May 31, 2010

ப்ளீஸ் ! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ...





என்ன நண்பர்களே அனைவரும் நலமா? என்னுடைய தொல்லையில்லாமல் நிம்மதியாக இருந்திருப்பீர்கள் விட்டுடுவோமா வந்திட்டோம்ல... இப்போ விடுமுறையில் நான் வாங்கிய புத்தகங்களை உங்களோடு பகிந்து கொள்கிறேன்.....

****************************************************************************************************************
என்னமோ மாதிரியிருக்கு இந்த வார்த்தை நம்மில் பெரும்பாலானோர் பயன் படுத்தும் வார்த்தையாகிப்போய்விட்டது...

இப்படித்தான் ஒருவர் மெர்க்குரி லைட் கம்பத்தின் வெளிச்சத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். என்ன சார் தேடுறீங்க என்றார் அங்கு வந்த மற்றொருவர்.அதற்கு முதலாமவர் கூறுகிறார் மோதிரம் கீழே விழுந்திடுச்சு அதைத்தான் தேடுறேன் என்றாராம் தொலைத்தவர்.அக்கரறையாக விசாரித்த இரண்டாமவர் எங்க தொலைச்சீங்க என்று கேட்க , வீட்டுகிட்ட என்றாராம் முதாலமவர் அதற்கு ஏன் இங்கே தேடுறீங்க என்றதற்க்கு இங்கேதான் வெளிச்சமாய் இருக்கிறது என்றாராம் தொலைத்தவர்

இப்படித்தான் என்னமோ மாதிரியிருக்கு மனசுகளும் அமைதியாக உட்கார்ந்து ஆழமாக கவனித்தால் ஓ... இதுதான் விஷயம் இதுக்குத்தான் இவ்வளவு நெருடலா இருந்ததா என்று தீர்வுக்கு வரலாம் வெளிச்சம் இருக்கிற இடமாகப்பார்த்து தேடுற இடமாகப்பார்த்து தேடுற மாதிரி கோயிலிலும் ஹோட்டலிலும் கடற்கரையிலும் அதை தேடினால் கடைசி வரை உங்கள் மோதிரம் கிடைக்கப்போவதில்லை....

என்பது தொடங்கி

நான் அசிங்கம் என்ற அபிப்ராயத்தோடு நீங்கள் இருப்பீர்களேயானால் உங்கள் சுற்றமும் உங்களைப்பற்றி அப்படித்தானே நினைக்கும் நீங்களே உங்களைப்பற்றி உங்கள் மனம் உடல் பற்றி தரக்குறைவாக நினைக்கும் பொழுது அடுத்தவர்கள் அப்படி நினப்பதில் ஆச்சரியம் என்ன?

உங்கள் அகம் புறம் இரண்டையும் அணு அணுவாக நீங்களே ரசியுங்கள் காதலியுங்கள் முதலில் நீங்கள் உங்களை கவுரவமாகப்பாருங்கள் ஆராதியுங்கள் இந்த உலகம் உங்களை எப்படி பார்க்கிறது என்பதன் ஆரம்ப புள்ளி உங்களிடம் இருந்துதான் தொடங்குகிறது என்று தனி மனித சுய கம்பீர விளக்கம்...

இன்னும் அன்பு செலுத்துதல்,பெறுதல்,வாழ்க்கைக்கு தேவையற்ற தாழ்வு மன்ப்பான்மையை களைதல்,எண்ணங்களை செயல்வடிவமாக்குதல்,புரிதல் பற்றியும் இன்னும் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை விஷயங்களை நீயா நானா கோபிநாத் அவர்கள் இந்த புத்தகத்தில் பகிர்ந்திருக்கின்றார்...

கண்டிப்பாக அழகான மனம் கொண்ட மனிதனாக மாற விரும்புபவர்கள் வாங்கிப்படிக்க வேண்டிய புத்தகம்....



ப்ளீஸ் ! இந்த புத்தகத்தை வாங்காதீங்க...

ஆசிரியர் : நீயா நானா கோபிநாத்

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேசன்ஸ்
29/(7/3) 'E'பிளாக் முதல்தளம்,
மேட்லிசாலை,தி.நகர்,சென்னை - 600017

விலை : ரூ 60

புத்தகம் நியூ புக்லேண்டிலும் கிடைக்கிறது...

****************************************************************************

அடுத்ததாக ராஜ சுந்தர் ராஜன் என்பவரின் முகவீதி எனும் கவிதை தொகுப்பு...

மிகை எனும் தலைப்பில்

கேட்பதற்க்குத் துளைகள் போதும்
என்றாலும் செவி மடல்கள்
(அறுத்து விடலாமா?)

மானத்துக்கு ஆடை
அதில் ஆயிரத்தெட்டு வேலைப்பாடு.

கருக்கொண்ட பின்பும்
புணர்ச்சி

உண்டமட்டில் உயிர் தாங்காதோ
வீணையும் இசைக்கிறது...

