January 31, 2010

காக்கா பற பற...



காக்காவுக்கு சோறு வைக்கபோனேனா திடீர்ன்னு ஒரு காக்கா
என்னோட சுக துக்கமெல்லாம் கேக்க ஆளே இல்லியான்னு கரைஞ்சுகிட்டே இருந்துச்சு என்னடா காக்கா காக்கான்னுதானே கரையும் இது என்னடா புதுசா கரையுதுன்னு கிட்ட போய் பார்த்தா ஒரு காக்கா நிஜமாவே பொலம்பிட்டுத்தான் இருந்துச்சு...என்ன சிரிப்பு எனக்குத்தான் மிருக பாஷை தெரியும்ன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமே அப்புறமென்ன இளிப்பு வேண்டி கெடக்கு இளிப்பு முதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்றத கேளுங்க சாமியோவ்....

அப்பிடியே அவர அமுக்கி ஒரு சேரைப்போட்டு உக்காரவச்சதும் அழுதுட்டார் ஏன்யா அழுவுறன்னு கேட்டா இம்புட்டு நாளா ஒருத்தருக்கு சேரா இருந்து இருந்து என் முதுகு உடைஞ்சதுதான் மிச்சம் இப்போ எனக்கும் ஒரு சேர் போட்டு உக்கார வச்சுருக்கீங்க ரொம்ப சந்தோசம்ன்னாரு...உங்க பேர் என்னன்னு கேட்டா "கா"னா புகழ் காக்கான்னாரு..


சரி ஏன்யா கரைஞ்சுகிட்டே இருக்கன்னு கேட்டா நான் என்ன நாக்குல போட்ட சக்கரையா கரையுறதுக்குன்னு ஒரு நக்கல் வேற...நாக்கே இல்லை உனக்கு இதுல நக்கல் வேற ஒழுக்கமா சொல்லவந்த விஷயத்தை சொல்லுங்கன்னதுதான் தாமதம் உடனே பொறிஞ்சு தள்ளிட்டாப்ல போன சென்மத்துல அப்பளமா பொறந்துருப்பார் போல..

நானே கருப்பா இருக்குறோம்ன்னு ரொம்ப வருத்தப்பட்டு இருந்தேன் போன வாரம் ஒரு வேலைக்கு (என்ன வேலைன்னெல்லாம் லாஜிக்கா கொஸ்டின் கேக்கப்படாது ஆமா ) அந்த இண்டெர்வியூ போனேனா அங்க கறுப்பு வெள்ளைல எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இருந்தா கொண்டுட்டு வான்னு சொன்னாய்ங்க எனக்கு ஒரே குழப்பமா போச்சு என்னடா நம்ம கறுப்பாத்தானே இருக்கோம் இவன் என்னடான்னா கறுப்பு வெள்ளையில எடுத்த பாஸ்போர்ட் போட்டோ இருந்தா எடுத்துட்டு வான்னு சொல்றான் ஏன் சொல்றான்னு யோசிச்சா ஒண்ணும் தோணலை அதனால வேலை கிடைக்காம போயிடுச்சு நானும் அந்த நாள்ல இருந்து யோசிச்சு யோசிச்சு பார்த்தேன் ம்ஹ்ஹும்...ஒரு வேளை நம்மளையும் நம்ம காலைக்கடன் கழிச்சதையும் ஒண்ணா சேர்த்து கேப்பாய்ங்க போல அப்பிடியா?அதானே என்னோட கறுப்புக்கு மேட்ச்சா வெள்ளையா இருக்கும்ன்னு கேட்டுச்சு எனக்கு அதை அப்பிடியே கொன்னே போட்ருலாம்ன்னு ஒரு வெறி....

அடுத்து ஒண்ணு நாங்க எல்லாரும் எல்லா நாட்டுலயும் ஒரே மொழி பேசறோம் நீங்க என்னடான்னா ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மொழி பேசுறீங்க விட்டா தெருவுக்கு ஒரு மொழி பேசுவீங்க போல...எங்க எல்லாருக்கும் ஒரே மொழி இருக்குறதாலதான் ஒற்றுமையா இருக்கோம் தெரியுமா? உங்களை மாதிரி எப்போ பார் அவன் என்னைய அடிச்சுட்டான் குத்திட்டான்னு நாங்க என்னிக்காவது அப்பிடி சொல்லியிருக்கோமா? ஈவன் நீங்க போடுற சோத்துல விஷம் கண்டு கலந்து வச்சுருக்கிங்களான்னு முதல்ல எங்கள்ல ஒருத்தர் தியாகி சாப்பிட்ட பிறகுதான் மீதியிருக்குற நாங்க எல்லாம் சாப்பிடுவோம்..தெரியுமான்னு கேட்டுச்சு எனக்கு நாக்கை பிடிங்கிகிடலாமான்னு இருந்துச்சு...

