February 26, 2010

யார் மனசுல என்ன?



நிருபர் : கலைஞர் அவர்களே இந்த நிமிடம் தங்கள் மனசில் தோன்றுவதை கூற முடியுமா?

கலைஞர் : என் மகன் ஸ்டாலின் என்னை முதலமைச்சர் பதவியில இருந்து ராஜினமா செய்ய சொல்லி மிரட்டுறார் அதனால இப்போவே ராஜினாமா பண்ணிடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்...




நிருபர் : துணை முதல்வர் அவர்களே இந்த நிமிடம் தங்கள் மனதில் தோன்றுவது என்ன?

மு.க.ஸ்டாலின் : முதலமைச்சர் ஆன பிறகு அழகிரிய கட்சியவிட்டு தூக்கிடலாமான்னு யோசிக்கிறேன்....






நிருபர் : அமைச்சர் அழகிரி அவர்களே இந்த நிமிஷம் உங்க ம்னசில என்ன நினைக்கிறீங்க?

மு.க.அழகிரி : அப்பாவுக்கு பிறகு சொத்தை மட்டும் பிரிக்கலாமா இல்லை தமிழ்நாட்டையும் சேர்த்து பிரிச்சுடலாமான்னு யோசிக்கிறேன்...






நிருபர் : செல்வி ஜெயலலிதா மேடம் இந்த நிமிடம் உங்க மனசுல என்ன நினைக்கிறீங்க?

செல்வி.ஜெயலலிதா : இப்ப இருக்குற சூழ்நிலையில அதிமுகல இருந்து நிறைய பேர் தி.மு.க.வில இணையிறதைப் பார்த்தா என்னோட நிஜ வாழ்க்கை மாதிரியே அரசியல்லயும் எனக்கு வாரிசு இல்லாம அநாதையாயிடுவேனோன்னு பயமா இருக்கு..




நிருபர் : சூப்பர் ஸ்டார் சார் இந்த நிமிடம் உங்க மனசுல என்ன நினைக்கிறீங்க...

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் : நடக்கும் மிரட்டல் அநியாயங்களை பார்த்தால் 1996ல் அரசியலுக்கு வராம போனதை நினைச்சு வருத்தப்படறேன்...





நிருபர் : விஜயகாந்த் அவர்களே இந்த நிமிடம் உங்க மனசுல என்ன நினைக்கிறீங்க?

திரு.விஜயகாந்த் : கட்சி போகிற போக்கை பார்த்தா இதுவரைக்கும் சம்பாதிச்சது எல்லாம் ஒண்ணும் மிஞ்சாது போல 2016ல கூட ஆட்சிய பிடிக்க முடியாது பேசாம எஞ்சினியரிங் காலேஜ்,திருமண மண்டபம் , நடிகர் சங்க தலைவர் இதோட இருந்திருந்திருக்கலாம்ன்னு தோணுது...





நிருபர் : அஜீத் சார் உங்க மனசில இந்த நிமிஷம் என்ன நினைக்கிறீங்க?

அஜீத்: வாய்க்கு போடுற பூட்டு எந்த கடையிலயாவது கிடைக்குமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்...






நிருபர் : விஜய் சார் உங்க மனசுல இந்த நிமிடம் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க

விஜய் : இப்போ நடிக்கிற என்னோட அம்பதாவது படம் சுறா படமாவது 50 நாள் ஓடுமா ஓடாதான்னுதான்...




இப்போ நீங்க இந்த நிமிடம் என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லவா? இவனெல்லாம் ஒரு ஆளு நம்ம போஸ்ட்டுக்கு வாறதுமில்ல கமெண்டும் போடறதில்ல இவனோட போஸ்ட்டுக்கு நம்ம ஓட்டும் போட்டு கமெண்டும் போடணுமாக்கும் சரிதான?





February 25, 2010

டைம் இருந்தா வாங்க...கண்டுபிடிக்கலாம்



வார்த்தை விளையாட்டு 4


இம்முயற்சி சிறிது வித்தியாசமான முயற்சி
வார்த்தை விளையாட்டு கீழேயுள்ள மாதிரியை போன்று கேட்க்கப்பட்ட வினாக்களுக்கு சரியான வார்த்தை (ஆங்கிலம் தமிழ் எதிலாவது) கண்டுபிடியுங்கள்....மைண்ட் ரிலாக்ஸ்க்காக மட்டும்.....



மாதிரி1



மாதிரி 2


மாதிரி 3


வினா 1



வினா 2



வினா 3



வினா 4



வினா 5


வினா 6





வினா 7



வினா 8



வினா 9



வினா 10




பி.கு கொஞ்சம் பழகிடுச்சுதானே இனியும் + = ? சிம்பல்ஸ் தேவையில்லைதானே அதான் எடுத்துட்டு வெறும் படம் மட்டும் சரியா.......இந்த விளையாட்டு தெரியாதவங்க கீழ இருக்கிற லிங் போய் படிச்சுட்டு வாங்க,,,


February 22, 2010

இருவார்த்தை கதைகள் -2



இருவார்த்தை கதைகள்


தலைப்பு : ஆணாதிக்கம் புரியும் ஆண்களை மனதார வெறுக்கிறோம் - மகளிர் மன்றத்தினர்..

கதை : உடம்புக்கு ஆகாது...

************************************************************

தலைப்பு : வெளிப்படையாக இருக்க பழகுங்கள் எழுத்தாளர்களே

கதை : எழுத்திலா? நிஜத்திலா?

************************************************************

தலைப்பு : மீ த 101

கதை : பதிவரின் மொய்

************************************************************

தலைப்பு : மன்னிப்பு கேட்கமாட்டேன் வேண்டுமானால் நடிப்பதை விட்டுவிடுகிறேன் - அஜீத்

கதை : அசல் நாயகன்

************************************************************

தலைப்பு : ஒரு ஜாதியை சேர்ந்தவங்க என்னை அடிச்சுட்டாங்கன்னு சொன்னியே எந்த ஜாதி அவங்க?