பசித்துவம் எனும் தலைப்பில்

கன்று முட்டிப்
பால் விளைந்தது
கறவை மடியில்

பால் பறித்துப்
பணம் பண்ணின
மனித விரல்கள்

கன்றுக்காக மனமிரங்கிக்
கண்ணீர் விட வேண்டாம்

பால் தரும் வரைக்கும் பறிப்பதும்
பிறகு அப் பசுவையே கொன்று
கறி சமைப்பதும் கூட
நியாயம்தான் மனித வாழ்வில்
வயிற்றுப்பசி சாட்சியாக...

இப்படி இன்னும் நிறைய கவிதைகள் வேறொரு வடிவத்தில் கொட்டிக்கிடக்கின்றது..இழுத்து ஓங்கி கன்னத்தில் அறைகிறது இவரது கவிதைகள் கவிதையை சுவாசிப்பவர்கள் கண்டிப்பாக வாங்கிப்படிக்க வேண்டிய புத்தகம்

முக வீதி

ஆசிரியர் : ராஜ சுந்தர் ராஜன்

தமிழினி,342,டி.டி.கே சாலை

சென்னை -14

விலை : ரூ,70.00

நியூ புக்லேண்டிலும் கிடைக்கிறது...

*************************************************************************************

நீ முத்தமிட்ட
பிறகுதான்
நம்பத்தொடங்கினேன்

நீரில்
இருந்து மின்சாரம் எடுக்க முடியும்
என்பதை

---------

கேட்க திறனிழந்து
பியானோவுக்கு முன்
பீத்தோவன்

உனக்கு முன்
நான்

பியானோவிலிருந்து
வழியும் இசை
மெல்லச்சரியும்
உன் மேலாடை

--------

எதையோ நினைத்துச்
சிரித்தபடி
குளத்தில் நீ
முகம் கழுவுகிறாய்

உன் புன்னகையைப்
பொரிகளென நினைத்து
மொய்க்கின்றன
மீன்கள்

--------

என் கவிதையை விட்டு
ஓடிப்போன
வார்த்தையைத்
தேடியலைந்தேன்

மொட்டைமாடியில்
நீ பாடம் நடத்தும்
குழந்தைகளோடு உட்கார்ந்து
உன் உதடுகளையே
வேடிக்கை
பார்த்து கொண்டிருந்தது
அது


இப்படி காதல் சொட்ட சொட்ட கவிதைகளை அழகிய வண்ணப்படங்களுடன் கவிஞர்.பழநிபாரதி முத்தங்களின் பழக்கூடை எனும் புத்தகத்தில் நிறைய காதல் கவிதைகள் எழுதியிருக்கின்றார்...


முத்தங்களின் பழக்கூடை

ஆசிரியர் : பழநிபாரதி

விஜயா பதிப்பகம்

நியூ புக் லேண்டிலும் கிடைக்கிறது..

விலை ரூ . 70

*************************************************************************************

இன்னுமொரு முக்கிய விஷயம் சென்னையில் இருப்பவர்கள்
புத்தகங்கள் வாங்க டிஸ்கவரி புக் பேலஸ் சென்று வாங்குங்கள் 10% வரை பதிவர்களுக்கு டிஸ்கவுண்டும் கொடுக்கின்றார்கள்...

நான் சத்ரியன் அண்ணாவின் அறிமுகத்தின் பேரிலும் ஜமால் அண்ணா அறிமுகத்தின் பேரிலும் சென்றேன்.... அங்குதான் நம் பாரா அண்ணாவின் கருவேல நிழல் ,பரிசல் அண்ணாவின் டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும், கேபிள் சங்கரின் லெமன் ட்ரீயும் இரண்டு சொட்டு டக்கீலாவும் நிலா ரசிகனின் ஒரு வண்ணத்துப்பூச்சியின் கனவுகள் மற்றும் நண்பர் சகோதரர் தமிழ் அமுதனின் அறிமுகத்தின் பேரில் வாங்கிய ராஜீவ் காந்தி கொலை வழக்கு, இன்ன பிற நூல்களும் வாங்கினேன் அதன் உரிமையாளர் வேடியப்பன் மிகவும் அன்பாகவும் அழகாகவும் பழகுகிறார்...
விபரங்களுக்கு இவரின் இந்த தளத்திற்க்கு செல்லவும்...



*****************************************************************************************************************

இது மட்டுமல்ல இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்கி படித்தேன் அது பற்றிய இடுகைகளும்,
நண்பர்கள் சந்திப்பு...நன்றாக வாசிக்கவும் நண்பர்கள் சந்திப்புதான்... பதிவர் சந்திப்பு அல்ல ஏனென்றால் மூவர் சந்தித்தால் பதிவர் சந்திப்பா என்று கேட்கும் மிக நாகரீகமான மனிதர்கள் பதிவுலகில் இருக்கின்றனர்...நண்பர்கள் சந்திப்பும் அதன் புகைப்படங்களும் அது பற்றிய பதிவும் அடுத்த இடுகையில்...


*************************************************************************************