீட்டிற்க்கு வந்து சேர்ந்தோம் மேலும் இரண்டு நாட்கள் வீட்டில் இருந்துவிட்டு அப்பாவை நன்றாக கவனித்துக்கொள்ளுமாறு அம்மாவிடமும் மாமாவிடமும் சொல்லிவிட்டு மதுரைக்கு புறப்பட்டேன்.

மதுரைக்கு சென்று பணியில் சேர்ந்தாலும் நித்யாவை மறப்பது கஷ்டமாக இருந்தது,அப்படி இப்படியென்று ஒரு ஆறு மாதம் சென்றுவிட்டது , ஆறு மாதம் கழித்து கோவையிலிருக்கும் ஸ்பின்னிங் மில்லிற்க்குரிய பணிக்காக நான் செல்லவேண்டும் என்றும் கூடவே அந்த மில்லிற்க்கு தேவையான ஸ்பேர் பார்ட்ஸ்களும் எடுத்து செல்ல வேண்டியிருந்ததால் அலுவலக் ஜீப்பை எடுத்துச்செல்லுமாறும் மேலாளர் சொன்னதால் அன்று இரவே கோவை செல்ல ஆயத்தமானேன்.

அடிக்கடி லோக்கல் மில்களுக்கு செல்ல ஜீப்பை எடுத்து பழக்கம் இருந்தது என்பதால் நெடுந்தூர பயணம் செல்ல பயமிருக்கவில்லை எனக்கு.இரவு சுமார் பத்துமணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு கோவை நோக்கி சென்று கொண்டிருந்தேன் நேரம் இரவு இரண்டு இருக்கும் இன்னும் கோவை வந்தடைய ஒரு 50 கிலோ மீட்டர் இருக்கிறது என்ற சாலையோர அறிவிப்பு பலகையை பார்த்து கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கும்பொழுது திடீரென்று ஜீப்பின் டயர் வெடித்து வண்டி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது.வண்டி மோதிய வேகத்தில் நான் அப்படியே மயக்கமடைந்தேன் .

சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிவடைந்த ஒரு உணர்வு தண்ணீர்த்தாகம் வேறு கையிலிருந்த அலைபேசியை காணவில்லை அதைத்தேடி தேடி நேரம் போனதுதான் மிச்சம் தேடுவதை விட்டுவிட்டு சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களை நிறுத்தி உதவி கேட்கலாம் என்று கையை மேலும் கீழும் ஆட்டி பார்த்தும் பயனில்லை ஒரு வாகனமும் நிறுத்தவே இல்லை இப்படியே ஒரு அரைமணி நேரம் கழிந்தது சுற்று முற்றும் பார்த்தேன் தூரத்தில் ஒரு பங்களா தன்னந்தனியாக தெரிந்தது.

மெல்ல பங்களா இருக்கும் திசையை நோக்கி நடந்தேன் அது நிச்சயம் ஏதோ ஒரு பெரிய பணக்காரரின் பங்களாவாகத்தான் இருக்கவேண்டும் பங்களாவோட கேட் திறந்தே கிடந்தது வாட்ச்மேன் என்று யாரும் இருக்கவில்லை கேட்டைத்தாண்டி பங்களாவை நோக்கி உள்ளே சென்றேன் உட்புறம் பூட்டியிருந்தது காலிங் பெல்லை அழுத்தினேன் சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட உள்ளே இருந்து வந்தது சாட்சாத் நித்யாவேதான் அதே அழகுச்சிலை என்னைப்பார்த்தது அவளுக்கு நிச்சயம் ஆச்சரியத்தை தந்திருக்கவேண்டும் .

"ஹேய் வசந்த் நீ எங்க இங்க?"

"நானும் உன்கிட்ட அதேதான் கேட்கணும்ன்னு நினைச்சேன்" "நீ இங்க எப்படி நித்யா ?"

"முதல்ல இந்த சோஃபால உட்கார் வசந்த் பேசலாம் !"

நான் அவள் கைகாட்டிய இடத்தில் இருந்த சோஃபாவில் உட்கார்ந்தேன்!

அவள் தொடர்ந்தாள் "என்னோட (ஹஸ்பெண்ட்) வீடு இதான்ப்பா !! ஆமா நீ எப்படி இங்க வந்தேன்னு சொல்லு...?"

"கோவைல ஒரு மில்லோட வேலைக்காக ஜீப்ல வந்துகிட்டு இருந்தேன் திடீர்ன்னு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு ரோட்டுல போற வண்டி ஒண்ணும் நிறுத்துற மாதிரி தெரியலை தூரத்துல இந்த பங்களா தெரிஞ்சது சரி அங்க போய் உதவி கேட்கலாம்ன்னு வந்தா நீ என்னால நம்பவே முடியலை!"