கதை : பெண் ஜாதி

************************************************************

தலைப்பு : உடலில் இருந்து வெள்ளி உருவாகும் அதிசயம்

கதை : என்னவளின் வியர்வை

************************************************************

தலைப்பு : உயிர்கொல்லிகள் ஒன்று என்னை வாங்கியது ஒன்று நான் வாங்கியது

கதை : சிகரெட்டும் பெண்ணும்

************************************************************

தலைப்பு : விவசாயியின் நெற்றியில் வடியும் வியர்வை

கதை : அசையும் சொத்து

************************************************************

தலைப்பு : இவ்வுலகில் உள்ள ஒவ்வொருத்தனும் பைத்தியக்காரன்

கதை : தன்னை அறியாதவன்

***********************************************************

தலைப்பு : நடிகையின் முதலிரவில் நடிகையிடம் கணவன் இது நமக்கு முதலிரவு

கதை : உங்களுக்கு மட்டும்

***********************************************************



February 19, 2010

கொலை(Murder)

சிவாவை கொலை செய்றதுன்னு முடிவு செய்துவிட்டாள் நித்யா,காரணம் நிறைய எதிர்த்த வீட்டு சுமன் அண்ணாவோட அதிகம் பேசுறேன்னு சந்தேகம், ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு ஏன் தாமதமாக வருகிறாய் என்று தினமும் வாக்குவாதம், சரியாக சமைக்கிறதில்லைன்னு குத்தல் இன்னும் நிறைய ஏன் எனக்கு பிடிக்காத இந்த சாரி கட்டியிருக்க? இப்படி நிறைய எல்லாம் பொறுத்து பொறுத்து பார்த்தாகிவிட்டது திருமணமாகி இந்த 6 மாதத்தில்.இறுதியில் ஏன் உங்க அப்பா இங்க அடிக்கடி வர்றான்னு கேட்டு அப்பா மகள் உறவை கொச்சைப்படுத்திய பொழுதுதான் இவனை கொலை செய்தே விடுவது என்று முடிவு செய்துவிட்டாள்...

இப்போ கொலை செய்றதுன்னு முடிவு செய்தபிறகு எப்படி கொலை செய்வது என்று பல குழப்பம் கொலை செய்தால் போலீஸ் பிடித்து சென்றுவிடும் என்ற பயமும் கூடவே கொலை எப்படி செய்றதுன்னு தெரியாமல் நிறைய ஆங்கில பட டிவிடிகளை கணவன் வீட்டில் இல்லாத நேரங்களில் போட்டு பார்த்தால் ம்ஹ்ஹும் இதுவரைக்கும் ஒரு ஐம்பது படங்கள் பார்த்தும் மனதில் ஒரு யோசனையும் தோன்றவில்லை...

மருந்துக்கடைக்கு போய் பூச்சி மருந்து வாங்கி வந்து சாப்பாட்டில் கலந்து கொன்றுவிடலாம், தூங்கும்போது தலையணையால மூச்சை நிறுத்தி கொன்றுவிடலாம்,கத்தியில ஒரே குத்து குத்தி கொன்றுவிடலாம் இப்படி நிறைய யோசித்தாள் ஆனால் இது மாதிரியெல்லாம் பண்ணும்பொழுது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிந்துவிடும் என்று பயந்து அந்த முயற்சிகள் எல்லாவற்றையும் கைவிட்டாள்...

கொலை செய்றதுன்னு முடிவு பண்ணி ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் இன்னும் ஒரு உருப்படியான யோசனை கூட கிடைக்கவில்லையென்பதே அவளுக்கு இப்பொழுது பெரிய கவலையாகிவிட்டிருந்தது இப்பொழுது அவள் அவன் கணவனைவிட பெரிய கிரிமினலாக மாறியிருந்ததாக அவளுக்கு பட்டது சே என்ன வாழ்க்கை என்று நினைத்து பார்த்து கொண்டிருக்கும்பொழுதே வாசல் கதவை யாரோ தட்டுவது கேட்க யாரென்று போய் பார்த்தாள்..

வாசலில் அருண் கீழ் மூச்சு மேல்மூச்சு வாங்க நின்றிருந்தான் அருண் சிவாவின் அலுவலகத்தில் சிவாவின் உதவியாளராக பணிபுரிபவன் அரைகிலோ மீட்டர் தூரத்திலிருந்து ஓட்டமும் நடையுமாக வந்திருந்தான்.அவன் சொன்ன விஷயம் அவளுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது பிறகு நம்ம செய்ய நினைத்ததை ஆண்டவனும் செய்ய நினைத்திருப்பான் போல அவனிடமும் தப்பிவிட்டான் என்று உள் மனதில் நினைத்து கொண்டு அருண் சொன்ன ஆஸ்பிட்டலின் பெயருக்கு அங்கு அவசரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் சிவாவை காண மன விருப்பமே இல்லாமல் சென்றாள்...

அந்த ஆஸ்பிட்டலுக்கு சென்றதும் மருத்துவர் சொன்ன செய்தி அவளுக்கு உள்ளூர சந்தோஷமாக இருந்தாலும் தாலி பாசம் அவளை அவன் இருக்கும் ஐசியுக்கு தானாகவே அழைத்து சென்றது.டூவீலரும் லாரியும் மோதியதில் அவனின் கால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களையும் இழந்திருந்தான்.மருத்துவர்கள் இவருக்கு இனி கால்கள் திரும்ப வாய்ப்பில்லை என்று கூறிவிட்டனர் இன்னும் ஒர் இரு வாரங்களில் வீட்டிற்க்கு அழைத்து சென்றுவிடலாம் என்றும் கூறிவிட்டனர்..