பொறவு நாங்க காலையில அலாரம் கூட இல்லாம கரெக்ட்டா ஆறுமணிக்கு எந்திரிச்சு நீங்க போடுற காலை சிற்றுண்டி முடிச்சுட்டு சுறுசுறுப்பா சுத்தி வந்து தலைவர் சிலையெல்லாம் ஒரு ரவுண்ட்ஸ் போய் செக்கப்ப் பண்ணிட்டு அசந்து கொஞ்சம் தூங்கலாம்ன்னு ஒரு அரச மரம் பார்த்து வந்து உக்கார்ந்தா அதுக்கு கீழ உங்க இனத்தை சேர்ந்த பெரியவாள் அந்த மேற்க்குதெருக்காரி ஒரு மாதிரியாமே இந்த கொன்னவாயன் அவள வச்சுருக்கானாமேன்னு உலக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் பேசிட்டு இருக்காய்ங்க இப்போ சொல்லுங்க மரத்துக்கு கீழ இருக்குற மனுசனுங்க மேல ஏன் அசிங்கம் பண்ணிவிடுறோம்ன்னு தெரியுதா? அப்பிடின்னு கேட்டுச்சு எனக்கு நாக்கு வரல.....

ஆமா நீங்க மாடு , ஆடு,கோழி,புறா,பூனை,இதெல்லாம் வளர்க்கிறீர்களே எங்கள ஏன் வளர்க்குறதில்லைன்னு தெரியுமான்னு கேட்டுச்சு எனக்கு தெரியலைன்னேன் உடனே அது நீங்க உங்களுக்குள்ளே காக்கா பிடிச்சுக்குவீங்க ஆனா நிஜமான காக்கா எங்களை பிடிக்க முடியாதே வெவ்வெவ்வே...ன்னு சொல்லிட்டு பறந்து போய்டுச்சுங்க.....



January 29, 2010

இக் லீப திக் கவிதைகள்





தொட்டதும்
எரிந்து
அணையும்
குண்டுபல்பை
போலவே
என் இளமையும்

************************************************************************************



நேர் நேர் தேமா
நேருக்கு நேர் பார்த்தும்
தேறவில்லை ஆமா...

************************************************************************************




இரு வாய்
நிறைய
குடித்தும்
அடங்கவில்லை
தாகம்
மாறாக அடங்கியது
சத்தம்

*************************************************************************************

பூக்காரி தலையில்
வெறும் கொண்டை
பூத்த பூவுக்காக
தினம் சண்டை

***********************************************************************************




புளித்த ஏப்பம்
புசித்தது தப்பானது
புளித்த வாந்தி
தப்பானது புசிக்காமலே...

**************************************************************************************

சட்டென்று
நொடியில் தோன்றி
பூமியில் புதையும்
மின்னலைப்போலவே
காதலும் பல நேரம்...

***********************************************************************************


கண்ணாடி காதலி
கண்ணடிச்சாளாம்
பிம்பத்தோடு
சேர்த்து
மனசும்
உடைஞ்சுபோச்சாம்...

**************************************************************************************



சட்டைப்பை
புகைப்படம்
சத்தமில்லாமல்
சிரிக்கிறது
சத்தம்போடும்
இதயத்தோடு...


January 27, 2010

என் கேள்விக்கென்ன பதில்?


என்னோட மனசுல தோணுற கேள்விகள் இவை இவற்றிற்க்கான விடைகள் உங்களிடம் இருக்கிறதா?

1. கடலுக்காக தண்ணீரா தண்ணீருக்காக கடலா?

2. நேரத்திற்க்காக கடிகாரமா கடிகாரத்திற்க்காக நேரமா?

3. தலைக்காக முடியா முடிக்காக தலையா?

4. மனிதனை படைத்த கடவுள் சிற்பியா கடவுளை படைத்த மனிதன் சிற்பியா?

5.ஆண்களுக்காக பெண்களா பெண்களுக்காக ஆண்களா அல்லது கணவனுக்காக மனைவியா இல்லை மனைவிக்காக கணவனா ?

6.நாம் பசிக்கு சாப்பிடணும்னா இதில் என்ன வேண்டும்?

அ) வாய்

ஆ) வயிறு

இ) சாப்பாடு

ஈ) பணம்

7.கற்புன்றது எதனோடு தொடர்புடையது?

அ) உடுத்தும் உடையில்

ஆ) மனதளவில்

இ) உடலளவில்


8.நீ,வா,போ,வாடா,போடா, இதற்க்கும் நீங்கள் வாருங்கள் போங்கள் என்பதற்க்கும் வார்த்தைகள் மட்டுமே வித்தியாசம் என்றால் மரியாதை என்பதை வார்த்தை அளவில் கொடுத்தால் போதுமா?மரியாதை என்பது வயது சம்பந்தபட்டதா? அல்லது வசதி அந்தஸ்து பொருத்து கொடுக்கப்படுவது மரியாதை என்றால் வசதியில்லாத ஒரு வயதான பெரியவரை வாடா போடான்னும் வசதியா இருக்குற சின்ன பையனை வாங்க போங்கன்னும் சொல்வீர்களா?

9. இலக்கணத்துக்கும் , மனுசனுக்கும் இருக்குற சின்ன மேட்டரோட குழப்பம் எனக்கு பல நேரம் தோணுது...நம்ம பிறப்பை இறந்தகாலம்ன்னும் இறக்கப்போகும் காலத்தை எதிர்காலம்ன்னு இலக்கணம் சொல்வது ஏன்? நடக்கும் நிகழ்காலம் மட்டுமே இரண்டிலும் சரியா இருக்கு இது எப்பிடி எனக்கு புரியலை?ஒரு வேளை இதை புரிஞ்சுகிடுற அளவுக்கு மனப்பக்குவம் எனக்கு வரலியா இல்லை நான் லூஸான்னு தெரில?

