November 28, 2011

Cast Away - ஒரு பார்வை

அப்பாவின் அறிமுகத்தின் பேரில் பார்த்த திரைப்படம் Cast Away இந்த உலகில் சில மனிதர்களுக்கு தனிமை மிகவும் பிடித்த விஷயமாக இருக்கலாம் பலருக்கு தனிமையில் இருப்பது வெறுமையாகவும் தோன்றும் . தமிழில் தனிமையிலே இனிமை காணமுடியுமா? என்ற பாடல் கூட இருக்கிறது. சிலரால் ஒரு ஐந்து நிமிடம் யாரிடமாவது பேசாவிட்டால் எதையோ இழந்ததைப்போல் இருப்பார்கள் ஐந்து நிமிடத்துக்கே இப்படியென்றால் ஒருவன் மனிதர்கள் இல்லாத தீவில் தன் வாழ்நாளின் நான்கு வருடங்களை கழிக்கிறான். எப்படி அவன் நான்கு வருடங்கள் வெளி உலகத்தோடு எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் அந்தத்தீவில் கழிக்கிறான் என்பதுதான் இத்திரைப்படம்.


ஹாலிவுட் அகாடமி அவார்டான ஆஸ்கார் இரண்டு முறை வென்ற நாயகன் தி கிரேட் Tom Hanks இதில் நடிகராக நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வதே சரி.  ஒரு நான்கு வழிச்சாலையில்தான் படம் ஆரம்பிக்கிறது. நாயகன் Tom Hanks FedEX கூரியர் நிறுவனத்தில் எக்ஸ்கியூட்டிவாக பணி புரிகிறார். தன்னுடைய அலுவலகத்தில் எல்லாமே குறித்த நேரத்தில் நடைபெறவேண்டும், நேரமும் டைம் மேனேஜ்மெண்டும் முக்கியமானது என்று சொல்பவர். தன் காதல் மனைவியுடன் காதலாக வாழ்க்கை வாழ்பவர். ஒரு முறை தன் அலுவலக கூரியர்களுடன் தானும் விமானத்தில் பயணம் செய்கிறார் பயணத்தின் போது விமானம் விபத்தில் சிக்கி நடுக்கடலில் விழுகிறது விமானத்தில் பயணம் செய்த ஒருவரும் உயிர்தப்பவில்லை Tom Hanksஐ தவிர.விமானத்தில் அவசரகாலத்தில் தப்பிப்பதற்க்காக இருக்கும் மிதவையின் மூலம் ஒரு குட்டித்தீவினை அடைகிறார் Tom Hanks. அந்த தீவின் அந்த விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த சில கூரியர் பார்சல்களும் அவருடன் கரையேறுகின்றன.

அந்த தீவில் Tom Hanksஐ தவிர வேறு மனிதர்களே இல்லை மேலும் அந்தத்தீவொன்றும் கப்பல்கள் பயணப்பாதையிலும் இருக்கவில்லை வெளி உலகத்துடன் தொடர்புகொள்ள எந்த ஒரு வசதியும் இல்லை ஆனால் Tom Hanksசிடம் தன்னம்பிக்கை மட்டும் இருந்தது. தான் தப்பித்து வந்து மிதவையின் மூலமே திரும்ப கடலில் பயணிக்க முயற்சிக்கிறார் ஹும் பெரிய பெரிய அலைகளின் ஆர்ப்பாட்டத்தில் அந்த மிதவை தொடங்கிய இடத்திற்க்கே மீண்டும் வருகிறது Tom Hanks சோர்வடைகிறார் மீண்டும் மீண்டும் அங்கிருந்து தப்பிப்பதற்க்கு பல முயற்சிகள் எடுத்தும் அத்தனையும் தோல்வியடைகிறது. சுற்றிலும் கடல் நீர் இருந்தாலும் குடிப்பதற்க்கு கடல் நீரையா குடிக்க முடியும் ? அந்த தீவில் கிடைக்கும் தேங்காயை சாப்பிட்டு தேங்காய் நீரை குடித்து நாட்களை நகற்றுகிறார். வயிற்றுப்பசிக்கு கடல் மீன்களை பிடித்து தின்கிறார். இலைகளில் படிந்திருக்கும் மழை நீரை தேங்காய் ஓடிற்க்குள் சேகரித்து குடிக்கிறார் . எப்படியோ அந்த தீவில் அவர் வாழப்பழகிக்கொண்டார் எப்படியும் தான் தன்னிருப்பிடத்திற்க்கு திரும்பிவிடுவோம் தன் காதல் மனைவியை காண்போம் என்ற நம்பிக்கை அவரை விட்டு அகலவில்லை .