வீட்டிற்க்கு அவனை அழைத்துவந்து நன்றாகவே கவனித்து கொண்டாள் அவன் இப்பொழுதும் அதே சிவாதான்.பாத்ரூம் போவதிலிருந்து அவனின் ஒவ்வொரு அசைவிற்க்கும் இவளின் உதவி தேவைப்பட்டது இப்பொழுது நித்யா தனக்கு இவனை கொலை செய்வதற்க்கான யோசனை கிடைத்துவிட்டதில் மிகவும் சந்தோஷப்பட்டாள் அவனுக்கு தேவையான அத்தனை உதவிகளும் அவன் கேட்காமலே இவள் செய்யும்பொழுது சிவா உள்ளூர கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்யப்பட்டு கொண்டிருந்தான்...ஆயுதம் எதுவும் இல்லாமல் அன்பு என்னும் மருந்தினால்...

February 17, 2010

சென்னை தனி மாநிலமாகிறதா?




சென்னை தமிழ்நாட்டின் இதயம்ன்னு சொல்லும் அளவிற்க்கு தமிழ்நாட்டின் அத்தனை பகுதியிலிருந்தும் வீட்டிற்க்கு பெரும்பாலும் ஒருவராவது சென்னையில் வசிக்கும் வரம் பெற்றிருக்கின்றனர் இந்த நகரில் விளையும் நல்லது கெட்டதுகளின் பிரதிபலிப்பை தமிழ்நாட்டின் அத்தனை ஊர்களிலும் காணலாம், சட்டமன்றம், சினிமாத்துறை,தொழில்துறை,மென்பொருள் துறை என அத்தனை விஷயங்களின் தலைமையிடமாக விளங்குகிறது.இதன் விளைவு இடப்பற்றாக்குறை, நில மற்றும் வீடு ஆகியவற்றின் விலை உயர்வு,வீட்டு வாடகை உயர்வு தண்ணீர் பற்றாக்குறை இன்னும் இன்னும் நிறைய நிறைய பிரச்சினைகள் இருந்தாலும் இவற்றையும் மீறி தினந்தோறும் சென்னை வந்து வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் செல்கிறது குறைந்த பாடில்லை...

ஏன் இந்த சென்னை மோகம் ? விமான போக்குவரத்து,கப்பல் போக்குவரத்து இந்த இரண்டு விஷயங்களினால்தான் இந்த இரண்டு விஷயங்களினாலும் தற்போது வந்திருக்கும் மென்பொருள் துறையினால் மட்டுமே சென்னையின் அத்தனை அசுர வளர்ச்சிக்கும் காரணம் என்று கூறலாம் இது இன்னும் எங்க போய் முடிய போகின்றதோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்


பொதுவா ஒரு ஸ்கூல்ல ஒரு வகுப்பில் படிக்கிற 40 மாணவர்களில் ஒருத்தன் நல்லா படிக்கிறான் அவனுக்கு அதுக்கு தகுந்த வசதிகளும் வாய்ப்பும் இருக்கென்று வைத்து கொள்வோம் ஆசிரியரும் அந்த மாணவனை மட்டும் நீ நல்லா படிக்கிறன்னு தட்டி குடுத்துட்டு மற்ற பசங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாரென்றால் அந்த வசதியான பையன் மட்டும்தான் நல்ல மார்க் எடுப்பான் மற்றவங்க எல்லாம் ஏதோ பேருக்கு படிச்சோம்ன்னு போய்டுவாங்க அதுமட்டுமில்லாம அந்த ஒரு மாணவரின் மீது மற்ற மாணவர்களுக்கு காழ்ப்புணர்ச்சியும் வரும் அப்பொழுது அந்த ஆசிரியர் என்ன பண்ண வேண்டும் மீதியிருக்கும் மாணவர்களுக்கும் அவர்கள் படிப்பதற்க்கு தகுந்த வசதியும் ஊக்கமும் கொடுக்கும்பொழுது மற்ற மாணவர்களுக்கும் இன்னும் நல்லா படிக்கணும்ன்னு ஆர்வம் வரும் அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் தேர்ச்சி பெற்று அந்த பள்ளிக்கே பெருமை சேர்ப்பார்கள் ஒரே ஒரு மாணவன் மட்டுமே அந்த பள்ளிக்கு பெயர் வாங்கித்தருவது எப்படியிருக்கும் அனைத்து மாணவர்களும் சேர்ந்து அந்த பள்ளிக்கு பெயர் வாங்கித்தருவது எப்படியிருக்கும்?

இதே போல்தான் தமிழ் நாட்டின் அனைத்து நகரங்களில் வசிக்கும் மக்களின் சென்னை வாழ்க்கை ஆசையானது சென்னை மீது ஒரு வித காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் இல்லைன்னு சும்மா வார்த்தைக்கு வேண்டுமானால் சொல்லலாம் ஆனால் நிஜத்தில் நம்மலால சென்னையில் வாழ முடியலைன்னு ஒரு ஏக்கம் இருக்கும் .இந்த அரசும் அரசாங்கமும் அரசியல் வாதிகளுமே சென்னையையே விரும்புகின்றனர் ஆதலால் அவர்களும் இந்த விஷயத்தை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாமல் பத்தோடு பதினொன்றாக ஆட்சி செய்துவிட்டு போய்விடுகின்றனர்..

சென்னை தவிர மற்ற நகரங்களில் வாழும் எங்களுக்கு இப்போ என்ன தேவைன்னு நினைத்து பார்க்க அரசாங்கத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் நேரமில்லை ஏன் தமிழ் நாட்டில் இருக்கும் மதுரை திருச்சி கோவை போன்ற நகரங்கள் இன்னும் வளரும் நகரங்களாகவே இருக்கின்றன? இந்நகரங்களிலும் சென்னையில் இருக்கும் பாதி அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களை பகிர்ந்து அந்நகர வளர்ச்சிகளுக்கும் அரசு உதவலாமே ஆனால் முயற்சி செய்ய மாட்டார்கள் அத்தனைக்கும் லஞ்சம் என்ற விஷயத்தையும் தாண்டி சுயநலம் என்ற ஒன்றும் இருக்கின்றது , முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரின் வீடு நிலம் அனைத்தும் சென்னையில்தானே இருக்கின்றது இன்னும் நிறைய அரசியல் தலைவர்களின் பங்குகளும் சென்னையில் இருக்கும் தனியார் தொழில் நிறுவனங்களின் மூதலீடாய் இருக்கின்ற பொழுது அவர்கள் எப்படி சென்னையை விட்டு மற்ற நகரங்களின் வளர்ச்சியில் அக்கறை கொள்வார்கள்?

