September 30, 2009

ஒரு சிலையின் புலம்பல்கள்..



ஆங் எல்லோருக்கும் வணக்கமுங்க... நான் இந்த கடப்பா பாறைக்கல்லுல செஞ்ச சிலை பேசுறேனுங்கோ... இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்னைய மாதிரியே சிலையா இருக்குற மக்கள் எல்லாம் பொதுக்குழு ஒண்ணு கூட்டி சில பல முடிவுகள் எடுத்துருக்கோமுங்கோ.. அது பத்தி விரிவா சொல்லாமுன்னுதான் இங்க வந்தேனுங்கோ.. அதுக்கு முன்னாடி மானசீக மக்களே நான் நல்லா படிப்பேன்னு எல்லாருக்கும் தெரியுமுங்க அதுக்காக நான் புஸ்தகம் படிக்கிற மாதிரியெல்லாம் சிலை வச்சது கொஞ்சம் ஓவரா தெரியலை..

சரி மக்களே நான் ஒண்ணு கேக்குறேன் நான் நல்லா படிப்பேனுங்குறதுக்காக புஸ்தகத்தோட சிலையாக்கிபுட்டீக அதே நான் அடிக்கடி விசயகாந்து மாதிரி கணக்கு வழக்கு பண்ணுறவனா இருந்துருந்தா கால்குலேட்டரோட சிலை வச்சுருப்பீகளோ?

இல்லை நம்ம டீ ஆரு மாதிரி தலைய ஆட்டி ஆட்டி பேசுறவனா இருந்துருந்தா தலைய ஆட்டுற மாதி சிலை வச்சுருப்பீகளோ? ஏன் நான் படிச்சவன் அப்பிடின்ற அகம்பாவம் உங்களுக்குத்தான் இருக்குன்னா சிலையாகிப்போன எனக்கும் அந்த அகம்பாவம் இருக்குற மாதிரி காட்டிப்புட்டீகளே மக்கா இது நியாயமா?இத்தோட இந்த மாதிரி ஐடியாவ எல்லாம் நிப்பாட்டிக்கோங்க அறிவுஜீவிகளேன்னேன்...

அப்பறம் காக்கா குருவிகளுக்கு தனியா கக்கூஸ் கட்டுற தைரியமோ, இல்லை தன்மானமோ இல்லாமத்தான் இப்பிடி அதுங்களுக்கு இலவச கழிப்பறை கட்டிக்குடுத்துட்டீகளோ? என்னே உங்க சிந்தனை?டெய்லி அதுக நாறடிக்குறத தண்ணியாவது ஊத்தி கழுவி விடுறீகளா அதுவும் கிடையாது..எதோ பேருக்கு சிலைய திறந்தோம்ன்னு போனோம்ன்னு ஓடிப்போயிடுறீக அதுக்கு அப்பறம் நாங்க என்ன கஷ்டமெல்லாம் படுறோம்ன்னு தெரியுமா? இல்லை நமக்கு நாமே திட்டம் தீட்டி வச்சுட்டீங்களே மக்கா?

ஏன் சொல்றேன்னா நம்ம சகா ஒருத்தர் தெக்குபக்கத்துல இருந்து பொதுக்குழுகூட்டத்துல ரொம்பவே அழுகாத குறையா பொலம்பித்தள்ளிப்புட்டாரு..என்ன சகா என்னாச்சுன்னு கேட்டா நீ நிம்மதியா படிச்ச வர்க்கம் இருக்குற ஏரியாவா பாத்து வந்து குந்திக்கின நான் இந்த படிக்காத பாட்டாளி மக்கள்கிட்ட படுற பாடும் வாங்குற அடியும் எனக்குத்தானே தெரியும்..அப்பிடின்னு ஒரே புலம்பல்..பாவம் அவரு அவரு நிலமை யாருக்கும் வரக்கூடாதுன்னேன்..

ஒருநாள் என்னடா திடீர்ன்னு இம்புட்டு பேரு வந்து மாலையெல்லாம் போட்டு மரியாதையெல்லாம் பண்றாய்ங்கன்னு பாத்தா அன்னிக்கு எனக்கு பொறந்த நாளாம்..சரி பொறந்த நாளைக்காவது மாலைபோட்டு மரியாதை செய்றாய்ங்கன்னு பாத்தா அந்த மாலையையும் அந்த ரோட்டோர பூ விக்கிற வியாபாரிகிட்ட ஓசியில அடிச்சுட்டு வந்துருக்காய்ங்க...

எனக்கு மட்டும் தற்கொலை பண்ணுற தைரியம் இருந்துச்சு எப்பயோ டுமீல் டுமீல்ன்னு நானே சுட்டு செத்துபோயிருப்பேன் மனுசனா பிறந்தாலாவது இயற்கையா சாவு வரும் நான் சிலையாவுல பொறந்துட்டேன் சாவும் வராதே..அதான் நாங்க உங்களுக்கு சாணியடிச்சு செருப்பு வீசி சாகடிக்குறோம்ன்னு நீங்க சொல்றதும் கேக்குது அப்பிடி நீங்க பண்றதுனாலதான் சாகவே தோணுது...