10.இன்னிக்கு குளிச்சுட்டு இருக்கும்போது உன்னைப்பத்தி நீ தெரிஞ்சிகிடணும்ன்னா உன்னோட எதிரில் இருக்கும் பொருளிடம் உன்னைப்பற்றி நீயே கேட்டுப்பார்ன்னு யாரோ சொன்னது ஞாபகம் வந்துச்சு இந்த சோப் கிட்ட நம்மளப்பத்தி கேட்டுபார்த்தா என்னன்னு யோசிக்கும்போது சோப் என்கிட்ட கேட்ட கேள்வியெல்லாம் ரொம்ப அபத்தமா இருந்துச்சு...உங்களை பற்றி தெரிஞ்சுகிடணும்ன்னு நினைக்கிறவங்க உங்க சோப்கிட்ட நீங்களே கேட்டு தெரிஞ்சுக்கங்க...

11.காற்று வீசியது புயல் அடித்தது, வெயில் அடிக்குதுன்னு சொல்றாங்களே காற்றுக்கும் புயலுக்கும் வெயிலுக்கும் கை இருக்கா?

12.ஊனமுற்றவங்களை அதாவது மாற்றுதிறன் இருப்பவர்களை நொண்டி,குருடன்,மூடன்னு சொல்றோமே அப்போ அவங்க எல்லாம் சேர்ந்து எல்லாமே நல்லா இருக்குற நம்மளை நல்ல கையன்,நல்ல காலன் , நல்ல கண்னன்னு சொல்லுவாங்களோ?

13.முதியோர் இல்லம் இருக்குறமாதிரி ஊர்சுற்றி இல்லம்ன்னு வெட்டியா ஊர்சுத்துறவங்களுக்கும் ஒரு இல்லம் இருந்திருந்தா பெத்தவங்க வேலையில்லாத புள்ளைய அங்க போய் சேர்த்துருப்பாங்களோ?

யாரும் என்னைய அடிக்க கல்லெடுக்காதீங்க நான் பாவம் ஆமா......


January 26, 2010

PAதில் இருக்கா? வாங்க கண்டுபிடிக்கலாம் வார்த்தை விளையாட்டு 3...




இம்முயற்சி சிறிது வித்தியாசமான முயற்சி
வார்த்தை விளையாட்டு கீழேயுள்ள மாதிரியை போன்று கேட்க்கப்பட்ட வினாக்களுக்கு சரியான வார்த்தை (ஆங்கிலம் தமிழ் எதிலாவது) கண்டுபிடியுங்கள்....


மாதிரி1



மாதிரி 2


மாதிரி 3


வினா 1



வினா 2

வினா 3

வினா 4

வினா 5

வினா 6

வினா 7

வினா 8

வினா 9

வினா 10

புரியாதவர்கள் இந்த இரண்டு பதிவுகளுக்கும் சென்று படித்து வாருங்கள்



January 23, 2010

அன்புள்ள கிறுக்கன்!!!


நான் கலந்த வண்ணம்
அவள் அழகென்றாள்
வாசமாய் என் பெயர்
தினம் தினம் தன் வாசல்
வருதென்கிறாள்..!

காதலாய் காற்றாய்
நிலவாய் வானமாய்
பூவாய் புற்களாய்
சந்தோசத்தின்
அத்தனை இயல்பிலும்
என்பெயராம்...
அங்கெல்லாம்
என்னை கண்டு
களவெடுத்தேன் என்கிறாள்...!

குனிந்து கொள்
குட்டவேண்டுமென்கிறாள்
சரி என்றேன்...!

கன்னம் காட்டு
முத்தமிட என்றாள்
மெய்யணைத்து
மெல்ல கன்னம் சரித்து
கிட்ட சென்று
கட்டிக்கொண்டேன்...!

எப்படித்தான்
திட்டினாலும்
என்னடா ?
என்பதோடு சரி..!

ஆசையாய்
ஆயிரம் பெயர்வைத்தும்
கடைசியில்
அன்புள்ள கிறுக்கனாய் நீ
என்றாள்...!


January 22, 2010

சில குணங்கள் GIFS



தலைமுடி


funny animated gif

இருப்பது உயரத்திலென்றாலும்
வணங்கி கொடுக்கிறது
துளியும் கர்வமின்றி...

******************************************************************************
நெற்றி

பௌர்ணமி வரும்
வளர்பிறை வானம்

******************************************************************************

இமை

funny animated gif

கண்களின்
இரவுப்போர்வை

******************************************************************************

கண்



காதல்
கருவறை

*****************************************************************************

காது



இசையும் வசையும்
பிரித்தறியதெரியா பிசாசு

******************************************************************************

மூக்கு



ஒட்டடையடையா
ஓட்டை..

****************************************************************************

உதடு



வார்த்தைகளின் வழி
வியர்வைக்கில்லை வழி

*****************************************************************************

நாக்கு

funny animated gif

32 காவல் காரர்கள்
காவலிலிருக்கும்
மதம் பிடித்த மிருகம்

*****************************************************************************

கழுத்து

சில நேரம் மிடுக்குக்குக்கு
சிலநேரம் கொலைக்கு
பல நேரம் அரைவட்ட
கடிகாரம்...

