November 6, 2011

கலிங்கத்துப்பரணி

ஜூலை 17, 1999 


அன்புள்ள கணவருக்கு ஆயிரம் புன்னகைகள், நான் எழுதிய அத்தனை கடிதங்களையும் விட இந்த கடிதம்தான் மிகவும் சிறப்பானது. நான் உங்களோடு காவிரிக்கரையில் ஆடிய தருணம் , கடலலையோடு கூடிய தருணம் , காதல் மொழி பேசியே கழிந்த தருணம், காற்றுக்கு வழிவிடாது அணைத்த தருணம் எல்லா நினைவுகளும் என் நெஞ்சில் இருக்கின்றன.உங்களைப்பிரிந்த இந்த ஆறுமாதங்களும் அந்த நினைவுகளே என்னை உயிரோடு வைத்துள்ளன. நீங்கள் செய்து தந்த கிளிஞ்சல் கிளிகளை பார்த்து பார்த்துதான் மோட்சம் அடைகிறது என் ஆவி. - (கணவர் மீது தனக்கிருக்கும் காதலை வெளிப்படுத்துகிறாள்)

நீங்கள் துப்பாக்கியுடன் தான் அதிகம் காதல் பழகினீர்கள் அடுத்து என்னுடன். உங்கள் துப்பாக்கிமனைவிக்கு தோட்டாக்கள் பிறந்தது போல தூரத்து மனைவிக்கும் தங்கத்தோட்டா பிறந்துள்ளது ஆம் ஆண் குழந்தை, உங்களைப்போலவே நீண்ட விரலுடனும், சைனா மோப்புடனும் அவன் இப்பொழுதே கை கால்களை உதறி விளையாடும்போதே தெரிகிறது அவனும் உங்களைப்போலவே இராணுவ வீரனாக வருவான் என்று.உங்களைப்போல சாதாரண வீரனாக அல்லாமல் இவனைப்படிக்க வைத்து உயர் அதிகாரியாக்க வேண்டும் என்பதே என் எண்ணம். இவனை நம்முடைய காதல் சின்னமாக மட்டும் நான் பார்க்கவில்லை உங்களுடைய வீரத்தின் சின்னமாகவும் பார்க்கிறேன் நம் தேசத்தின் மகனாக இவனை பார்க்கிறேன். - (கணவரின் வீரத்தைப்பற்றி பறை சாற்றுகிறாள்)

இப்பொழுதே இவனை இராணுவ உடையில் பார்க்க ஆசைப்படுகிறேன் ஏனெனில் உங்களை முதன் முதலில் அந்த உடையில்தான் பார்த்தேன் புகைப்படம் மூலமாக , அந்த உடையில் இருந்ததால்தான் உங்களை திருமணம் செய்யவே ஒப்புக்கொண்டேன் திருமணத்தில் கூட இராணுவ உடையில்தான் உங்கள் கரங்களை பற்ற நினைத்தேன் ஆனால் சம்பிரதாயங்கள் தடுத்ததால் சந்தோஷ தருணத்திலும் சிறு வருத்தம்.நீங்கள் சென்ற முறை காஷ்மீரிலிருந்து வாங்கி வந்த உடையைத்தான் உங்கள் வாசத்தைக்காட்டும் பரிசாக நம் மகனுக்கு அளித்துள்ளேன். நமக்கு பிடித்த விடுதலைப்போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பெயரைத்தான் சூட்ட நினைத்தேன் , எத்தனைக்காலங்கள்தான் பழம் பெருமைகளை பேசிக்கொண்டிருப்பது எனவே சென்ற முறை போரில் மடிந்த உங்கள் சீனியர் ஆபிசர் மேஜர் சரவணன் பெயரை சூட்ட முடிவெடுத்துள்ளேன் இவனும் அவரைப்போலவே சிறந்த வீரனாக வருவான் என்று நம்புகிறேன். - (தேசத்தின் மீது தனக்கிருக்கும் நாட்டுப்பற்றை தெளிவு படுத்துகிறாள்)

போர் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நான் தினமும் கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறேன், உங்கள் உயிரைக்காக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வதற்க்கு அல்ல தங்களின் ஒரு சொட்டு இரத்தம் கீழே விழுவதற்கு முன்பு குறைந்தது ஆயிரம் எதிரிகளின் குருதி குடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற வரம் கேட்டு, நம் நாட்டின் ஒரு பிடி மண்ணைக்கூட அந்த திமிர்க்கூட்டம் அள்ளக்கூடாது , அந்தக் குள்ளநரிக்கூட்டத்தின் நிழல் கூட இந்த மண்ணில் படக்கூடாது, நம் தாய்த்திரு நாட்டின் கொடி ஒரு அங்குலம் கூட தாழ்ந்து பறக்கக்கூடாது. கவலைப்படாதீர்கள் காளிதேவி அருள் புரிவாள், போரில் என் நினைவு வந்தால் உங்கள் துப்பாக்கியை முத்தமிடுங்கள் அது என்னைச்சேரும் , போரில் நீங்கள் இறந்து நாடு வெற்றி பெற்றிருந்தால் பெருமைப்படுவேன் நீங்கள் உயிரோடு இருந்து நாடு தோற்றிருந்தால் உங்கள் மனைவி என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்படுவேன் , உங்கள் புகழைச்சொல்லித்தான் நம் மகனை வளர்க்க வேண்டும். ஆகவே உயிரோடு வருகிறீர்களோ இல்லையோ புகழோடு வாருங்கள் கர்ணனைப்போல் போரிடுங்கள் எதிரியிடம் சிக்கிவிடாதீர்கள் உங்கள் உயிரற்ற உடல் வேண்டுமானாலும் அவனிடம் சிக்கலாம் நீங்கள் சிக்கக்கூடாது. போருக்குகிளம்பும்போது என் கடிதத்தை படிக்க நேரமிருக்காதுதான் இருந்தாலும் ஒருமுறை என் கடிதத்தை முத்தமிடுங்கள். மறவாதீர் உங்களுக்குப்பிறகு இந்த நாட்டைக்காக்க இன்னுமொரு மாவீரன் பிறந்துவிட்டான் . துப்பாக்கிச்சத்தம் என் காதுகளில் ஒலிக்கிறது களம் புகுந்திடுங்கள் வெற்றி நாட்டுக்கே. - (கணவன் போர்க்களத்தில் துவண்டுவிடக்கூடாதென்று உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கிறாள்)