மனுசனா நான் பொறந்து சில பல நல்லது செஞ்சு உங்க மனசுலயிருந்தாலே போதும் அதுக்காக இப்பிடி சிலையெல்லாம் வச்சு எங்களோட வயித்தெரிச்சல வாங்கிகட்டிக்காதீக,,,

கேட்டா உங்களை கவுரவிக்கிறோம்ன்னு சொல்லுவீக வேணாம்பா நீங்க குடுக்குற கவுரவம் என்னான்னு தெரியும் ரவுண்டானாவுக்கு வழியில்லாட்டி என்னைய கொண்டுபோயி அங்க உக்கார வச்சுருவீங்க..இல்லாட்டினா உங்க இனத்து ஓட்டு வாங்கணுன்னா ஊருக்கு ஒரு சிலை திறப்பீக..

இத்தோட நிப்பாட்டிக்கங்க இல்லை நாங்க அப்பிடித்தான் சிலை திறப்பு பண்ணுவோம்ன்னு நினைச்சீங்கன்னா எங்க பொதுக்கூட்டத்துல நீங்களும் கலந்துகிட்டு இப்படி பொலம்ப வேண்டியிருக்கும் காலமும் வரும்ன்னு நினைச்சு பாத்துக்கோங்க மக்களா.. சிந்திப்பீர் செயல்படுவீர் ஊர்ல இருக்குற சிலையெல்லாம் தூக்கிட்டு அந்த இடத்துல ஒரு மரத்தையாவது நட்டு வைங்க அதாவது வாழ்க்கையில உருப்படியா நீங்க செஞ்ச நல்ல காரியமா இருந்துட்டு போகட்டும்.. கும்புட்டுக்கிறேன்...

September 28, 2009

தொடு தொடுவெனவே


துள்ளாத மனமும் துள்ளும் படத்துல வரும் தொடு தொடுவெனவே அப்படின்ற பாடல் வரிகளை காட்சிபடுத்தியிருக்கேன் எப்பிடியிருக்குன்னு பாருங்க,,,,,நல்லா வந்துருக்கா?
எல்லாரும் கவிதைக்கு விளக்க உரை குடுக்குறாங்க நான் காட்சிஉரை கொடுத்துருக்கேன்..ஹ ஹ ஹா





தொடு தொடுவெனவே வானவில்

என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்






விடு விடுவெனவே வாலிபமனது
விண்வெளி விண்வெளி ஏறும்





மன்னவா ஒரு கோவில்போல்
இந்த மாளிகை எதற்க்காக?




தேவியே என் ஜீவனே
இந்த ஆலயம் உனக்காக...






வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்?




கண்ணே உனை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவில் அடைப்பேன்



சாத்தியமாகுமா? நான் சத்தியம் செய்யவா?






இந்த பூமியே தீர்ந்துபோய் விடில்
எனை எங்கு சேர்ப்பாய்?





நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்...



நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடில் என் செய்வாய்?






உருகிய துளிகளை ஒன்றாக்கி
என்னுயிர் தந்தே உயிர் தருவேன்...




ஹேய் ராஜா இது மெய்தானா?



ஹேய் பெண்ணே
தினம் நீ செல்லும் பாதையில் முள்ளிருந்தால்
நான்,பாய் விரிப்பேன் என்னை



நான் நம்புகிறேன் உன்னை



September 27, 2009

உன்னைப்போல் ஒருவன்...

கண்கள்

பக்கத்திலிருந்தும்

பார்த்ததில்லை என்னைப்போல் ஒருவனை

ஆனால் அவன்

பார்க்கும் திசையறிந்து

அதே நேர் கோட்டில் பார்க்கும் திறனுண்டு

இருக்கும் இடம் வேறு வேறு ஆயினும்

பார்வை ஒன்றுதான்

(மக்களே புரிஞ்சா சரி)







September 25, 2009

பிரியாணி - விமர்சனம்


பிரியாணி - விமர்சனம்

நிறைய பேர் சினிமா படத்துக்கு விமர்சனம் எழுதுறாங்க,ஒரு சேஞ்சுக்கு நாம சாப்பிடுற பிரியாணிக்கு விமர்சனம் எழுதலாம்முன்னு....

கதை: ஒரு கடையில இருந்து வாங்குன அரிசி,எப்பிடி இறைச்சிகடையில வாங்குன ஆட்டிறைச்சியோட சேர்ந்து பிரியாணி ஆகுதுன்றதுதான் கதை,

கதையோட ஹீரோ யாருன்னு பார்த்தா ஆட்டிறைச்சிதாங்க ஹீரோ,கதையோட கரு எல்லாமே ஆட்டிறச்சிய சுத்தி சுத்திதான் நடக்குது....

மூலக்கடை செட்டியார் கடையில பிரியாணி அரிசி வாங்குறதுல இருந்து ஆரம்பிக்குது கதை,அப்படியே ராஜி கடையில வாங்குன ஆட்டிறைச்சியும்,அரிசியோட தங்க மணி பையில வாங்கிட்டு வரும்போதே தொட்டு தொட்டு பேசி உறவாடிட்டு மெல்ல காதல் வளருது,

வீட்டுக்கு வந்ததும் பிரியாணி அரிசி குளிக்க ஆரம்பிக்குது,அப்பறம் ஆட்டிறைச்சியும் குளிக்க ஆரம்பிக்குது அப்போ ரெண்டுபேருக்கும் தனித்தனி சோலோ சாங்க் ஒண்ணு வருது, அரிசிதாங்க முதல்ல தன்னோட காதல்சொல்லணும்ன்னு நல்லா விளக்கி வச்ச பாத்திரத்துல தண்ணியோட சேர்ந்து கொதிக்க ஆரம்பிக்குது.