******************************************************************************

தோள்

அன்பு
சுமக்கும்
பாரவண்டி...

*******************************************************************************

கைகள்

funny animated gif

கொடுக்க
பறிக்க
அணைக்க
நன்மைதீமையறியா
சேவகன்...

*******************************************************************************

கால்கள்

funny animated gif

போகாத இடம்
போய் பழகும்
நடை வண்டி...

******************************************************************************

January 20, 2010

பப்புவோடு ஒரு நாள்



ஹாய் மாம்ஸ் எப்படியிருக்க? சுகமா என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம் நான் கேட்ட இந்த கேள்விக்கெல்லாம் பதில் தெரியாம சுத்திட்டு இருக்க போல அப்பிடின்னு என்னை கிண்டல் பண்ணிட்டேவும்

மாம்ஸ் கண்ணடிச்சா காதல் வரும்ன்னு சொல்றாங்களே அப்பிடின்னா என்ன மாம்ஸ் எங்க சொல்லு பார்க்கலாம்ன்னான் டேய் பப்பு மனிதனோட ஒரு கண்ணு +,ஒரு கண்ணு -, இப்போ அங்கிட்டு அதாவது காதலனோட பாஸிட்டிவ் கண்ணு மூடுது இங்கிட்டு காதலியோட நெகடிவ் கண்ணு மூடுது அப்போ மீதியிருக்கிற ஒரு பாஸிட்டிவ் கண்ணும் ஒரு நெகட்டிவ் கண்ணும் சேர்ந்து அங்க காதல்ன்ற பல்பு எரியுது மாப்ஸ்ன்னதும் இது செம்ம மொக்க நீ எலக்ட்ரிகல் படிச்சிருக்கன்றதுக்காக இப்பிடியான்னு கேட்டுட்டு எம்மேல சுடுதண்ணிய ஊத்திட்டான்....


பிறகு நம்ம பதிவுலக ராணி ஆஸி தூயா எங்கிட்ட ஒரு கவிதை சொல்லி இது என்னான்னு கேட்டாங்கடா பப்பு எனக்கு எதுவும் புரியல உனக்கு தெரிஞ்சா சொல்லேண்டா டேய் பப்பு ப்ளீஸ் சொல்லுடா இல்லைன்னா என்னை ஜெயில்ல போட்ருவாங்கடா அந்த ஆஸி போலீஸ்ன்னு இவன்கிட்ட சொன்னேன் அதுக்கு அவன் நீதான் கவிதையெல்லாம் எழுதுறியே உனக்கு தெரியாதான்னு கேட்டான் டேய் பப்பு சாதரண கவிதையே எனக்கு புரியாது இது எனக்கு சுத்தமா புரியலடா உனக்குதெரியுமான்னதும், எங்க கவிதைய சொல்லு பார்க்கலாம்ன்னு கேட்டான் நானும் சொன்னேன்

தொலைதூர நெடும்பயணம்
வழியில் தவழும் சிறு குழந்தை
அள்ளி அணைத்துகொள்கிறேன்
தோளில் மறைந்து மிரள்கிறது
துரத்தும் வழிகள்
நானும் மிரள்கிறேன்
காரணம் வலிக்கிறது

-தூயா பாபா



ம்க்கும் இதுமாதிரி கவிதைக்கெல்லாம் அர்த்தம் தெரிஞ்சா நானெல்லாம் எதுக்கு உங்கூட பழக்கம் வச்சிருக்கேன்ன்னு செவுட்டுல அறைஞ்சிட்டான் உங்களுக்கு எதுனாலும் புரிஞ்சதான்னு சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ் புரிஞ்சிருந்தா இந்த கவிதைய நீங்க எப்படி புரிஞ்சிட்டீங்கன்னு அர்த்தம் சொல்லவும்....

நன்றி...



January 19, 2010

ம்க்கும் கவிதை...




காலங்கள்


அரிக்கேன் விளக்கு இறந்தகாலம்(பிறப்பு)

கேஸ் ஸ்டவ் நிகழ்காலம்(வாழ்க்கை)
விறகும் சில நேரம்
மண்ணெண்ணையும்
எதிர் காலம் (இறப்பு)
மாந்தர்க்கு...

புவி(உயிர்) ஈர்ப்புவிசை



புவியும் ஆணும் காந்தமில்லை
ஆப்பிளும் பெண்ணும் இரும்பும் இல்லை
ஆனாலும் ஈர்த்து கொண்டது
இரண்டு ஜோடிகளும்
அந்தோ...சுவைக்கவுமில்லை...