இப்படி கப்பல் துறைமுகம் இருக்கும் நகரம் மட்டும் தொழிற் புரிய வசதின்னு ஒரு நியாயம் இருக்கிறது ஏனென்றால் உற்பத்தி செய்த பொருள்களின் ஏற்றுமதிகளுக்கும் உதிரி பாகங்களின் இறக்குமதிக்கும் சரியென்று வைத்துகொண்டாலும் மற்ற கணிணி மென்பொருள் துறையும் சென்னையிலேதான் வளர்ச்சி பெறவேண்டுமென்று விதியிருக்கிறதா என்ன? கேட்டால் கணிணி மென் பொருள் துறை வல்லுனர்கள் ஓய்வு நேரங்களை கழிக்க சிறந்த பொழுதுபோக்கு இடங்களும் இங்கே நிறைய இருப்பதால் பெரும்பாலானோர் சென்னையையே விரும்பவதாக கூறலாம் அந்த பொழுதுபோக்கு வசதிகளை தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் ஏற்படுத்தி அந்த நகரங்களிலும் மென் பொருள் துறை வளர்ச்சியை ஏற்படுத்தலாமே இப்பொழுதும் இநநகரங்களில் மென் பொருள் நிறுவனங்கள் இயங்கினாலும் சென்னை அளவிற்க்கு வளர்ச்சியடையவில்லையென்றே கூறலாம்...

ஏன் சினிமாத்துறை சென்னையில் மட்டும் இயங்குகிறது? சினிமா தயாரிப்பதற்க்கு தேவையான மூல சாதனங்கள், ஸ்டுடியோக்கள், ரெக்கார்டிங் ஸ்டுடியோக்கள் அத்தனையும் சென்னையில் மட்டுமே இருப்பதனால் சினிமா தயாரிப்பவர்களால் சென்னையை விட்டு வெளியே வர விருப்பமில்லை அத்தனை வசதிகளையும் தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் ஏற்படுத்தி அங்கேயும் திரைப்படம் எடுக்க முயற்சிக்கலாமே செலவுகளும் குறையும்,ஆனால் இதையும் கண்டுகொள்வார்களா மாட்டார்கள் ஏனென்று அவர்களுக்கும் திரைப்படத்துறையினருக்கு மட்டுமே வெளிச்சம்...

இன்னும் கல்வி,மருத்துவம் அத்தனையிலும் பிரதான நிறுவனங்கள் அனைத்தும் சென்னையில் மட்டும் இயங்குகின்றன இப்படியே போனால் சென்னை தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து தனி மாநிலமாக உருவெடுக்கும் நிலை வரலாம் அப்படியான சூழ்நிலையில் வளர்ச்சியடையாத நகரங்களை மட்டுமே வைத்துகொண்டு மீதியிருக்கும் நாடு பொருளாதார நிலையில் கடும் வீழ்ச்சிகளை சந்திக்கும் நிலை ஏற்படும் என்பது நிச்சயம்..இவற்றை தவிர்க்க தமிழ்நாட்டின் மற்ற நகரங்களையும் கண்டுகொள்ளுமா அரசு?


பதிவர் சந்திப்புகளும் புத்தக வெளியீடுகளும் கூட சென்னையில் மட்டுமே நடைபெறுவதற்க்கும் என்ன காரணம் என்று சென்னை பதிவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கே வெளிச்சம் கேட்டால் சென்னையில் நிறைய பதிவர்கள் இருப்பதாக கூறிக்கொண்டாலும் இந்த சந்தோஷகரமான புத்தக வெளியீடு பதிவர் சந்திப்பு போன்றவற்றை பார்க்கும் ஏனைய நகரங்களில் இருக்கும் பதிவர்களின் மனவெளிப்பாடு எப்படியிருக்கும்? அவர்களும் இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பார்கள்தானே கன்னியாகுமரியில் இருக்கும் ஒரு பதிவர் சென்னை வந்து கலந்துகொள்ள ஆகும் செலவை நினைத்து பார்த்தால் அம்மாடி இருந்தாலும் புத்தக வெளியீடு சந்திப்புகளுக்கான சூழ்நிலை ஆகியவற்றிற்க்கும் சென்னை வசதியாக இருக்கிறது அதற்கு அவர்களை சொல்லியும் குற்றமில்லை...

(இது முற்றிலும் என்னுடைய கருத்து மட்டுமே)



February 11, 2010

நானும் நீயும் மழையும் ...!




கண்கள் விரித்து பட படவென்ற இமைகள் துடிக்க துடிக்க நீ என்னுடன் கடற்கரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கையில் தவழும் குழந்தையொன்று கண்களில் தெரியாமல் குத்திவிடுவதுபோல் நாம் பேசிக்கொண்டிருக்கும்பொழுதும் மழையும் வந்து விடுகிறது....




அந்த மழைநாளில் நீ மழையில் நனைந்து கொண்டிருந்த வேளையில் உற்றுக்கவனித்தேன் மழை உன்னை பிடித்திருக்கும் குடையாய் மாறியிருந்தது..அந்த நொடி நான் உன் மீது விழும் மழையாய் போய்விடக்கூடாதா என்று ஏங்க வைத்தாய்....

பொதுவாக நான் உன்னை அணைக்கும் வேளைகளில் சின்ன சின்ன சிணுங்கல்களுடன் கன்னங்கள் ரோஜா நிறத்தில் சிவந்து நீதான் வெட்கப்படுவாய் ஆனால் மழைத்துளியோ உன்னை அணைத்து தட தடவென்ற சிணுங்கல்களுடன் வெட்கம் தாளாமல் மண்ணில் புதைந்து கொள்கின்றன...