அப்பறம் அரிசியோட காதலை புரிஞ்சுகிட்ட ஆட்டிறைச்சியும் டொபுக்குன்னு பாத்திரத்துக்குள்ள விழுந்து அரிசியோட சேர்ந்து கடபுட கடபுடன்னு ஒரு டூயட் சாங்க்ல தன்னோட காதல சொல்லிடுது,

படத்துல தங்கமணி ஆட்டிறச்சிய துண்டு துண்டா வெட்டும்போது வர்ற ஃபைட் சீன் இதுவரைக்கும் தமிழ் சினிமா பாத்திராதது,கிராஃபிக்ஸ் காட்சியில படத்தோட டைரக்டர் தங்கமணி புகுந்து விளையாடியிருக்கார்,

அப்பறம் படத்தோட சைட் ஆர்ட்டிஸ்ட்களான தக்காளி,வெங்காயம்,பச்சைமிளகாய் வெட்டும்போது வர்ற ஃபைட் சீனும் எதார்த்தமா இருக்கு, என்ன வெங்காயத்தோட ஃபைட் சீன் வரும்போது மட்டும் நம் கண்ணுல தண்ணீர் வர்றது நிஜம்,

Then,தக்காளி,வெங்காயம் வதக்கும் சீன்ல நம்ம மனசு அப்பிடியே லயித்துவிடுகிறது,இவங்கதான் இந்த மட்டன் பிரியாணி கதை சிறப்பா வர்றதுக்கு காரணம் என்பதை மறுப்பதற்க்கில்லை,

அப்பறமா பிரியாணியோட வாசனைக்கு சேர்க்கப்பட்ட புதினாவும்,பிரியாணி மசாலாவும் தங்களோட கேரக்டரை சிறப்பா செஞ்சுருக்காங்க..படத்தோட ஹீரோ ஆட்டிறைச்சியும்,ஹீரோயின் பிரியாணி அரிசியும் போட்டி போட்டு தங்களோட திறமைய வெளிப்படுத்தியிருக்காங்க...

கடைசியா எல்லாரும் சேர்ந்து எப்படி பிரியாணி சுவையா வந்துச்சுன்றது தங்கமணி பரிமாறும்போது எல்லாரும் சாப்பிட்டு தெரிஞ்சுக்கோங்க..

படத்தோட ப்ளஸ்பாயிண்டே கதை நடக்கும்போதே பக்கத்து வீட்டுக்காரர்களை நம்ம வீட்டுக்கு வரவைக்குற அளவுக்கு வாசனையா நம்ம தங்கமணியோட டச்சிங் பெர்ஃபார்மன்ஸ் பட்டைய கிளப்புது,அதிலும் அந்த உப்பு கரெக்ட்டா சேர்த்த விதத்தில டைரக்டர் தங்கமணி தான் அனுபவசாலின்னு நிரூபிச்சுடுறார்.



படம் நன்றி : http://sashiga.blogspot.com


மொத்தத்தில் இந்த மட்டன் பிரியாணி சாப்பிடுற எல்லாரோட மனசையும் வயித்தையும் நிறைய வைக்குதும அப்பிடின்றதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

மட்டன் பிரியாணி-சுவையாய்...

மீண்டும் அடுத்த வாரம் ஒரு சிறந்த உணவின் விமர்சனத்தில் சந்திப்போம்....






September 22, 2009

எழுத்தோசை தமிழரசி பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாருங்கள் வாழ்த்துங்கள்

கவிதைகளின் அரசியாம் எழுத்தோசை தமிழரசி அவர்களுக்கு ஒரு கவிதையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...


நீ எத்தனை நாள் எனக்கு பிறந்த நாள்
கொண்டாடியிருக்கிறாய்...

இதோ அதற்க்கு பிரதி பலனாக
உன் பிறந்தநாளுக்கு கவிதையாகிய
நான் வடித்த கவிதை...

உன்னைப்போல் நயமாக எழுதாவிடினும்
சுயமாய் எழுதிய கவிதை...

என்னுடைய ஒவ்வொரு பிறப்புகளையும்
உணர்வுப்பூர்வமாய் உருவகம் கொடுக்கும்
நீ என் சிற்பி...

என்னுடைய ஒவ்வொரு பிறப்புக்கும்
சிறப்பு சேர்க்கும் உன் எழுத்தோசை
என் உயிரோசை...

என்னுடைய ஒவ்வொரு வரிகளில்
உன்னுடைய மனதின் மாசற்ற
பரிணாமங்கள்...



ஓலைச்சுவடியும் ஏங்கி கிடக்கிறது
உன் எழுத்துக்களை ஏந்துவதற்க்கு...

உன் சிரிப்பின் ஓசை கேட்டதில்லை நான்
உன் முகம் பார்த்ததில்லை நான்
உன் சினம் பார்த்ததில்லை நான்

உன் எழுத்தினால்....
உன் மனம் மட்டுமே பார்த்திருக்கிறேன் நான்



பெற்றால்தான் பிள்ளையா..
உன்னால் வடிவம் பெற்ற நானும்
உன் பிள்ளையே...