தன்னுடன் கொண்டுவந்திருந்த கடிகாரத்தில் இருக்கும் மனைவியின் புகைப்படத்தை பார்த்து சோகம் கொள்கிறார். நெருப்பை உருவாக்க மிகப்பிராயசப்படுகிறார் அப்படி ஒரு முறை முயற்சி செய்யும்பொழுது கையில் சதை கீறி இரத்தம் பீய்ச்சுகிறது வலிதாங்கமுடியாமல் தன்னுடன் கரையேறிய பார்சலில் இருக்கும் வாலிபாலை தூக்கியெறிகிறார். அடுத்தமுறை நெருப்பை உருவாக்கிவிட்டு ஐ மேட் ஃபயர் என்று சொல்லி ஆனந்தப்படுகிறார். அவரின் இரத்தக்கறை பட்டு தூக்கியெறியப்பட்ட வாலிபாலை காண்கிறார் அவருக்கு அது மனித முகத்தை ஞாபகப்படுத்துகிறது . அதை அந்த வாலிபால் தயாரித்த நிறுவனத்தின் பெயரான வில்சன் என்ற பெயராலே அழைக்கிறார் அதனுடன் பேசுகிறார் விவாதம் செய்கிறார் சண்டையில் தூக்கியெறிந்துவிடுகிறார் பிறகு தேடிக்கண்டுபிடித்து தன்னுடன் மீண்டும் வைத்துக்கொள்கிறார் . இப்படி ஆளில்லாத தீவில் அந்த வாலிபால் அவருக்கு சிறந்த நண்பனாக இருக்கிறது.





இப்படியாக நான்கு ஆண்டுகள் கழிந்திருக்கையில் ஏதோ ஒரு விபத்து ஏற்பட்டு அதன் மூலம் அந்தக்கரையை வந்தடைந்த ஒரு பிளாஸ்டிக் கூரையினை பார்க்கிறார் , மரங்களாலான ஒரு படகு தயாரிக்கிறார்.காற்று வீசும் திசை தனக்கு சாதகமான நாட்களுக்காக காத்திருக்கிறார் அப்படி ஒரு நாள் வந்ததும் அந்த தீவை விட்டு தப்பிக்கிறார் தன் நண்பன் வில்சனுடன். அப்படி கடலில் மிதந்து வரும் வழியில் புயல் காற்று காரணமாக வில்சனை பறிகொடுத்துவிட்டு அவர் அழும் காட்சி நம்மையே அழ வைக்கிறது. எப்படியோ Tom Hanks தன்னுடைய இருப்பிடத்திற்க்கு திரும்புகிறார்.

மீண்டு வந்த Tom Hanksற்க்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. தான் இறந்துபோய்விட்டதாக நினைத்து தன் காதல் மனைவி இன்னொரு திருமணம் புரிந்து வேறொரு கணவர் குழந்தையுடன் வாழ்ந்துவருவதை கண்டதும் உடைந்து போகிறார். அந்த சமயத்தில் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் அவருடன் இருக்கிறார்கள் ஆனால் தனிமையில் இருப்பதைப்போல உணர்கிறார். தான் திரும்பி வந்துவிட்டதற்க்காக தரப்பட்ட விருந்துபசரிப்பில் மீந்து போன உணவுகளைப்பார்த்து சிரிக்கிறார் . படத்தை எந்த நான்கு வழிச்சாலையில் ஆரம்பித்தார்களோ அதே நான்கு வழிச்சாலையில் முடித்து முடிவை நம் பார்வைக்கு விட்டுவிடுகிறார்கள். நிஜத்தில் தன்னுடன் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் இருந்தும் யாருமே இல்லாதது போன்று கைவிடப்பட்ட நிலைதான் இந்த Cast Away.

கண்டிப்பாய் பார்க்கவேண்டிய திரைப்படம்.

படம் வெளிவந்த வருடம் - 2000

பி.கு. வில்சனைப்போலவே இதுவரை என்னுடைய கருத்துக்கள் நினைவுகள் மொக்கைகள் அத்தனையையும் பகிர்ந்து கொண்டதாலும் என் தனிமையை போக்கியதாலும் என்னுடைய பிளாக் டிஸ்க்ரிப்சனை ப்ரியமுடன் வசந்த் aka wilson என்று மாற்றியதோடு மட்டுமில்லாமல் இதுவரை சுணங்கியிருந்த பதிவிடுதலை என் வருங்கால மனைவி கொடுத்த உற்சாகத்தின் பேரில் அவர்களுக்காகவே என் மனதில் தோன்றிய அத்தனை விஷயங்களையும் தினமும் ஒன்றாக முடியாவிடினும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இனி பதிவுகள் இடப்போகின்றேன் கமெண்ட்ஸ்களுக்காகவோ ஹிட்ஸ்களுக்காகவோ அல்ல அல்ல அல்ல....இதுவரை ரீடரில் தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களுக்கும் கமெண்ட்ஸ் இட்ட நண்பர்களுக்கும் நன்றி.