ஹூக்கும் நான் அணைக்கவந்தால் சின்ன கோபத்துடன் கைதட்டி விடுகிறாய் மழை அள்ளி அணைக்கும் வேளையில் புன் சிரிப்போடு ஏற்றுக்கொள்கிறாய் ஏன் இந்த பாரபட்சம்?

இந்த மழை உன்னை சீண்டும்பொழுதெல்லாம் வானம் வைடு ஜூமில் உன்னை மின்னல் என்னும் ஃப்ளாஷ் அடித்து புகைப்படமாய் சேமித்து கொள்கிறது கேட்டால் கார்மேகம் இதுவரை சேமித்துவைத்திருந்த உன் மீதான காதலின் சாட்சியாம்.... ஹூக்கும் நான் எப்பொழுதும்போல் அவுட் ஆஃப் போகஸில்....

உனக்கு எப்பொழுதும் மழைபிடிக்குமென்கிறாய் உனக்கு பிடித்தது போலவே மழைக்கும் உன்னைபிடித்திருக்கும்போல நீ சொன்னதும் பட பட வென்று வந்து சில்லென்று வீசிப்போகிறது உன்னைப்போலவே....

வந்துவிட்ட மழையில் நனைந்தது போதுமென்று நீ குடை எடுத்து விரிக்கின்றாய் அடுத்த நொடியே நின்றுவிடுகிறது மழை குடையின் மீது கோபம் வந்திருக்கும் போல பாவம் அதற்கெப்படிதெரியும் நீ மழைக்கால குளிர் சூட்டை தணிக்க குடை கொண்டுவராத என்னை உன்னுடன் சேர்த்துகொள்வதற்க்குத்தான் நீ குடைவிரித்ததை....

பிறகு நம் காதல் புரிந்திருக்கும் போல மீண்டும் சோவென்று மழை பெய்கிறது நானும் நீயும் உன்னுடைய குடையில் நனையாமல் இருந்தோமென்றால் நம் காதல் பொத பொதவென்று நனைந்திருந்தது...மழைவிட்டதும் நனைந்திருக்கும் இலைபோல...

இப்பொழுதும் மழை வரும்பொழுதெல்லாம் உன் நினைவுகள் உயிர்பெற எத்தனிக்கின்றன மீட்டெடுக்க இன்னொரு மழையாய் நீ வருவாய் என்ற நம்பிக்கையில் மரணித்த நம் காதல் மூன்றாவது நாளுக்காய் மீள துடித்து கொண்டிருப்பது தெரியாமல் ...


February 9, 2010

கள்ள சாதி(வி)...! (U/A)




எனது நண்பர் அமீரகத்தில் கட்டுமான துறையில் பொறியாளராக பணிபுரிகிறார் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது.இரண்டரை வயது ஆண்குழந்தை இருக்கிறது.நண்பர் அமீரகம் வந்து ஒரு வருடம் 7 மாதங்கள் ஆகிறது , நல்ல படியாகவே ஊருக்கு மாத மாதம் பணத்தை மனைவிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் , இதனால் தன் குடும்பம் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது என்ற நினைப்பில் இருந்திருக்கிறார் ஆனால் அங்கு நடந்ததோ வேறு நண்பரின் மனைவி தன் அத்தை மகனுடன் கள்ளத்தனமான உறவு வைத்திருக்கிறார் மாத மாதம் நண்பர் அனுப்பிய பணத்தை கள்ளக்காதலனுடன் செலவளித்து மிகவும் உல்லாசமாக இருந்திருக்கிறார் நண்பரின் பெற்றோர் உயிருடன் இல்லையாதலால் கண்டிக்க ஆள் இல்லையென்பதால் ஊரிலிருக்கும் நண்பரின் வீட்டிலேநண்பரின் மனைவியும் அவரின் அத்தை மகனும் கணவர் மனைவி போலவே வாழ்ந்திருக்கின்றனர்.


தற் சமயம் நண்பரின் தங்கை அந்த ஊரிலே வாழ்ந்து வருகிறார் அவரின் மூலம் தன் மனைவியின் நடத்தை பற்றி தெரிய வருகிறது நண்பர் நம்பவில்லை நண்பர் தொலை பேசும்பொழுதெல்லாம் எப்போ வருவீர்கள் என்றும் நீங்கள் அருகில் இல்லாமல் நன்றாக இல்லை என்றும் கூறி நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறார் நண்பரும் தன் மனைவியின் மீது நம்பிக்கை வைத்து தங்கை ஏதோ பொறாமையில் பொய் சொல்கிறாள் என்று நினைத்தவர், 18 மாதம் முடிந்ததும் வரும் விடுமுறைக்கு சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு சென்றவருக்கு பலத்த அதிர்ச்சி தன் மனைவியை பற்றி தங்கை கூறிய அனைத்தும் பொய் என்று நினைத்து சென்றவரின் எண்ணம் சுக்கு நூறாக உடைந்தது இவரை விமான நிலையத்தில் வரவேற்க்க கூட வரவில்லை சரி வேறேதாவது உடல் நிலை சரியில்லாமல் போயிருக்கலாம் என்று அலை பேசிக்கு அழைத்திருக்கிறார் அலை பேசி அணைக்கப்பட்டிருக்கின்றது சரி வீட்டிற்க்கு போய் என்னவென்று பார்த்து கொள்ளலாம் என்று வீட்டிற்க்கு சென்றவருக்கு வீடு பூட்டப்பட்டிருந்திருக்கிறது அக்கம் பக்கத்து வீட்டாரிடம் விசாரித்த போது வீட்டு சாவியை தன் கணவர் வந்தால் கொடுத்து விடும்படி சொல்லி சென்றிருக்கிறார் அவர்களும் வேறெதும் கூறவில்லை.