இப்படிக்கு தங்கள் மனைவி
ருத்ரா...


கலிங்கத்துப்பரணி என்ற குறும்படத்தில் இராணுவத்தில் பணியாற்றும் தன் கணவருக்கு ஒரு மனைவி எழுதுகின்ற கடிதம்தான் இது இதன் பிறகு வரும் இறுதி காட்சிகளை வீடியோவில் காணுங்கள்.




குறும்படம் பற்றி

நிறைய குறும்படங்கள் பார்ப்பதுண்டு மிகப்பிடித்த குறும்படங்கள் எல்லாவற்றையும் பிறகொருநாள் திரும்பவும் பார்த்து ரசிக்கலாம் என்ற நோக்கில் சேமித்து வைத்து வருகிறேன் அதுபோல இந்த குறும்படத்தையும் ஜஸ்ட் லைக்தட் என்று போய் விட முடியவில்லை. பதிவு செய்ய நினைத்தேன், செய்துவிட்டேன். A Genuine Cinema's Production's என்றுதான் ஆரம்பிக்கிறார்கள் உண்மையில் மிகவும் ஜெனுயூனாகத்தான் எடுத்திருக்கிறார்கள். இதில் நடிப்பை பற்றி கூறுவதற்கொன்றுமில்லை . இந்திய எல்லையில் போராடும் ஒவ்வொரு இராணுவவீரர்களுக்கும், அவர்களின் மனைவியருக்கும் என் சமர்ப்பணம் என்கிறார் இயக்குனர் ஹரீஷ் , கலிங்கத்துப்பரணியென்ற தலைப்பிற்க்கு அவர் சொல்லும் காரணம் கச்சிதம்.சொல்லவந்த கருத்திற்க்காகவும் சொல்லியவிதத்திற்க்காகவும் இயக்குனர் ஹரீஷ்ற்க்கு பாராட்டுகளும் நன்றிகளும் வெல்டன் ஹரீஷ்...! இசை பாண்டிச்சேரி yoofoone studio வைச்சேர்ந்த சுரேஷ் சபாபதியும் , ரவி பிரசாத்தும் அழகாக இசை கோர்த்திருக்கிறார்கள் இறுதிக்காட்சியில் சரியாக 6.45ல் ஆரம்பிக்கும் வயலின் இசை அட்டகாசம் அந்த இடத்தில் காட்சிக்குமட்டுமல்ல இந்த குறும்படத்திற்க்கே உயிர்கொடுத்திருக்கிறார்கள் பாராட்டுக்கள்..! 

இறுதியாக என் கிராமத்தில் இருக்கும் மக்களில் 25 சதவிகிதம் பேர் இராணுவத்தில் பணிபுரிகிறவர்கள்தாம், நண்பர்களின் தந்தைகள், என் வகுப்பறை தோழர்கள், பக்கத்துவீட்டு நண்பர்கள், அடுத்த தெரு நண்பர்கள் , என எங்கள் ஊரிலிருந்து இராணுவத்தில் பணியாற்றும் அத்தனை சகோதரர்களுக்கும் அவர்களின் மனைவியர்க்கும் இந்த நேரத்தில் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெய்ஹிந்த்..!

7 comments:

வெளங்காதவன்™ said...

நல்லாஇருக்கு மச்சி..

:)

middleclassmadhavi said...

நெகிழ வைக்கவும் பெருமைப்படவும் வைக்கும் கதை - அல்ல நிஜம்.
பகிர்வுக்கு நன்றி!

rajamelaiyur said...

அருமை ..

ஹேமா said...

எத்தனயோ எம் போர்க்கால நினைவுகளை அசைபோட வைக்கிறது உங்கள் குறும்படம்.நன்றி வசந்து !

சுசி said...

உ பி.. அசத்தலா எழுதி இருக்கிங்க.

அப்படியே நினைவுகள் சுழலுது :(

இந்திரா said...

அசத்தலான பதிவு

சாந்தி மாரியப்பன் said...

அசத்தலான விமர்சனம்..

நம்ம நாட்டுக்காக இப்படி தியாகம் செய்யும் குடும்பத்தினர் எத்தனை எத்தனையோ.. அவர்கள் அனைவருக்கும் நானும் நன்றியைத் தெரிவிச்சுக்கறேன்.