November 6, 2011

கலிங்கத்துப்பரணி

ஜூலை 17, 1999 


அன்புள்ள கணவருக்கு ஆயிரம் புன்னகைகள், நான் எழுதிய அத்தனை கடிதங்களையும் விட இந்த கடிதம்தான் மிகவும் சிறப்பானது. நான் உங்களோடு காவிரிக்கரையில் ஆடிய தருணம் , கடலலையோடு கூடிய தருணம் , காதல் மொழி பேசியே கழிந்த தருணம், காற்றுக்கு வழிவிடாது அணைத்த தருணம் எல்லா நினைவுகளும் என் நெஞ்சில் இருக்கின்றன.உங்களைப்பிரிந்த இந்த ஆறுமாதங்களும் அந்த நினைவுகளே என்னை உயிரோடு வைத்துள்ளன. நீங்கள் செய்து தந்த கிளிஞ்சல் கிளிகளை பார்த்து பார்த்துதான் மோட்சம் அடைகிறது என் ஆவி. - (கணவர் மீது தனக்கிருக்கும் காதலை வெளிப்படுத்துகிறாள்)

நீங்கள் துப்பாக்கியுடன் தான் அதிகம் காதல் பழகினீர்கள் அடுத்து என்னுடன். உங்கள் துப்பாக்கிமனைவிக்கு தோட்டாக்கள் பிறந்தது போல தூரத்து மனைவிக்கும் தங்கத்தோட்டா பிறந்துள்ளது ஆம் ஆண் குழந்தை, உங்களைப்போலவே நீண்ட விரலுடனும், சைனா மோப்புடனும் அவன் இப்பொழுதே கை கால்களை உதறி விளையாடும்போதே தெரிகிறது அவனும் உங்களைப்போலவே இராணுவ வீரனாக வருவான் என்று.உங்களைப்போல சாதாரண வீரனாக அல்லாமல் இவனைப்படிக்க வைத்து உயர் அதிகாரியாக்க வேண்டும் என்பதே என் எண்ணம். இவனை நம்முடைய காதல் சின்னமாக மட்டும் நான் பார்க்கவில்லை உங்களுடைய வீரத்தின் சின்னமாகவும் பார்க்கிறேன் நம் தேசத்தின் மகனாக இவனை பார்க்கிறேன். - (கணவரின் வீரத்தைப்பற்றி பறை சாற்றுகிறாள்)

இப்பொழுதே இவனை இராணுவ உடையில் பார்க்க ஆசைப்படுகிறேன் ஏனெனில் உங்களை முதன் முதலில் அந்த உடையில்தான் பார்த்தேன் புகைப்படம் மூலமாக , அந்த உடையில் இருந்ததால்தான் உங்களை திருமணம் செய்யவே ஒப்புக்கொண்டேன் திருமணத்தில் கூட இராணுவ உடையில்தான் உங்கள் கரங்களை பற்ற நினைத்தேன் ஆனால் சம்பிரதாயங்கள் தடுத்ததால் சந்தோஷ தருணத்திலும் சிறு வருத்தம்.நீங்கள் சென்ற முறை காஷ்மீரிலிருந்து வாங்கி வந்த உடையைத்தான் உங்கள் வாசத்தைக்காட்டும் பரிசாக நம் மகனுக்கு அளித்துள்ளேன். நமக்கு பிடித்த விடுதலைப்போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பெயரைத்தான் சூட்ட நினைத்தேன் , எத்தனைக்காலங்கள்தான் பழம் பெருமைகளை பேசிக்கொண்டிருப்பது எனவே சென்ற முறை போரில் மடிந்த உங்கள் சீனியர் ஆபிசர் மேஜர் சரவணன் பெயரை சூட்ட முடிவெடுத்துள்ளேன் இவனும் அவரைப்போலவே சிறந்த வீரனாக வருவான் என்று நம்புகிறேன். - (தேசத்தின் மீது தனக்கிருக்கும் நாட்டுப்பற்றை தெளிவு படுத்துகிறாள்)

