December 31, 2013

மகனுடன் இருந்த நாட்கள் மகாநாட்கள் ...!

வணக்கம் வில்சன் ,

2013ம் ஆண்டு ஆரம்பமே கவலைகளுடனேதான் ஆரம்பித்தது இந்த கவலை மேமாதம் வரை நீடித்தது என்ன பெரிய கவலையென்கிறாயா? வேலை தான் . ஒரு மனிதனுக்கு சுவாசம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் வேலையும் முக்கியம். உப்பில்லா பண்டமும் வேலையில்லா மனிதனும் குப்பையில்தான். வேலையில்லா நாட்களில் தின்ற சாப்பாட்டை செரிக்கும்படியாக்கியவன் மகன் , மகனுடன் இருந்த நாட்கள் மகாநாட்கள். மகனின் மூத்திரத்தில் குளித்தநாட்களும் மூத்திர சுவாசத்தை உட்கொண்ட நாட்களுக்கும் ஈடு இல்லை. வேலையில்லாமல் வீட்டிலிருக்கிறேன் என்ற கவலை எனக்கு மட்டுமே இருந்தது , என் மனைவிக்கோ என் பெற்றோருக்கோ கொஞ்சம் கூட கவலையில்லை எப்படி கவலையிருக்கும் எப்பொழுதும் வீட்டை விட்டு பிரிந்தே இருக்கும் நான் வீட்டிலே இருப்பது அவர்களுக்கெப்படி கவலை தரும் ?

ஜூன் மாதம் வேலைகிடைத்து மஸ்கட் வந்தாயிற்று. புதிய கம்பெனி புதியவேலை புதிய நண்பர்கள் புது அனுபவம் முன்பு பணிபுரிந்த சூழ்நிலைகளைவிட முற்றிலும் மாறுபட்ட புதிய சூழ்நிலை . அலுவலகத்தில்தான் பணி வெம்மையிலேயே பணிபுரிந்து பழக்கப்பட்ட எனக்கு குளிரூட்டப்பட்ட அறையில் வேலைபார்க்கும் அனுபவம் புதிது, எனக்கென கொடுக்கப்பட்ட வேலை புதிது, தோளில் கைபோட்டு பேசுகின்ற ஜெனரல் மேனேஜர் புதிது , ஈகோ இல்லாமல் பழகும்  நண்பர்கள் புதிது , வாரம் ஐந்து நாட்கள் தினம் எட்டு மணிநேரம் மட்டுமே வேலை என்பது புதிது, அதைவிட புதிது மகனை பிரிந்த கவலை. நான் பிரிந்து செல்லும்பொழுதெல்லாம் அப்படித்தானே இருந்திருக்கும் என்பெற்றோர்களுக்கும்?

நாட்கள் பறந்து கொண்டிருந்தது, மகனுடைய முதலாவது பிறந்தநாள் டிசம்பர்10ல் வருகிறது விடுமுறை கேட்டால் கொடுப்பார்களோ இல்லையோ என்ற கவலை . நான் பாக்கியம் செய்தவனா இல்லை கடவுள் புண்ணியத்திலா தெரியவில்லை கேட்டதும் விடுமுறை கிடைத்தது . இதுகூட எனக்கு புதிதுதான் ஏனென்றால் முன்பு கத்தாரில் இருந்த கம்பெனியில் திருமணத்திற்க்கு விடுமுறை கேட்டதும் திருமணத்திற்க்கு முதல் நாள் செல் என்று சொன்னார்கள். அவர்களை மிரட்டித்தான் அங்கிருந்து வரவேண்டியதாகிற்று . ஆனால் இங்கு கேட்டதும் விடுமுறை கொடுத்தார் ஜெனரல் மேனேஜர் . அவர் நீண்ட நாட்கள் நல்ல உடல்நலமுடன் வாழவேண்டும். 

ஊருக்கு வந்த பிறகு எனக்கு நிறைய அதிர்ச்சிகள் காத்திருந்தது. முதலாவது மகனுக்கு காய்ச்சல் வந்து மெலிந்திருந்தான். இரண்டாவது மனைவி அவனைவிட மெலிந்திருந்தாள் . மகன் மெலிந்ததற்க்கு காரணம் உடல் காய்ச்சல் ,மனைவி மெலிந்ததற்க்கு காரணம் உள்ளக்காய்ச்சல், வைரஸ் நான். நிலைமை ஓரளவுக்கு சரியாகி மகனின் முதலாவது பிறந்தநாள் கேக் வெட்டி அக்கம் பக்கம் உறவினர்களுக்கு விருந்தளித்து என்று சிறப்பாகவே நடந்தது. மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மறுநாள் வரவிருந்த என்னுடைய பிறந்தநாளை மறந்திருந்தேன். அன்றிரவு அப்பா என்னுடைய பிறந்தநாளுக்கு கேக் ஆர்டர் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் . இந்த அப்பாக்களுக்கு தன்னுடைய பிள்ளைகள்தான் எவ்வளவு உசத்தி?

பதினைந்துநாட்கள் பதினைந்து நிமிடங்களாக கரைந்து விடுமுறை முடிந்தது. மகனை குடும்பத்தினரை பிரிந்து மீண்டும் மஸ்கட் வந்தாயிற்று. விமானசெலவு ஊரில் இருந்தபொழுது வந்தசெலவு புத்தாடைகள் செலவு என அறுபதாயிரங்கள் பஞ்சாய் பறந்தாலும் குடும்பத்துடன் இருந்த மகிழ்ச்சியை எத்தனை ஆயிரங்கள் இருந்தாலும் பெறமுடியாது இல்லையா?

ஆண்டிறுதியில் சிலருக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் என்னுடைய அருகாமையை தவறவிடும் மகனுக்கும் , பெற்றோர்களுக்கும்,  என்னை பிரிந்து இருக்கவேண்டிய சூழலில் பல்லைக்கடித்துக்கொண்டு நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கும் மனைவிக்கும், வேலையிடத்தில் கிடைத்த புதிய மேனேஜருக்கும் , மற்றும் நண்பர்கள் சிலருக்கும் , இவர்களை எனக்கு கொடுத்த இறைவனுக்கும் மிக்க நன்றி.

ஆகவே இந்த புதியவருடத்தில் இருந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் இருக்க என்ன வழிகளோ அந்த வழிகளின் திறவுகோல்களை கண்டுபிடித்துவிட்டேன் . திறப்புவிழாவுக்கு நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

ஆண்டிறுதி மிக மகிழ்ச்சியாக முடிவடைகிறது. வரும் 2014ம்ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும் , நல்ல உடல் நலத்தையும் தரவேண்டும் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்.நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ப்ரியமுடன் வசந்த்

மகனின் சில படங்கள் 




மகனின் பிறந்தநாள் புகைப்படங்கள்





 மகனின் காலில் பெயிண்ட் செய்து அதை பட்டாம்பூச்சியாய் உலவவிட்டது 




என்னுடைய பிறந்தநாள் புகைப்படங்கள்





சாப்பாட்டு ரா......




என்னுடைய வீட்டில்