உன் நட்பூக்களின் சாட்சி
நான் மட்டுமே..
உன் நண்பர்களின் எண்ணிக்கையறிந்து
உன் மன சாட்சியும் கூட
பொறாமை கொள்ளும் நட்புக்கரசி நீ ...

பாரதி கண்ட புதுமைப்பெண்ணே
இனியும் தேவை உன் கவியோசை...
ஓங்கி ஒலிக்கட்டும் உன் எழுத்துக்களின் ஓசை


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழரசி








உயிர்,மெய் எழுத்துக்களும் வாழ்த்துக்கின்றன...



இன்று பிறந்த நாள் கொண்டாடும் பதிவுலக இளையதளபதி திரு கார்க்கி அவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


பில்கேட்ஸ் ஃப்ரம் மெட்ராஸ்


சுட்டது....

நம்ம பில்கேட்ஸ் மெட்ராஸ்ல பொறந்துருந்தா இப்பிடித்தான் மெனு பார் பெயர்கள் இருந்திருக்குமோ...

Save = வெச்சிக்கோ

Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ

Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ

Help = ஒதவு

Find = பாரு

Find Again = இன்னொரு தபா பாரு

Move = அப்பால போ

Mail = போஸ்ட்டு

Mailer = போஸ்ட்டு மேன்

Zoom = பெருசா காட்டு

Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு

Open = தெற நயினா

Close = பொத்திக்கோ

New = புச்சு

Old = பழ்சு

Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு

Run = ஓடு நய்னா

Execute = கொல்லு

Print = போஸ்டர் போடு

Print Preview = பாத்து போஸ்டர் போடு

Cut = வெட்டு - குத்து

Copy = ஈயடிச்சான் காப்பி

Paste = ஒட்டு

Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு

Delete = கீச்சிடு

anti virus = மாமியா கொடுமை

View = லுக்கு உடு

Tools = ஸ்பானரு

Toolbar = ஸ்பானரு செட்டு

Spreadsheet = பெரிசிட்டு

Database = டப்பா

Exit = ஓடுறா டேய்

Compress = அமுக்கி போடு#


Mouse = எலி

Click = போட்டு சாத்து

Double click = ரெண்டு தபா போட்டு சாத்து

Scrollbar = இங்க அங்க அலத்தடி

Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு

Next = அப்பால

Previous = முன்னாங்கட்டி

Trash bin = கூவம் ஆறு

Solitaire = மங்காத்தா

Drag & hold = நல்லா இஸ்து புடி

Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?

Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?

Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?

Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு

Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?

General protection fault = காலி

Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!

Unrecoverable error = படா பேஜார்பா

Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்

Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

டிஸ்கி: இது மெயில்ல வந்ததுங்கோ...எல்லாரும் படிக்கணும்ன்ற ஆசையில் போஸ்டிங் பண்ணிட்டேன் போற போக்குல டெம்ப்லேட் எப்பிடியிருக்குன்னுசொல்லிட்டு போங்க நண்பர்களே...எத்தினி நாளைக்குத்தான் ஒரே மாதிரி வச்சுகினுருக்கிறது ஒரே பேஜாரா இர்க்கு அதான் மாத்திட்டேன்..நவராத்திரியை முன்னிட்டு தினமும் ஒரு டெம்ப்லேட் மாற்றிப்பாக்கலாமுன்னு...

September 20, 2009

கட்டபொம்மன் எனும் ப்லாக்கர்...(சண்டே எண்டெர்டெயின்மெண்ட்)

கட்ட பொம்மன் எனும் ப்லாக்கரும் ஜாக்சன் எனும் வாசகருக்கும் இடையே நடந்த உரையாடல்

ஜாக்சன்: நீர்தான் ப்லாக் எழுதும் ப்லாக்கர் என்பவரோ?

கட்டபொம்மன்: (லேப்டாப்பை எடுத்து ஆன் பண்ணிவிட்டுக்கொண்டு) நீர்தான் வாசகர் என்பவரோ?

ஜாக்சன்: ஏது ப்லாக் எழுதும் வரை வந்துவிட்டீர்?

கட்டபொம்மன்: நீங்கள் ப்லாக் படிப்பதாக அறிந்தேன், வந்தேன்.

ஜாக்சன்: ப்லாக் எழுத வேண்டும். அதற்கேற்ற எண்ண்ம் இல்லை உன்னிடம்!

கட்டபொம்மன்: கற்றுக்கொடுப்பது தமிழினம்! நீர் கற்றுக்கொடுக்க முயற்சிப்பது அறிவீனம்!

ஜாக்சன்: இறுமாப்பு அடங்கவில்லை.

கட்டபொம்மன்:அது என் உடன்பிறந்தது. ஒழியாது!

ஜாக்சன்: உன் மீது குற்றம் சுமத்துகிறேன்.

கட்டபொம்மன்: என்னவென்று?

ஜாக்சன்: எடுத்துரைத்தால் கணக்கில் அடங்காது.

கட்டபொம்மன்: எண்ணிக்கை தெரியாத குற்றம் போலும்.