வீட்டை திறந்தது குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்டிருக்கிறது கொண்டுபோன பொட்டிகளை அப்படியே போட்டுவிட்டு உள்ளே சென்று அவர் பார்த்த காட்சி அய்யகோ அவர் சொல்லும்போது எனக்கே அழுகை வந்து விட்டது அவரின் இரண்டரை வயது குழந்தையின் இரு கைகளிலும் செயின் வைத்து வீட்டின் படுக்கை அறை கட்டிலில் கட்டி போட்டிருக்கின்றார், எப்படியிருந்திருக்கும் அந்த மனுசனுக்கு சே...பக்கத்தில் ஒரு கடிதம் வேறு இருந்திருக்கிறது தனக்கு நண்பரை பிடிக்கவில்லை என்றும் தன் அத்தை மகனுடன் வாழப்போவதாகவும் இதுவரையில் தனக்கு அனுப்பிய பணம் செலவழிந்து விட்டதாகவுமிந்த சனியனை நீங்களே பார்த்துகொள்ளுங்கள் என்று குழந்தையை திட்டி எழுதியிருக்கின்றார் ...பாவம் அந்த குழந்தை இந்த ஒன்றரை வருடங்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தியிருப்பா அந்த ராட்சஷி ...நண்பர் உடைந்து போயிருக்கிறார் பிறகு உற்றார் உறவினர்கள் அனைவரும் எல்லாம் உண்மைதானென்றும் கவலைப்பட வேண்டாம் என்றும் ஆறுதல் அளித்திருக்கின்றனர்..நண்பர் தேறுவதாயில்லை விடுமுறை முடிவதற்க்கு முன்பாகவே குழந்தையை தன் தங்கையின் பாதுகாப்பில் விட்டுவிட்டு வந்திருக்கிறார் பாவம் வீடு கட்ட வாங்கிய கடன் பணம் நினைவிற்க்கு வந்து வேறு வழியே இல்லாமல் வந்த அவர் சொன்ன கதைதான் இது...இனி நண்பர் காண்ட்ராக்ட் முடியும் வரை மட்டுமே அமீரகம் இருக்க போவதாகவும் பிறகு வெளிநாடு பக்கமே எட்டிப்பார்க்க போகப்போவதில்லை என்றும் கூறினார் என்ன செய்வார் அந்த குழந்தையின் எதிர்காலத்தை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது...

பொதுவாக திருமணம் ஆகாத இளைஞர்கள் அமீரகம் போன்ற வெளிநாட்டில் எப்படியோ இளமை விரகதாபங்களை அடக்கி கொண்டு இருந்துவிடுகிறோம், திருமணமான கணவர்களுக்கு எப்படியிருந்திருக்கும் அதுவும் திருமணம் முடிந்ததும் ஒரு மாதமோ இருமாதமோ கடந்ததும் இங்கு வரும் கணவர்களின் நிலைமை கொடுமையிலும் கொடுமை முதல் இருமாத சம்பள பணத்தை தொலைபேசியே கரைத்துவிடுகிறார்கள் இளமைதீ கொழுந்து விட்டு எரிவதை கண்கூடா பார்க்கலாம் அவர்களும் அப்படியே தங்களுக்குள்ளே அடக்கி கொண்டு வேலை செய்து வருகின்றனர்..இப்படி இங்கு வந்து கஷ்டப்படணும்னு யார் அழுதா என்று யாராவது கேட்கும்பொழுது கட்டிக்கொடுக்காத தங்கச்சி, படிக்கிற தம்பி இவர்களின் நிலமை கேள்விக்குறியாகிவிடகூடாது என்றும் எதிர்கால வாழ்க்கையை நல்ல சுகமாக வாழவேண்டுமென்றே இங்கு வருகின்றோம், நம் வீட்டுக்காரர் வெளி நாடு போய் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது எல்லாமே நமக்காக நம் குடும்பத்திற்க்காகத்தான் என்று ஏன் அந்த ராட்சஷி ஏன் நினைத்து பார்க்கவில்லை? சே மானங்கெட்ட சென்மங்கள் இப்படியும் சில மனிதர்கள்..


இதற்கெல்லாம் காரணம் சோம்பேறித்தனமாக ஊரை சுற்றிக்கொண்டும் அவள் வீட்டுக்காரன் எப்போ வெளியூர் போவான் அவளை எப்படி கவிழ்க்கலாம் என்று திட்டம் தீட்டும் ரோமியோக்கள் இவர்களைத்தான் முதலில் பொது இடத்தில் வைத்து ஆண்குறியை வெட்டிவிடவேண்டும் சண்டாள படுபாவிகளா ? ஏண்டா இப்படியிருக்கீங்க கொஞ்சம் சிரிச்சு பேசிட்டா போதும் அந்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டதா இல்லையா என்று பொருட்படுத்துவதே கிடையாது அவர்களை தனது இச்சைக்கு அடி பணிய வைத்து விடவேண்டும் என்பதே குறியாய் இருக்கிற இவர்களின் குறியை சுட்டால்தான் என்ன? பொண்டாட்டிய எவ்வளவு ஆசை ஆசையா வச்சுகிடணும்ன்றதுக்காக காலையில வேலைக்கு போய்விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்புறதுக்குள்ள எத்தனை சுரண்டலத்தாண்டா அவங்களும் தாங்குவாங்க? வீட்டில மனைவி தனக்காகவே காத்திட்டு இருப்பாங்கன்னு நம்பிக்கையோட இருக்குற கணவர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்ய எப்படித்தான் மனைவி"மார்"களுக்கு மனசுவருகிறது?

ஒருத்தர் உபயோகித்த சட்டை , இருசக்கரவாகனம்,பேனா ஆகியவற்றை இன்னொருவர் திருடி பயன் படுத்தலாம் ஆனால் ஒருத்தர் தொட்டு தாலி கட்டிய ஒரு பெண்ணை இன்னொருத்தர் தொட்டு....சே சொல்றதுக்கே கேவலமான செயலை செய்ய நினைக்கும் பாதகர்களை நினைக்கும் பொழுது சவுதி நாட்டு தண்டனைதான் ஞாபகத்திற்க்கு வருகிறது உண்மையிலே இப்படி செய்பவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கூட நடு ரோட்டில் நிற்க வைத்து சுட வேண்டும்...