போர் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நான் தினமும் கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறேன், உங்கள் உயிரைக்காக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வதற்க்கு அல்ல தங்களின் ஒரு சொட்டு இரத்தம் கீழே விழுவதற்கு முன்பு குறைந்தது ஆயிரம் எதிரிகளின் குருதி குடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற வரம் கேட்டு, நம் நாட்டின் ஒரு பிடி மண்ணைக்கூட அந்த திமிர்க்கூட்டம் அள்ளக்கூடாது , அந்தக் குள்ளநரிக்கூட்டத்தின் நிழல் கூட இந்த மண்ணில் படக்கூடாது, நம் தாய்த்திரு நாட்டின் கொடி ஒரு அங்குலம் கூட தாழ்ந்து பறக்கக்கூடாது. கவலைப்படாதீர்கள் காளிதேவி அருள் புரிவாள், போரில் என் நினைவு வந்தால் உங்கள் துப்பாக்கியை முத்தமிடுங்கள் அது என்னைச்சேரும் , போரில் நீங்கள் இறந்து நாடு வெற்றி பெற்றிருந்தால் பெருமைப்படுவேன் நீங்கள் உயிரோடு இருந்து நாடு தோற்றிருந்தால் உங்கள் மனைவி என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்படுவேன் , உங்கள் புகழைச்சொல்லித்தான் நம் மகனை வளர்க்க வேண்டும். ஆகவே உயிரோடு வருகிறீர்களோ இல்லையோ புகழோடு வாருங்கள் கர்ணனைப்போல் போரிடுங்கள் எதிரியிடம் சிக்கிவிடாதீர்கள் உங்கள் உயிரற்ற உடல் வேண்டுமானாலும் அவனிடம் சிக்கலாம் நீங்கள் சிக்கக்கூடாது. போருக்குகிளம்பும்போது என் கடிதத்தை படிக்க நேரமிருக்காதுதான் இருந்தாலும் ஒருமுறை என் கடிதத்தை முத்தமிடுங்கள். மறவாதீர் உங்களுக்குப்பிறகு இந்த நாட்டைக்காக்க இன்னுமொரு மாவீரன் பிறந்துவிட்டான் . துப்பாக்கிச்சத்தம் என் காதுகளில் ஒலிக்கிறது களம் புகுந்திடுங்கள் வெற்றி நாட்டுக்கே. - (கணவன் போர்க்களத்தில் துவண்டுவிடக்கூடாதென்று உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கிறாள்)

இப்படிக்கு தங்கள் மனைவி
ருத்ரா...


கலிங்கத்துப்பரணி என்ற குறும்படத்தில் இராணுவத்தில் பணியாற்றும் தன் கணவருக்கு ஒரு மனைவி எழுதுகின்ற கடிதம்தான் இது இதன் பிறகு வரும் இறுதி காட்சிகளை வீடியோவில் காணுங்கள்.




குறும்படம் பற்றி

நிறைய குறும்படங்கள் பார்ப்பதுண்டு மிகப்பிடித்த குறும்படங்கள் எல்லாவற்றையும் பிறகொருநாள் திரும்பவும் பார்த்து ரசிக்கலாம் என்ற நோக்கில் சேமித்து வைத்து வருகிறேன் அதுபோல இந்த குறும்படத்தையும் ஜஸ்ட் லைக்தட் என்று போய் விட முடியவில்லை. பதிவு செய்ய நினைத்தேன், செய்துவிட்டேன். A Genuine Cinema's Production's என்றுதான் ஆரம்பிக்கிறார்கள் உண்மையில் மிகவும் ஜெனுயூனாகத்தான் எடுத்திருக்கிறார்கள். இதில் நடிப்பை பற்றி கூறுவதற்கொன்றுமில்லை . இந்திய எல்லையில் போராடும் ஒவ்வொரு இராணுவவீரர்களுக்கும், அவர்களின் மனைவியருக்கும் என் சமர்ப்பணம் என்கிறார் இயக்குனர் ஹரீஷ் , கலிங்கத்துப்பரணியென்ற தலைப்பிற்க்கு அவர் சொல்லும் காரணம் கச்சிதம்.சொல்லவந்த கருத்திற்க்காகவும் சொல்லியவிதத்திற்க்காகவும் இயக்குனர் ஹரீஷ்ற்க்கு பாராட்டுகளும் நன்றிகளும் வெல்டன் ஹரீஷ்...! இசை பாண்டிச்சேரி yoofoone studio வைச்சேர்ந்த சுரேஷ் சபாபதியும் , ரவி பிரசாத்தும் அழகாக இசை கோர்த்திருக்கிறார்கள் இறுதிக்காட்சியில் சரியாக 6.45ல் ஆரம்பிக்கும் வயலின் இசை அட்டகாசம் அந்த இடத்தில் காட்சிக்குமட்டுமல்ல இந்த குறும்படத்திற்க்கே உயிர்கொடுத்திருக்கிறார்கள் பாராட்டுக்கள்..! 

இறுதியாக என் கிராமத்தில் இருக்கும் மக்களில் 25 சதவிகிதம் பேர் இராணுவத்தில் பணிபுரிகிறவர்கள்தாம், நண்பர்களின் தந்தைகள், என் வகுப்பறை தோழர்கள், பக்கத்துவீட்டு நண்பர்கள், அடுத்த தெரு நண்பர்கள் , என எங்கள் ஊரிலிருந்து இராணுவத்தில் பணியாற்றும் அத்தனை சகோதரர்களுக்கும் அவர்களின் மனைவியர்க்கும் இந்த நேரத்தில் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெய்ஹிந்த்..!