அகந்தை



வென்றவனைப்பார்த்தும்
வரவில்லை அகந்தை
பொறாமை
வயிற்றெரிச்சல்
சு(ய)க வீனம் என்று
எனக்கு நானே
சொல்லிப்பார்த்தேன்
அப்பொழுதும் அகந்தை வரவில்லை
இப்பொழுது எனக்கு
அகந்தை பிடித்திருக்கிறது
அகந்தையில்லை என்ற அகந்தை

அந்தஸ்து


அந்தஸ்தும் நற்பெயரும்
தானாக கிடைக்காது
என்று தெரிந்து
முட்டி மோதி முயற்சித்த
பின்பும்
கிடைக்கவில்லை
தற்சமயம் கொடுத்த விருந்துக்கோ
இல்லை
கொடுத்த விலைக்கோ கிடைக்கிறது
புற வாசலில்

பந்து



பந்தும் மனிதனும்
ஒன்றுதான்
கிடைத்தவர்கள் கையிலிருந்து
எப்பொழுது வேண்டுமானாலும்
தூக்கிவீசப்படலாம்
அதுக்குரிய தேவையில்லாத
பொழுதுமட்டுமல்ல
தேவையிருக்கும்பொழுதும்...
அது கிடைப்பவர்கள்
கைகளை பொருத்து....

நாணயமும் தானமும்




இருப்பவன் கொடுக்கிறான்
இல்லாதவன் வாங்குகிறான்
இடையில் நாம்யார்
தட்டிப்பறிக்க
தலையுமில்லை
பூவுமில்லை...
ஆனால் பிடுங்க கையிருக்கிறது...
பிடிங்கியதை தின்ன வாயுமிருக்கிறது
அதை செரிக்கத்தான் வயிறு இல்லை


January 17, 2010

நீங்கள் சரவணனாக, ராஜாவாக, ராம்குமாராக, பாமாவாக, மாலதியாக இருந்திருந்தால் உங்கள் மன நிலை என்ன?

கவிதாவும் பாஸ்கரும் உடன் பிறப்புக்கள் பாஸ்கரோட நண்பன் சரவணன் , சரவணன் அடிக்கடி பாஸ்கர் வீட்டுக்கு வந்து போயிட்டு இருக்கான், சரவணனோட கலகல ரவுசு பிடிச்சுப்போய் கவிதா சரவணன காதலிக்கிறாள் ஒருதலையாக...ஒரு நாள் சரவணன் கவிதாவோட வீட்டுக்கு வரும்பொழுது பாஸ்கர் எங்கன்னு கவிதாவிடம் சரவணன் கேட்க வெளியில போயிருக்கான்னு சொல்லிட்டே அவன இருக்கி அணைச்சு உதடோடு உதடா முத்தம் குடுக்கிறாள்.....


ராஜா வயது 29 திருமணவயது , நல்லவன் நல்லவனாக காட்டிக்கொள்ளவும் விரும்புவன் ஒரு நல்ல நாளில் பெண்பார்க்க அம்மாவோட போகிறான், போகும் வழியெல்லாம் கட்டிக்கப்போறவள் இப்படி இருக்கணும் ,அழகா இருக்கணும்,கொஞ்சும் குரல்ல பேசணும் , நல்ல குடும்ப பெண்ணா இருக்கணும் இப்படி பல எதிர் பார்ப்போடு போய்ட்டு இருக்கான், அடிக்கடி சிரிச்சிக்கிறான் அவங்கம்மாவும் அக்காவும் தம்பியும் கிண்டல் பண்ணிட்டே வர்றாங்க திடீர்ன்னு அவங்க போயிட்டு இருக்குற கார் மரத்தில மோதி ராஜாவைத்தவிர யாரோட உயிருமே மிஞ்சலை....


தங்கப்பாண்டியும் ராம்குமாரும் சிறு வயசுல இருந்தே இணைபிரியா நண்பர்கள் ராம்குமார் நல்ல வசதியானவன்,தங்கப்பாண்டி ஒருநாள் தன்னோட தொழில் விருத்திக்காக ராம்குமார்கிட்ட 10லட்சம் கடனா வாங்குறான் எந்த ஒரு பிணையும் இல்லாம தங்கப்பாண்டிமேல இருக்கிற அதீத நம்பிக்கையில ராம்குமார் அந்தப்பணத்தை கொடுக்கிறான்.ஒரு வருசம் போனபிறகு ராம்குமரோட பிஸினெஸ் படுத்திடுச்சு தங்கப்பாண்டி ஓஹோன்னு வந்திட்டான் இப்போ ராம்குமார் தங்கப்பாண்டிகிட்ட உதவி கேட்க்கப்போறான் அவன் உதவி செய்வானோ செய்ய மாட்டானோன்ற குழப்பத்திலயே போய் அவன்கிட்ட உதவி கேட்கிறான் அப்போ தங்கப்பாண்டி அவனோட சொத்தெல்லாம் ராம்குமாருக்கு எழுதிகுடுத்திடுறான்....


பாமா பத்தாவது படிக்கிறாள், மாதத்தேர்வு,காலாண்டு,அரையாண்டு,எந்த தேர்விலயும் முழுசா பாசானதே இல்லை , எல்லாமே அவுட் இது தெரிஞ்சு அவங்கப்பா ஸ்பெசல் கிளாஸ் அது இதுன்னு ஏற்பாடு பண்ணி நல்லா கோச்சிங்க் குடுக்கிறாங்க முழுஆண்டு தேர்வுக்காக , முழுஆண்டு தேர்வும் வந்திடுச்சு தமிழ். ஆங்கிலம், கணிதம் தேர்வெல்லாம் முடிஞ்சது அறிவியல் பரிட்ச்சை அன்னிக்கு அதிகாலை பாமாவோட அப்பா செத்துப்போயிட்டார்....