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்

என்னும் குறளில் வள்ளுவர் எவ்வளவு அழகாக பிறர் பொருளாய் இருக்கும் பெண்மையை அடைய நினைப்பது பேதமை என்றும் அறத்தின் பொருள் அறிந்தவர்களிடம் இல்லாத இச்செயல் தர்மத்தின் படி வாழாமல் காமமே குறியாய் வாழும் மாந்தர்களிடம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.எதுக்கு சொன்னார் தனக்கு பிறகு வரும் சந்ததியினர் இதை பின்பற்ற வேண்டும் என்பதற்க்குதானே...

அதற்க்காக எல்லாரையுமே கெட்டவங்கன்னு சொல்லவில்லை ஒரு சில இதுபோல இருக்கும் இருந்துகொண்டு சமுதாயத்தில் ஊடுருவியிருக்கும் நச்சுக்களுக்குமட்டுமே...நம்ம தமிழ்ப்பண்பாடாகிய ஒருவனுக்கு ஒருத்தின்ற பண்பாட்டை மீறாமல் நமக்கு பின் வரும் சந்ததியினருக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் வாழவிரும்ப வேண்டும் இதுபோன்ற மோசமான எடுத்துக்காட்டிற்க்கு ஆளாகமலிருக்க வேண்டும்...



இதுக்கு மேல என்னால எழுத முடியல இதுமாதிரியான கள்ள உறவுகளுக்கு நரகத்தில் கருட புராணத்தில இருக்கும் அத்தனை தண்டனையும் கொடுக்கப்படுமாம் நினைவில் வைத்துகொள்க...


February 5, 2010

சுஜாதா...!



இருவார்த்தை கதைகள்


நம்ம சுஜாதா சார் மாதிரி வரலை இருந்தாலும் ட்ரை பண்ணியிருக்கேன் ஏதோ மொக்கையா இருந்தாலும் கொஞ்சம் சுவாரஸ்யமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்...எல்லாம் ஒரு முயற்சிஅம்புட்டுத்தேன்...


தலைப்பு : போயிட்டு வர்றேன்ப்பா

கதை : வாசலில் அவசரஊர்தி

************************************************************

தலைப்பு : போஸ்டர் ஓட்டுபவன் கடைசிஆசை

கதை : நிஜக்கண்ணீர் அஞ்சலி

************************************************************

தலைப்பு : ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக

கதை : தொலைக்காட்சி விளம்பரம்

************************************************************

தலைப்பு : ஃபுல் மீள்ஸ் கிடைக்கும்

கதை : அதான் எவ்வளவு?

************************************************************

தலைப்பு : செக்ஸாலஜி டாக்டரின் முதலிரவு

கதை : கவுன்சிலிங் ஃப்ரீ

************************************************************

தலைப்பு : முதன்முறையாக இரட்டைவேடத்தில்

கதை : சினிமாவில் மட்டும்

************************************************************

தலைப்பு : போட்டோகிராஃபர் திருமணம்

கதை : ஸ்மைல் ப்ளீஸ்

************************************************************

தலைப்பு : அடுத்தவாரம் கிரிக்கெட்மேட்ச் இருக்குடா

கதை : பெட் எவ்வளவு?

************************************************************

தலைப்பு : கனவில் ஒரு நிஜம்

கதை : நைட் வாட்ச்மேன்

***********************************************************

தலைப்பு : சலூன்காரரிடம் டெய்லர்

கதை : அளவா வெட்டுப்பா

***********************************************************



February 3, 2010

ஒரு வேப்பமரத்தின் நிழலில்...!


ஒரு பதினைந்து குடும்பங்கள் வாழும் ஒரு சின்ன ஊரில் நாட்டாமையாக வீற்றிருக்கும் ஒரு வேப்ப மரத்தின் நிழலில் அவ்வப்பொழுது தங்களின் ஆற்றாமை, மனச்சோர்வு, வெறுப்பு, இன்னும் பல பல எடுத்து சொல்லும்மனிதர்கள் பற்றிய ஒரு பார்வை...

எஞ்சாமி ஏன் என்னைய இப்பிடி பொலம்பவிடுற? நானும் என் வீட்டுக்காரரும் நல்லாத்தானே வாழ்ந்துட்டு இருந்தோம் அந்தாளு எம்புட்டு குடிச்சுட்டு வந்தாளும் சத்தம்போட்டு பேசாது போடுற சோத்த தின்னுட்டு தூங்கிடும், கோழி கூவுனதும் அரக்க பரக்க எந்திரிச்சு அது வயக்காட்டுக்கு போற வேகம் ரத்திரியில எங்கிட்ட காட்டுற வேகத்தை காட்டிலும் அதிகம்,யார் வீட்டு சண்ட சச்சரவுக்கும் போகாது வேலைக்கு போனோமா வந்தோமான்னு அதுபாட்டுல சுத்திவிட்ட பம்பரமா சுத்திட்டு இருந்துச்சு..

போன செவ்வாகிழமை எப்பயும்போல வெரசா எந்திரிச்சு வயலுக்கு போச்சு சாமி சாமி அது வயலுக்கு போற தினுசே அம்புட்டு அழகா இருக்கும் சுருமாட்ட தலைக்கு கட்டிட்டு சுருக்கமா இருந்தாலும் அது போட்டதும் வெரச்சு நிக்கிற சட்டைய போட்டுகிட்டு நாலுமுழம் வேஷ்டிய பட்டா டவுசரு தெரிய ஏத்தி கட்டிட்டு உதட்டோரம் வழியிற மீசைய முறுக்கிவிட்டுஇரட்டை அவுனு மம்பட்டிய தோள்ல போட்டு அது வயலுக்கு போற அழக பாக்கறதுக்கே கண்நூறு வேணுஞ்சாமி...