ஜாக்சன்: எனக்கா எண்ணிக்கை தெரியாது! அகம்பாவம் பிடித்தவனே. சொல்கிறேன் கேள். உன் ப்லாக்கில் எழுதும் போஸ்டிங்குக்கு கிஸ்தி கொடுக்கவில்லை.அடுத்தவர் ப்லாக்குக்கு கமெண்ட்ஸும் போடுறதில்லை,தமிழிஷ் தமிழ்மணத்தில் ஓட்டும் போடுவதில்லை


கட்டபொம்மன்: கிஸ்தி, ஓட்டு!கமெண்ட்! வானம் பொழிகிறது, பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி! என்னோடு கடைக்கு வந்தாயா? லேப்டாப் வாங்கி கொடுத்தாயா?இண்டெர்நெட் கனெக்சன் வாங்க உதவினாயா? ப்லாக் எழுத ஐடியா கொடுத்தாயா? தமிழிஷ்ல ஓட்டு போட்டாயா? அல்லது தமிழ்மணத்திலயாவது ஓட்டுபோட்டாயா? இல்லை ரூம் போட்டு யோசிச்சு நான் போட்ட ஒவ்வொரு போஸ்டிங்க்கும் கமெண்ட் போட்டாயா? அல்லது மாமனா? மச்சானா?அல்லது அட்லீஸ்ட் நீ ப்லாக்கரா? எதற்கு கேட்கிறாய் வரி, யாரை கேட்கிறாய் ஓட்டு? ஓடிப்போய்விடு இல்லை அனானியர்களை விட்டு உன்னைப்பற்றி தாறுமாறாக எழுதி சொல்லிவிடுவேன் ஜாக்கிரதை!

டிஸ்கி: முழுவதும் கற்பனை என்பதை தவிர வேறொன்றுமில்லை...




September 18, 2009

டயரும் , பெரியவரும்...

தேய்ந்து போன டயரும் முதியவரும் ஏதேச்சையாக சந்தித்து கொண்டபோது நடந்த உரையாடல்

டயர்: என்னங்க பெரியவரே ரொம்ப நடக்க முடியாம நடந்து வர்றீங்க..

பெரியவர்: வயசாயியிடுச்சேப்பா!!

டயர் :வாஸ்தவம்தான் வயசாயிய்டுச்சுன்னா வீட்லயே இருக்கலாமே!!

பெரியவர் : இருக்கலாம்தான் ஆனா பெத்த புள்ளைங்களும் துரத்திவிட்டுட்டாங்களே!!

டயர் : அப்பிடியா சங்கதி! அடப்பாவமே இப்படியெல்லாம் கூட நடக்குதா?

பெரியவர் : அட நீயென்னப்பா உலகம் புரியாதவனா இருக்க கடந்த 25 வருடங்களா வளர்த்து ஆளாக்குன பெத்தவங்களையெல்லாம் நட்ட நடுவுல வெட்டி விட்டுடுறாங்க..

டயர் : அடப்பாவமே !

பெரியவர் :இன்னும் கேள் சிலர் என்னைய மாதிரி ரோட்டுக்கு விடப்படுகிறார்கள்,சிலர் முதியோர் இல்லத்துக்கு விடப்படுகிறார்கள்.

டயர் : ஏன்?


பெரியவர் : நீ எப்படி ஓடி ஓடி தேய்ஞ்சவுடனே கழட்டிவிடப்படுகிறாய் அதுமாதிரிதான்..

டயர் : ஆனாலும் நான் திரும்ப வல்கனைசிங் பயன் படுத்தப்பட்டு உபயோகமாயிருக்கேனே!!

பெரியவர் : ம்ம் எங்களுக்கும் வல்கனைசிங்மாதிரி திரும்ப புத்துணர்வு கொடுத்து உழைக்கும் தெம்பு கடவுள் கொடுத்துருந்தா ஒருவேளை எங்களை வீட்டோட வச்சுருந்துருப்பாங்களோ!!தெரியலை...

டயர் : ஆமாப்பா அதுமாதிரி இருந்திருந்தா ரொம்ப நல்லாயிருந்துருக்கும் நீயும் சாகுற வரைக்கும் உன்னோட உழைப்பிலே சாப்பிட்டு கடைசி காலத்துல நிம்மதியா போய்ச்சேர்ந்திருப்ப..

பெரியவர் : ஆமாப்பா ஆமா..ஆனா என்ன பண்றது எங்களுக்கு அதுமாதிரி வாய்ப்பு கிடைக்கலை.பெத்த பிள்ளைகளை வளர்த்து நல்ல நிலமைக்கு வரசெய்ததுக்கு கடைசியில பிச்சையெடுக்க வச்சுடுறாங்களே..

டயர் : சரிசரி அதுமாதிரி நடக்குதுன்னு கடவுளுக்கு தெரியாமயா இருக்கும் ? உங்களை மாதிரி நடுத்தெருவில் விடப்பட்பவர்களை உடனே தன்னோட அழைச்சுக்கிடலாமே!! ஏய் கடவுளே உனக்கு கேக்கலியா இந்த பெரியவரின் குரல்?

பெரியவர் : அட விடுப்பா கடந்த நாலு மாசமா பெத்த பிள்ளைங்க நாலு பேரோட வீட்டுக்கும் இங்க கொஞ்ச நாள் அங்க கொஞ்ச நாள்ன்னு மாறி மாறி நடந்து நடந்து என் கால் ரேகையே அழிஞ்சுபோச்சு...

