November 1, 2009

விசேஷம்....



அட போன வருஷம் நம்ம கூட நிலசொத்துக்காக சண்டை போட்ட சித்தப்பா மகன் செல்வம் வந்துருக்கான்..வாடா வாடா..

பார்டா நம்ம கிட்ட காசு வாங்கிகிட்டு டிமிக்கி குடுத்துட்டு இருந்த அய்யாசாமியும் வந்துருக்கார்..வாங்க வாங்க..

ஆகா..வரதட்சணையில் கொஞ்சம் குறை வச்சுட்டேன்னு ஒருவருசமா வீட்டுப்பக்கம் கூட வராம இருந்த சம்பந்தியும் வந்துருக்கார்..வாங்க சம்பந்தி...

சொத்து பிரிச்சு கொடுத்ததில் குறைச்சலா குடுத்துட்டேன்னு போடா வாடான்னு பேசிட்டு போன மூத்தவன் பாண்டியும் வந்துருக்கான்..வாடா செல்லம்...

மொய் ஒரு ஆயிரம் ரூவா குறைச்சலா செஞ்சுட்டேன்னு ஊர் முழுக்க பேசி மானத்தை வாங்கின தங்கச்சி சொர்ணமும் வந்துருக்கா.. வா சொர்ணம்...

மளிகை கடை பாக்கி காசு கொடுக்கலைன்னு அவமானப்படுத்துன கணேசன் செட்டியாரும் வந்துருக்கார்..வாங்கண்ணே...

சுவத்துல ஆணி அடிச்சதுக்காக வீட்டை காலி பண்ணிட்டு போன்னு சொல்லி விரட்டுன பழைய வாடகை வீட்டின் சொந்தக்காரர் சீனியும் வந்துருக்கார்.... வாங்க சீனி..

அவசர காலத்துக்கு ஒரு பத்தாயிரம் கொடுத்து உதவலைன்னு ஆறுமாசமா பேசாம இருந்த நண்பன் விஜயனும் வந்துருக்கான்..வாடா விஜயா...

தன்னோட மகனுக்கு எம்பொண்ணை கொடுக்கலைன்றதுக்காக வீடேறி சண்டை போட்டுட்டு இனிமேல் உன் வீட்டு வாசப்படி கூட மிதிக்க மாட்டேன்னு சொல்லிட்டு போன மச்சான் ஆறுமுகமும் வந்துருக்கார்..வாங்க மச்சான்...

தெருக்குழாயில ஒரு குடம் தண்ணீர் ஜாஸ்தியா பிடிச்சதுக்காக மூஞ்சி தூக்கிவச்சுட்டு திரிஞ்ச எதிர் வீட்டு மாமி கோகிலாவும் வந்துருக்கா..வாங்க மாமி..

முதலாளிகிட்ட சொல்லி தன்னோட மகனுக்கு வேலை வாங்கித்தரமாட்டேன்னுட்டியெ நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனான்னு திட்டிட்டு போன குப்புசாமியும் வந்துருக்கான்... வாடா குப்பு சாமி...

இப்படி இருக்கும் போது சண்டைபோட்ட சொந்தபந்தமெல்லாம் என்னோட இறப்புக்கு வந்ததில எல்லாருக்கும் நன்றின்னு சொல்லி பறந்து சென்றது சொற்ப நேரத்துக்கு முன்னாடி மாரடைப்பில் காலமான மாணிக்கத்தின் ஆவி தன்னோட மனைவியின் குங்குமத்தையும் பூவையும் சந்தோசத்தையும் எடுத்துக்கொண்டு...