"ஆக்ஸிடெண்ட்டா ..? உனக்கு ஒண்ணும் ஆகலையே?"

"இல்லை வண்டிதான் கொஞ்சம் கவுந்திடுச்சு. அது இருக்கட்டும் நீ எப்படி இருக்க நித்யா..?"

கேட்டதுதான் தாமதம் அழ ஆரம்பித்துவிட்டாள் "அன்னிக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியுமா வசந்த்?"

"தெரியும் நித்யா ! கீதா என்கிட்ட எல்லாமே சொன்னாள்!"


அவர் நம்ம காதல் பத்தின விஷயம் தெரிஞ்சுதான் என்னை மேரேஜ் பண்ணிகிட்டார் வசந்த். மேரேஜ்க்கு அப்பறம் நான் அவரோடவே இங்க வந்துட்டேன் இங்க வந்ததுக்கப்புறம் அவரோட நடவடிக்கையே சரியில்லை எப்பவும் என்னை சந்தேகப்பட்டுகிட்டே இருப்பார் குத்தி குத்தி காட்டி பேசிகிட்டே இருந்தார் .அவர் என்னை மேரேஜ் பண்ணுனதுக்கு ஒரே காரணம் என்னோட சொத்துதான் தெரிஞ்சுகிட்டேன்அவரோட அம்மாவும் கூட சேர்ந்துகிட்டாங்க இங்க இருந்து எங்கப்பா கூட பேசவிடலை .இவங்களோட கொடுமை அதிகமாகி என்னைய கொல்ல திட்டம் போட்டாங்க அதுக்கு முன்னாடியே நான் அவங்க எல்லாரையும் கொன்னுட்டேன்! "நானும் தற்கொலை செய்துகிட்டேன்!"

"எனக்கு அப்படியே தூக்கிவாறிப்போட்டது செத்துட்டாளா? "அப்போ என் கூட பேசிக்கிட்டு இருந்தது நித்யா இல்லையா? இவ்வளவு நேரம் பேயோட பேசிக்கிட்டு இருந்தேனா? பயத்தில் வியர்த்து விறு விறுத்தது என்னால் அதுக்கு மேல் அங்கு உட்கார முடியவில்லை அங்கிருந்து ஓட ஆரம்பித்தேன்...!

"ஹேய் வசந்த் ! ஹேய்! எங்க ஓடற..? நில்லு!" என்று சொல்லியவாறே நித்யா என்ற பேய் என்னை துரத்தியது."என்னதான் காதலின்னாலும் பேய் என்றால் பயம்தான்...!"

நானும் ஓடுவதை நிப்பாட்டவில்லை ஓடி ஓடி நான் வந்த ஜீப் இருக்கும் இடத்தை அடைந்தேன்  "அங்கு ஒரு ஆம்புலன்ஸ்ம் ஹைவே பேட்ரோல் போலீஸ் வண்டியும் நின்றிருந்தது அங்கிருந்த போலீஸார் செய்த செயல் என்னை கதிகலங்க செய்தது அவர்கள் என்னுடைய உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டிருந்தனர் இடையில் ஏதோ பேசிக்கொண்டனர்!!"

"சார் ஜீப் மரத்துல மோதுனதுனாலயும் ஜீப் கவிழ்ந்ததிலயும் இந்த ஆள் ஜீப்போட அடியில் சிக்கி ஸ்பாட்லே அவுட்" என்றார் ஒரு காவலர் இன்ஸ்பெக்டரிடம்.

அப்போ !அப்போ ! "நானும் பேயா? என்னோட உயிர் போயிடுச்சா?" அய்யோன்னு அழ ஆரம்பித்தேன் பின்னாடி ஓடி வந்த நித்யா என்னுடைய தோளை பற்றினாள் .

"நித்யா பார்த்தியா ? நானும் உன்னை மாதிரியே செத்துட்டேன் ?"

"எனக்கு உன்னைப்பார்த்ததும் தெரிஞ்சது வசந்த் விடுப்பா! உடம்புதானே போச்சு? போனா போய்ட்டு போகட்டும் மனசு நம்மகிட்ட தானே இருக்கு ! நீ வா நாம போகலாம் புதுசா வாழ ஆரம்பிக்கலாம் "காதலர்கள் பூமியிலே வாழணும்ன்னு எதாவது சட்டம் இருக்கா என்ன? சொர்க்கத்திலயும் வாழலாம்!" 



நித்யாவோட வார்த்தை என்னை மகிழ்ச்சியூட்டியது அப்படியே அவளைக்கட்டிக்கொண்டு முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தேன் . பின் இருவரும் கை கோர்த்தபடியே சேர்ந்து நடக்கலானோம் எங்களுக்கு முன்னே புதிய வாழ்க்கை ஒன்று காத்து கிடந்தது.

(முற்றும்)