எங்கள் வானம் எங்கள் பூமி
இப்பிரபஞ்சமே எங்களால் நிரம்பியது
நிரப்ப முடியா மடல் ஓட்டைகளையும்
நிரப்பி அவைகளுக்கு
தலையணையாய்
நாங்கள்...
கனவுகள் வர
காரணகர்த்தா நாங்கள்
சுகத்தையும் துக்கத்தையும்
உணர்ந்து அனுபவிக்க
படைக்கப்பட்ட கிரீச் கிரீச்
நாங்கள்...
அதிர்வுகளால்
வானத்தையும் இதயத்தையும்
வலியில்லாமல்
உடைத்துப்போடும்
வலிமை எமக்குண்டு ...
உயிர் உருவாகும்போது
பிரியும்போதும் வாழும்போதும்
தேவைப்படும் காப்பீடு தேவையற்ற
களப்பணியாளர்கள்
நாங்கள்...
கோபமோ தாபமோ
எந்த உணர்வாயினும்
அதை நொடியில்
எங்கள் வசமாய் மாற்றிவிடும்
மாற்று சக்தி நாங்கள்..
ஓராயிரம் நாளங்களுடையவனை
படைத்தவனும் பிரம்மா!
ஏழே ஏழு உறுப்புகளை
உடைய எம்மை
படைத்தவனும் பிரம்மா!
எம்மை பிடிக்காதவர்கள்
இவ்வுலகில் கிடையாது
அப்படி பிடிக்காமல்
போயிருப்பின் அவர்கள்
உணரும் திறன்
இழந்திருப்பவர்களாயிருக்கலாம்...
அந்தோ எம்மை உணர
முடியாமல் படைக்கப்பட்டவனே
இப்பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட
மிகச்சிறந்த
துரதிர்ஷ்டவாதி...
அனுதாபங்கள் அவர்களுக்கு..
உணர்ந்து அனுபவிப்பவர்களுக்கு
நாங்கள்
மெகு மெகு லகி மகி மா....
மெகு மெகு மகி லகி மா....