டயர் : ஏன்?

பெரியவர் : நீ எப்படி தெய்ஞ்சவுடனே வண்டியோட நாலு சக்கரத்துக்கு எந்த பக்கம் வேணும்னாலும் மாட்டுற மாதிரி அலைக்கழிக்கப்படுறியோ அது மாதிரிதான் என்னையும் அலைக்கழிச்சாங்க இங்க கொஞ்ச நாள் அங்க கொஞ்ச நாள்ன்னு கடைசியில குப்பைத்தொட்டியில போடுற குப்பை மாதிரி என்னையும் தூக்கி போட்டுட்டாங்க!!

டயர் : ப்ச்...சரி இவங்கள மாதிரி ஆளுகளை சமூகம் தண்டிக்காதா?

பெரியவர் : எல்லாருமே அப்படித்தான இருக்காங்க யாரும் நல்லவங்க இல்லியே எங்கோ ஒரு சில நல்லவர்கள் இருக்காங்கன்றதும் மறுக்குறதுக்கு இல்லை , அவங்க எல்லம் வரம் வாங்கிட்டு வந்தவங்களா இருக்கும்,நாங்க எல்லாம் சாபம் வாங்கிட்டு வந்தவங்களா இருப்போம்...

டயர் : அப்போ இவங்களுக்கு தண்டணையே கிடையாதா?

பெரியவர் : ஏன் இல்லாமல்? அவங்களுக்கும் மகன்,மகள் பிறந்துருக்காங்க அவங்களுக்கும் வயசாகமலா போகப்போகுது? எங்க வயசு வரும்போது கண்டிப்பா அவங்களுக்கும் இந்த நிலை வரும்.

டயர் : இதை ஏன் அவங்க நினைச்சு பாக்குறது இல்லை.

பெரியவர் : சுயநலம்

டயர் : சரியா சொன்னீங்க வினை விதைச்சவன் வினையறுப்பான், உப்பு திண்ணவன் தண்ணி குடிச்சே ஆகணும்.. இதை உணர்ந்தால் மட்டுமே தங்களை போன்ற முதியோர்கள் கடைசி காலத்தை நிம்மதியா கழிக்க முடியும்.

பெரியவர் : பார்க்கலாம் நடக்குதான்னு.......

*****************************சந்திப்பு நிறைவு பெற்றது************************






September 13, 2009

செங்கல்லும், நானும்,,,



அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும்

ரோட்டுல நடந்து போகும் போது ஒரு சின்ன பிஞ்சு சுமக்கிற செங்கல்லை நான் எடுத்த பேட்டி

நான் : செங்கல்லே உனக்கு மனசாட்சியே இல்லியா?

செங்கல் : ஏன் இவ்ளோ கனத்தை இந்த பிஞ்சின் தலையில் வைக்கிற மனுஷனுக்கு மனசாட்சி இருக்கும் பொழுது எனக்கு இருக்க கூடாதா?

நான் : அப்போ ஏன் இந்த பிஞ்சின் வலி தெரியாம நீயும் அந்த மனுஷனுக கூட சேர்ந்து அந்த பிள்ளைக்கு வலி குடுக்குற?

செங்கல் : நான் என்ன பண்றதுப்பா? அந்த பிள்ளைக்கு அப்பா அம்மா இறந்து போயிட்டாங்க,சொந்த பந்தமும் உதவலை சாப்பாட்டுக்கு வழியில்லாத அந்த பிள்ளைக்கு நானும் உதவாட்டி பாவம் பட்டினியா கிடந்து செத்துடுமே...

நான் : அதுக்காக அதோட இளமையிலே வறுமையின் கொடுமைய அனுபவிக்கணும்ன்னு நீ விரும்புகிறாயா?

செங்கல் : கண்டிப்பா இல்லை,எனக்கும் அந்த பிஞ்சு படிச்சு டாக்டராவோ,எஞ்சினியராவோ ஆகணும்ன்னு ஆசைதான்,ஆனா விதி விளையாடுதே..

நான்: மனுசங்க தான் விதி சதின்னு நினைக்கிறாய்ங்கன்னா நீயுமா?

செங்கல் : ஆம் நண்பரே விதின்னு சொல்லாம வேற என்ன சொல்றது? அந்த பிஞ்சு பிறந்ததும் அவங்க அம்மா அப்பா விபத்துல இறந்து போயிட்டாங்களே அது விதியில்லியா? அதுக்கப்பறம் அந்த பிள்ளைக்கு சேர வேண்டிய சொத்தையெல்லாம் அவங்க சொந்தக்காரய்ங்க எடுத்துக்கிட்டு இந்த பிள்ளைய அநாதையா விட்டுட்டு போயிட்டாங்களே அது விதியில்லியா?

நான் : சரி இந்த மாதிரி அப்பா அம்மா இறந்து போகாமலயே நிறைய குழந்தைகள் சின்ன வயசுலயே வேலைக்கு போறாங்களே?

செங்கல் : அது ஒரு வேளை அவங்க அப்பாவுக்கு உடம்புக்கு முடியாமலோ அவங்க அப்பா போதைக்கு அடிமையாகி அதனால அந்த குடும்பத்தோட வறுமையின் காரணமாகவோ இருக்கலாம்!