மாலதிக்கும்,நிரஞ்சனுக்கும் திருமணமாகி ஐந்து வருடமாச்சு குழந்தைப்பேறே இல்லை , இதுக்காக அவங்க வேண்டாத கடவுள், சுத்தாத கோவில் இல்லை ஒரு நல்ல நாளில் மாலதி கருவுருகிறாள் குழந்தை வயிற்றிலிருக்கும் ஒவ்வொரு நாளும் நிரஞ்சன் மாலதியை ராணியாக கொண்டாடுறான் பிறக்கப்போகிற குழந்தைக்கு பெயர் வைக்கிறாங்க, துணி, பொம்மையெல்லாம் வீடு நிறைய வாங்கி வைக்கிறாங்க பிரசவத்துக்காக ஆஸ்பத்திரி போறாங்க பிரசவமும் நல்லபடியா ஆச்சு ஆனா குழந்தை இறந்து பிறந்திருச்சு..அதே நாள் நிரஞ்சன் ஒரு விபத்தில கால் இழந்திட்டார்....


இப்படி வாழ்வில் எதிர்பாராத அன் எக்ஸ்பெக்ட்டட் விஷயங்கள் நடக்கும்போது நீங்கள் சரவணனாக, ராஜாவாக, ராம்குமாராக, பாமாவாக, மாலதியாக இருந்திருந்தால் உங்கள் மன நிலை என்ன? அப்போ வாழ்க்கையில நாம் நினைக்கிற விஷயங்கள் மட்டுமே நடக்கணும்ன்னு நினைக்கிறது எந்தவிதத்தில் சரி? இதைப்போன்ற எதிர்மறை விஷயங்களும் நடக்கலாம் அதுக்கேற்றவாறு நடந்து கொள்வது எப்படின்னு தயார் படுத்திக்கிடுறது நல்லதா? கெட்டதா?



January 15, 2010

தாலி கட்டிய மிஸ்..!








மிஸ்டர் மனிதன் : மிஸ் .பசு உங்களுக்கு இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்


மிஸ் பசு : நன்றி மனிதா அப்புறம் ஒண்ணு கேக்குறேன் நீங்களும்தான் நேத்து உங்களுக்காக பொங்கல் வச்சீங்க அதை மட்டும் வெறும் பொங்கல்ன்னு சொல்றீங்க எங்க பொங்கல மட்டும் மாட்டுப்பொங்கல்ன்னு சொல்றீங்க அப்போ உங்களுக்கு வைக்கிற பொங்கல மனுஷ பொங்கலுன்னுதான சொல்லணும் ஏன் அப்படி சொல்லல ? என்னமோ போங்க உங்களுக்கு ஒரு ரூல்ஸ் எங்களுக்கு ஒரு ரூல்ஸா?

மிஸ்டர் மனிதன் : சரி சரி நீங்க மிஸ்ஸா? இல்ல மிஸ்ஸஸா?

மிஸ் பசு : நான் மிஸஸா ஆகுறதுக்கு எப்போ நீங்க எனக்கு கல்யாணம் பண்ணிவச்சீங்க பொறந்ததில இருந்து சாகுற வரைக்குமே மிஸ்தான்...என்ன நாங்க தாலி கட்டிய மிஸ்...



மிஸ்டர் மனிதன் : ஓஹ் அது ஒரு குறையா தெரியுதா உங்களுக்கு? நல்லதுன்னு நினைச்சுக்கங்க எங்க மனிதர்களில் கல்யாணம் பண்ணிட்டு ஒவ்வொரு குடும்பத்தலைவிகளும் படுற பாடு பார்க்குறீங்கதானே...!

மிஸ் பசு : ஆமா ஆமா பாவம்பா அவங்களும் அதுவும் சரிதான்...

மிஸ்டர் மனிதன் : அது சரி இந்த மாட்டுப்பொங்கல் பத்தி என்ன நினைக்கிறீங்க?

மிஸ் பசு : என்னங்க இது வருசம் பூரா புண்ணாக்கும் , வைக்கோலும் குடுக்கிறீங்க இந்த ஒரு நாள்மட்டும் சம்பிரதாயத்துக்காக எங்களுக்குன்னு பொங்கல் வைக்கிறீங்க அதும் கொஞ்சூண்டு மீதியெல்லாம் நீங்களே சாப்ட்டுறீங்க..இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம் வாரம் ஒரு நாளாவது நல்ல சாப்பாடு குடுத்தா குறைஞ்சா போயிடுவீங்க? உப்பு சப்பில்லாம தின்னு தின்னு நாக்கு செத்து போய்கிடக்கு...பிறகு கொம்புல பெயிண்ட் அடிக்கிறீங்க ஏங்க அது இயற்கையா எங்களுக்கு இருக்கிறது அதுக்கு போய் ஏனுங்க பெயிண்ட் அடிச்சு நாசம் பண்றீங்க ? நீங்கதான் தலைக்கு கலர் கலரா பெயிண்ட் அடிச்சுட்டு ஃபேசன்னு திரியுறீங்கன்னா எங்களுக்குமா?