வாடி வெரசான்னு என்னையும் சேத்து இழுத்துட்டு ரெண்டுபேரும் வயலுக்கு போனோம்...நானும் முடிஞ்ச கொண்டையோட மத்தியான கஞ்சிய தூக்குவாளில போட்டுட்டு அதுபின்னாடியே போனேன் நடைன்ன நடை அம்புட்டு வெரசா நடக்கும் அந்தமனுசன் அது பின்னாடி போறதும் ஒன்னுதான் ரயிலுவண்டி பின்னாடி போறதும் ஒன்னுதான் அம்புட்டு வெரசா நடக்கும் கால்ல ஒண்ணும் செருப்புகிருப்பு போட்டுகிடாது வயக்காடுப்பக்கம் வெந்துபோன ரோட்டுல நடந்து நடந்து அதுகாலு காய்ச்சுப்போய் கிடக்கும் முள்ளு குத்தினாலும் தெரியாது மரத்துப்போன கால் எனக்குத்தான் முடியாது நான் சந்தயில சோடி பத்து ரூவான்னு வாங்குன ரப்பரு செருப்பு போட்டுட்டுத்தான் நடக்குறது அந்த செருப்பு கூட வாரு பிஞ்சுபோச்சு அதையும் அந்த மனுசந்தான் தச்சு குடுத்துச்சு...

வயலுக்கு போயி வரப்புகளை வெட்டி கரும்புக்கெல்லாம் நல்லா தண்ணிய பாய்ச்சிட்டு கிடந்துச்சு நான் இந்தப்பக்கம் கரும்புமோட்டு பெரக்கிகிட்டு இருந்தேன் திடீர்ன்னு அய்யோன்னு சத்தங்கேட்டு கிழக்கால என்னன்னு ஓடிப்போயி பாத்தா எஞ்சாமி அய்யோ அய்யோ மவராசா மார்ல கைய வச்சமானிக்கே கீழ விழுந்து கிடக்கு என்னாச்சு சாமின்னு கேட்க கேட்க கண்ணுமுழி ரெண்டும் இடவலமா போயிட்டு வந்துச்சு மூச்சு திணறி திணறி விட்டுச்சு யாராச்சும் தூக்குங்களேன் டவுனாஸ்பத்திரிக்கு தூக்கிட்டி போகலாம்ன்னு சத்தம் போட்டுட்டு இருக்கும் போது தெக்குத்தெரு துரப்பாண்டி வந்து சேர்ந்தான் என்னாச்சு தாயின்னு கேட்டுட்டே அவன் வந்து சேந்த நேரம் அந்த மனுசன் உசுருபோயிடுச்சு....

கடைசி வரைக்கும் நமக்கு ஒரு புள்ள பொறக்கலியேன்ற ஏக்கம் அதுக்கு.. அதுக்காக என்னைய ஒரு வஞ்சொல்லு சொன்னதில்ல அவங்காத்தாக்காரி ஒரு நாளு புழு பூச்சிகூட வைக்காத இவகூட என்னடா வாழ்க்கை அத்துவிட்டுட்டு வாடா உம்மாமன் பொண்ண ரெண்டாந்தாரமா முடிச்சு வைக்கிறேன்னு சொன்னதுக்கே அந்த ஆத்தாக்காரிய வீட்டவிட்டே துரத்திவிட்டுடுச்சு அம்புட்டு பாசம் எம்மேல

அது கத சொல்ற அழகே அழகு நல்லதங்கா கதைய அம்புட்டு சுவரஸ்யமா சொல்லும் நல்லண்ணன் நல்லதங்காள் ரெண்டும் உடன்பொறப்புக நெம்ப சீமானா வாழ்ந்தவன் நல்லண்ணன் தங்கச்சிக்காரி நல்லதங்காள வேற ஊருக்கார பயலுக்கு கட்டி கொடுத்தான் அந்த பய வாழத்தெரியாம வாழ்ந்து வாழ்ந்து இருக்குற காசப்பூர கரியாக்கிட்டான் ஏழு புள்ளைக அதுகள வச்சுகிட்டு படாத பாடு பட்டா நல்லதங்கா தின்ன சோறு இல்ல நெம்ப வறுமை அப்பிடியிருக்கச்ச நல்லதங்கா தங்கச்சிக்காரி அண்ணன்காரன் வீட்டுக்கு குழந்த குட்டிகளோடபோறா போன நேரம் அண்ணங்காரன் வேட்டைக்கு போயிட்டான் வீட்டுல அண்ணி மட்டுந்தேன் இருந்துருக்கா அவ நல்லதங்காளையும் அது புள்ளைகளையும் நெம்ப கொடுமைபண்ணிருக்கா அந்த கொடுமை தாங்காம நல்லதங்க ஏழுபுள்ளைகளையும் காட்டுப்பக்கப் போயி கிணத்துல தூக்கிபோட்டு அவளும் குதிச்சு செத்துபோயிட்டாளாம் இது தெரிஞ்ச நல்லண்ணன் அண்ணிக்காரிய தண்டிச்சு அந்தாளும் செத்து போயிட்டாராம் அவ புருசனும் செத்துபோனான்ன்னு அது சொல்லி முடிக்கும்பொதே இப்பிடியெல்லாம் மனுசருக இருந்துருக்காகன்னு தோணும்...

இன்னும் இன்னும் ஊருல நடக்குற அக்குரமங்களையும்,விஷயங்களையும் அது எங்கிட்ட வந்து சொல்லி பொலம்பும் இனி எங்கிட்ட பொலம்ப யாரு சாமி இருக்கா நான் யார்கிட்ட போயி பொலம்புவேன் என்னையும் உங்கூடயே கூட்டிட்டு போயிடு சாமி உனக்கு புண்ணியமா போகும்....

இப்படி இன்னும் நிறைய பொலம்பல்கள் எப்பாவாச்சும் தொடரும்...