நான்: அப்போ இதுவும் விதியா?

செங்கல் : இல்லை இது அந்த குடிகார அப்பனோட திமிருன்னு தான் சொல்லுவேன்..

நான் : இந்த மாதிரி தகப்போனோட தவறான நடவடிக்கைகளால் மட்டுமே இந்த குழந்தைகள் இந்த நிலமைக்கு ஆளாகுறாங்களா?

செங்கல்: இல்லை இன்னும் தன்னோட தவறான பழக்கத்தால் குழந்தை பெற்றுக்கொண்டு அந்த குழந்தைகளை குப்பை தொட்டியிலோ,கோவிலிலோ விட்டுச்செல்லும் பெண்களால், தன்னோட குழந்தைகளை சரியா புரிந்துகொள்ளாமல் அவங்களை சின்ன வயசுலயே கொடுமை பண்ணுற ஈகோ பிடிச்ச பெற்றோர்களால்,அடிச்சு திருத்துறோம்ன்ற பேர்வழியில குழந்தைகள அடிக்கு சில வாத்தியார்களால் ஊரைவிட்டு ஓடி வரும் குழந்தைகள் இங்கு ஏராளம்.

நான்: சரி அப்போ இதுமாதிரி ஓடி வரும் குழந்தைகளை இங்கு இருக்கும் முதலாளிகளாவது சரியா புரிஞ்சு நல்லவிதமா நடத்துறாங்களா?

செங்கல் : கண்டிப்பா இல்லை , இங்கு இந்த பிஞ்சுகள் அனுபவிக்கிற கொடுமைக்கு அளவேயில்லை, ரெண்டுவேளை சோத்த போட்டுட்டு மூணு ஆள் வேலை வாங்குறாய்ங்கப்பா, அதுக்கு இந்த பிள்ளைகளுக்கு காசும் குடுக்குறது இல்லை ஏன்னா கேக்க ஆளில்லாத அநாதைகள் தானே அவங்க.

நான் : சரி வாத்தியார் அடிக்குறார்ன்னுதானே இங்க வர்றாங்க இங்க வந்தவங்களாவது முன்னேறுவதற்க்கு வாய்ப்பு இருக்குதா?

செங்கல் : இல்லவேயில்லை, இங்க இந்த கொடுமை பண்ற முதலாளிகள் கிட்ட மாட்டிக்கிடுற அவங்க சில காலம் கழிச்சு வெளியுலகம் போயி அங்கேயும் கஷ்டப்படுறாங்க, காசில்லாம திருட ஆரம்பிக்குறாங்க , தீய பழக்கங்களுக்கு அடிமையா ஆகுறாங்க சிலர் தீவிரவாதிகளாகவும் ஆகிடுறாங்க..

நான் : அய்யோ அப்போ இதுக்கு தீர்வுதான் என்ன?

செங்கல் : நம்ம அரசாங்கமும் இது மாதிரி குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு வைப்பதை தடுத்துக்கொண்டுதான் வருது இருந்தாலும் சில லஞ்ச பேய் அரசு அதிகாரிகளால் இன்னும் குழந்தை தொழிலாளர்கள் கொடுமை அனுபவிச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க, அதனால அரசாங்கம் குழந்தை தொழிளார்கள் தடை சட்டத்தை இன்னும் கடுமையாக்கனும், ஆசிரியர்கள் குழந்தைகளை அடிச்சுத்திருத்தணும் அப்படின்ற எண்ணத்தை கைவிடணும்,பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சரியா புரிஞ்சு அன்பா நடத்தணும் .

நான்: கடைசியா உன்னிடம் ஒரே ஒரு கேள்வி கடவுள் உன் கண் முன்னாடி வந்து நின்னால் இந்த செங்கல் சுமக்குற பிள்ளை மாதிரியான குழந்தைகளுக்குன்னு நீ என்ன கேட்பாய்?

செங்கல் : கடவுள்ன்னு ஒருத்தர் இருந்தார்ன்னா இது மாதிரியெல்லாம் நடக்கவிடாம பண்ணிருப்பாரே என்னை பொறுத்த அளவு கடவுளே இல்லைன்னு தான் சொல்வேன், நீங்க கேட்டதுக்காக வேணும்ன்னா, பொம்மை விற்க்கும் கடை மாதிரி, அம்மாவும் அப்பாவும் விற்க்கும் கடை ஒண்ணு கேப்பேன், ஹார்லிக்ஸ்,பூஸ்ட் பாட்டில்ல அடைச்சு விற்க்கிற மாதிரி அன்பையும் , பாசத்தையும் அடைச்சு விற்க்கும் பாட்டில் கேட்பேன், இளமையில் வறுமையே கூடாதுன்னு கேட்பேன்.

நான் : கல்லாய் சில மனிதர்களின் மனசு இருக்கும் போது வெறும் செங்கல்லான உனக்குள்ளும் இவ்வளவு பெரிய மனசு இருக்கும்ன்னு நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியா இருக்கு செங்கல் நண்பா...தங்களை பேட்டியெடுத்ததில் மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி.



போங்கடா நீங்களும் உங்க பட்டாசும் ,வறுமையும்


..