மிஸ்டர் மனிதன் : பெயிண்ட் அடிச்சா கொஞ்சம் புதுசா தெரிவீங்களேன்னுதான் எல்லாம் உங்க நல்லதுக்குத்தான...

மிஸ் பசு : சரி எல்லாம் இன்னிக்கு செய்றீங்க இன்னிக்கு ஒரு நாளாவது எங்களுக்கு ஒரு புது சட்டதுணி எடுத்து போட்டுவிடணும்ன்னு தோணலியா? எத்தனை நாளைக்குத்தான் இப்பிடி சேம் சேம் பேபி சேமா திரியுறது? நீங்களும் எங்களைப்போல இருந்தீங்க பிறகு அந்த எக்ஸ்ட்ரா ஒரு அறிவ வச்சு சட்ட துணியெல்லாம் போட்டுகிட்டீங்க எங்களுக்கும் அதுபோல போட்டுவிடணும்ன்னு அந்த எக்ஸ்ட்ரா ஒரு அறிவு சொல்லலியா?



மிஸ்டர் மனிதன் : அப்புறம் உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்யாசம்?

மிஸ் பசு : உங்களுக்கு இருக்கிறதும் உசிருதான் எங்களுக்கு இருக்கிறது உசிருதான் மானம்ன்றது எல்லாருக்கும் பொதுதானே...

மிஸ்டர் மனிதன் : அதுக்காக..விட்டா எங்களுக்கும் வீடு டாய்லெட் இதெல்லாம் கட்டி குடுங்கன்னு கோரிக்கை வைப்பீங்க போல..!

மிஸ் பசு : ஏன் கேட்டா என்ன தப்பு? எங்கள வச்சு காசு சம்பாரிச்சு நீங்க இருக்கிறதுக்கு வீடுகட்டி சுகமா இருக்கீங்க நாங்க கேட்டா தப்பா? அட்லீஸ்ட் டாய்லெட்டாவது கட்டி குடுக்கலாம்ல...!



மிஸ்டர் மனிதன் : அதெப்பிடி உங்களுக்கு ஆர்டினரி,வெஸ்டர்ன் ரெண்டு டைப்பும் ஒத்துவராதே உங்களுக்குன்னு ஒண்ணு புதுசா கண்டுபிடிச்சாத்தான் உண்டு..

மிஸ் பசு : என்னென்னமோ எல்லாம் கண்டுபிடிக்கிறீங்க இது கண்டுபிடிக்க முடியாதா?

மிஸ்டர் மனிதன் : சரி சரி அதவிடுங்க உங்களுக்கு பிடிச்ச ஹீரோ யாருன்னு சொல்லுங்களேன்..

மிஸ் பசு : ரொம்ப முக்கியம் எங்களுக்கு ராமராஜனவிட்டா வேற யாரையும் தெரியாதுங்க...பாவம் அவர் ஒருத்தர்தான் எங்கள புரின்சுகிட்டவர் அவரையும் மூலையில உட்கார வச்சுட்டீங்க எங்களுக்கும் ஓட்டுபோடுற தகுதியிருந்திருந்தா ராமராஜனைத்தான் முதல்வராக்கியிருப்போம்....

மிஸ்டர் மனிதன் : உங்களுக்கு பிடிச்ச பழமொழி

மிஸ் பசு : ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுறமாட்ட பாடிக்கறக்கணும்

மிஸ்டர் மனிதன் : பாட்டுன்னதும் ஞாபகம் வருது உங்களுக்கு பிடிச்ச பாட்டு எது?

மிஸ் பசு : வந்தேண்டா பால்காரன் இந்த பாட்டுலதான் எங்களோட நிலமைய சரியா சொல்லியிருப்பாங்க...

மிஸ்டர் மனிதன் : சரிங்க உங்களை பேட்டி எடுத்ததில ரொம்ப சந்தோசம் மீண்டும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்...

மிஸ் பசு : மனுச பொங்கல் நாங்களும் கொண்டாடுற நாள் வரும் அன்னிக்கு வந்து திரும்ப நானே உங்களை மீட் பண்றேன்...!





January 11, 2010

வலைப்பதிவராகிறார் விஜய்


வணக்கம் விஜய் சார் எப்படியிருக்கீங்க?

நான் நல்லா இருக்கேன் சன் டிவி புண்ணியத்தில...


இப்போ நாங்க உங்கள ஒரு வலைப்பதிவாளரா சந்திக்கிறதுல மிக்க மகிழ்ச்சி என்ன திடீர்ன்னு வலைப்பதிவு ஆரம்பிக்கபோறேன்னு அறிக்கை விட்ருக்கீங்க என்ன சமாச்சாரம்?


நான் என் வழியில போயிட்டு இருந்தேன் இந்த வலைப்பதிவர்கள் எல்லாம் என்னை சீண்டிப்பாக்குறாங்க அதான் அவங்களுக்கு போட்டியா நானும் வந்திட்டேன்...

சரிங்க விஜய் சார் திடீர்ன்னு வலைப்பதிவாளராயிட்டீங்க இப்போ இங்க உங்களோட திறமையெல்லாம் எப்படி காட்டப்போறீங்க ?

முதல்ல மகேஷ் பாபு தெலுங்குல வலைப்பதிவு எழுதுறதா கேள்விப்பட்டேன் இப்போ முதல் வேலையா அவர் எழுதுன பதிவுகள எது அவருக்கு அதிக ஹிட்ஸ் வாங்கி கொடுத்துச்சோ அந்த பதிவ தமிழ்ல மொழிபெயர்த்து வெளியிடப்போறேன்.

இங்கேயுமா சார்?

இதுல என்ன இருக்கு அதுக்கு அவருக்கு பணம் கொடுத்து காப்பிரைட்ஸ் வாங்கிக்கப்போறோம் அவ்வளவுதானே..

படம் மாதிரியே பதிவும் ஊத்திக்கிச்சுன்னா என்னாபண்ணுவீங்க விஜய் சார்?

சும்மாவே என்னோட பேர் போட்டு இது மாதிரி ஒரு மொக்கை பதிவு போட்டாலும் 500 ஹிட்ஸ் வருதாமே, என்னோட பேரை போட்டதும் என்னைய டார் டாரா கிழிக்கிறதுக்கு ஆளிருக்கும்போது எனக்கென்ன கவலை இப்போ நானே எழுதறேன்னு சொன்னா சும்மா விடுவாங்களா என்ன ?,ரொம்ப சிம்பிள் படத்துக்கும் பதிவுக்கும் சின்ன வித்தியாசம் அங்க படம் ஓட்ட காசு கொடுப்போம் இங்க பதிவு ஓட்ட காசு கொடுப்போம் சென்னையில இருக்கிற ஒரு இருபது முப்பது பிரவுசிங் செண்டர்க்கு பணம் கொடுத்தா முடிஞ்சுச்சு ஒரு நாளைக்கு 2000 ஹிட்ஸ் கன்ஃபர்ம்...

அதானே சார் நீங்க யாரு?

நல்லவேளை சாரு நீங்க யாருன்னு கேக்காம விட்டீங்களே ...

வெள்ளித்திரையில உங்களுக்கு ஒரே ஒரு போட்டியாளர்தான் இருந்தார் ஆனா இந்த வலைப்பதிவில் நிறைய போட்டியாளர்கள் இருக்காங்களே இவங்கள எப்படி சமாளிக்க போறீங்க?

ஆளுக்கு ஒரு ஸ்டைல் வச்சு பட்டைய கிளப்புறாங்க ..இருந்தாலும் எவ்வளவோ பண்ணிட்டோம் இதப்பண்ணமாட்டோமா?

சரிவிடுங்க சினிமால இளையதளபதின்னு போட்டுட்டீங்க வலையுலகம் வந்தா உங்களுக்கு முன்னாடி என்ன அடைமொழி போட்டுக்கப்போறீங்க?

இப்போ இங்க ஃபேமஸா இருக்குறது கார்க்கிதானே அதனால இளைய கார்க்கின்னு போட்டுக்கிறேனே...

அதுசரி சினிமால திரிஷாவோட காதல்ன்னு சொல்லி எப்படியோ காலத்த ஓட்டிட்டீங்க இங்க என்ன பண்ண போறீங்க?

இங்கயும் புதுசா ஒரு பெண்பதிவாளர மும்பையில இருந்து இறக்குமதி பண்ணி அவருக்கும் எனக்கும் காதல்ன்னு இமேஜ் கிரியேட் பண்ணி ஓட்டிட மாட்டோமா?

சரிங்க சார் ஒரு விஷயம் சினிமால இல்லாத ஓட்டுன்ற ஒருவிஷயம் இருக்கே அதுக்கு என்ன பண்ணப்போறீங்க எப்படி ஒட்டு வாங்க போறீங்க?

அரசியல்ல என்ன பண்றாங்களோ அதேதான் எனக்கு ஓட்டு போடுற பதிவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பணம் கொடுக்கலாம்ன்னு ஐடியா இருக்கு அது எங்கப்பா பாத்துப்பார்...

இங்க கவிதை,கதை இதெல்லாம் எழுதுனாத்தான் பதிவர்ன்னு ஒத்துக்கிடுவாங்க அதுக்கு என்ன பண்ணபோறீங்க ?

சினிமாவில நடிக்காமலே நடிகர்ன்னு ஒத்துகிட்டவங்கதானே பதிவர்ன்னும் ஒத்துக்கிடுவாங்க...கதை இலாகாவா பேரரசு பாத்துப்பார், கவிதை கபிலன எழுதிகொடுக்க சொல்லிடுவோம்...

அதுகூட நீங்க சொந்தமா எழுத மாட்டீங்களா சார்?

ஹிஹிஹி எல்லாரும் சொந்தமா எழுதணும்ன்னு நினைக்கிறது சரி ஆனா எனக்கு எப்படி நடிக்க தெரியாதோ அதே போல எழுதவும் தெரியாதே அதான் இவங்களோட உதவி...

இன்னும் நிறைய விசயங்கள் பண்ணப்போறாராம்,பிறகு பின்னூட்டம் விமர்சனம் சினிமா இவை பற்றிய இந்த பேட்டியின் தொடர்ச்சி அடுத்த பதிவில்....தொடரும்...

(விஜய் ரசிகர்கள் கண்டுக்காதீங்க)