September 11, 2009

நவீன சுயம்வர கேள்விகள்

என் கனவுல வந்த இந்த கால மணமகள் என் கிட்ட கேட்ட சுயம்வர கேள்விகள்

1.பக்கத்துல முதியோர் இல்லம் இருக்கா?

2.வீட்டு வேலை செய்ய வேலைக்காரர்கள் இருக்கிறார்களா?

3.உங்க ஊர்ல எத்தனை ஜவுளிக்கடை இருக்கு?

4.குழந்தைகள் பிறந்ததும் குழந்தை வளர்ப்பு மையத்தில் விடுவதற்க்கு தங்களுக்கு ஆட்சேபணை இருக்கா?

5.பியூட்டி பார்லருக்கு மாசம் எவ்வளவு பட்ஜெட்ல ஒதுக்குவீங்க?

6. வீட்டிற்க்கு இரண்டு தொலைக்காட்சி பெட்டிகள் வேண்டும் என்ற என் கருத்துக்கு தங்கள் பதிலென்ன?

7.காதல் அனுபவம் உண்டா?

8.எங்கள் குடும்பம் அடிக்கடி வீட்டுக்கு வந்தால் தங்கள் மனது சந்தோஷப்படுமா?வருத்தப்படுமா?

9.எனது தங்கையின் திருமணச்செலவில் பங்கெடுப்பீர்களா?

10.வருடத்திற்க்கு எத்தனை சேலை அல்லது சுடி வாங்கித்தருவீர்கள்?

11.எனக்குத்தெரியாமல் என்னுடன் வரும் என் நண்பிகளை சைட் அடிப்பீர்களா?

12.திருமணத்திற்க்கு பிறகு குழந்தை பிறக்காவிட்டால் விவாகரத்து புரிவீர்களா?இல்லை வாழ்க்கையை என்னுடன் தொடர்வீர்களா?

13.அப்படி குழந்தை பிறக்கும்பட்சத்தில் பெண்குழந்தை பிறந்தால் வெறுப்பீர்களா?சந்தோஷப்படுவீர்களா?

14.ஒரு சரியான கருத்துக்காக நான் தங்கள் அம்மாவுடன் சண்டை போட்டால் நீங்கள் என் பக்கம் வாதாடுவீர்களா?இல்லை தங்கள் அம்மா பக்கம் வாதாடுவீர்களா?

15.திடீர்ன்னு என்னோட பழைய ஆண்நண்பர்கள் எனக்கு தொலைபேசியில் அழைக்கும்போது அழைப்பை துண்டித்துவிடுவீர்களா? இல்லை என்னை அழைத்து பேச சொல்வீர்களா?

16.என்னோட குடும்பம் திடீர்ன்னு கஷ்டப்படுற நிலைக்கு போயிடுச்சுன்னா நீங்க அவங்களுக்கு உதவுவீர்களா? இல்லை கண்டுகொள்ளமாட்டீர்களா?


பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க....

நான் எஸ்கேப்பு....


September 9, 2009

தேவதையின் வரங்கள்.....

எல்லாருக்கும் மிகப்பெரிய ஆசைகள் கனவுகள் இருக்கும் அது சில சமயம் நிறைவேறாமல் போயிருக்கலாம்.

அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக உங்கள் கண் முன்னாடி ஏஞ்சல் எனும் தேவதை உங்களிடம் பத்து வரங்கள் தருகிறது . நீங்கள் அதனிடம் என்ன வரம் கேட்பீர்கள்?








எங்கிட்ட இந்த தேவதை வந்த பொழுது நான் கேட்ட வரங்கள்..

*****************************


லண்டன் போகணும்ன்னு கேட்பேன்....

**************************************************************************************


ஒரு வருசம் என்னோட கல்லூரி வாழ்க்கை திரும்ப வாழணும்ன்னு கேட்பேன்
*************************************************************************************


எல்லா மக்களுக்கும் குடிக்க உலகம் உள்ளவரை இலவசமா குடிநீர் கிடைக்கணும்ன்னு கேட்பேன்...

***********************************************************************************

இறந்து போன தங்கை மீண்டு வர கேட்பேன்

**************************************************************************************


ஜாதியில்லாத தமிழ்நாடு கேட்பேன்

************************************************************************************


உலக மக்கள் எல்லார்கிட்டயும் சம வசதி வாய்ப்பு கிடைக்கணும்ன்னு கேட்பேன்...

*************************************************************************************

எஸ்.பி.பால சுப்ரமணியம் குரல் வேணுன்னு கேட்பேன்

*************************************************************************************


அப்துல் கலாம் மாதிரி ஒரு நாளாவது வாழும் வாய்ப்பு கேட்பேன்...

***********************************************************************************

என்னோட அம்மா அப்பா எப்பவும் என்கூடவே இருக்கணும்ம்னு கேட்பேன்

***********************************************************************************

பணத்துக்காக இல்லாம அன்புக்கு மட்டுமே ஆசைப்படுற அழகான மனைவி கேட்பேன்....

***********************************************************************************

இந்த தேவதையை இப்போ ஒரு நாலு பேரோட ஆசைகளை நிறைவேற்ற அனுப்பிவைக்கிறேன் அவர்கள் ஆசையும் நிறைவேறுவதாக.....





தொடருங்கள் நண்பர்களே