May 28, 2011

ரதி வீதி - பாகம் 1


அழகி, பேரழகி, தேவதை, நிலா இந்த வார்த்தைகளுக்கு பொருந்திய உன்னுடைய அழகை மேற்க்கொண்டு விவரிக்க வார்த்தைகளற்று திரியும் எனக்கும் நீ சரியாய் பொருந்திப்போனதுதான் ஆச்சரியம்.

குட்டிக்குட்டி பெண் குழந்தைகளை தன் மடியில் அமர்த்தி தன்னுடைய இறக்கையிலிருந்து ஒரு இறகை பிய்த்து குழந்தைகளுக்கு தந்து அவர்களையும் தேவதைகளாய் ஆக்குகிறாள் தேவதையொருத்தி, என்னை உன் கையிலிருந்து கோடாரி பெற்றுக்கொள்ளும் விறகுக்காரனாவது ஆக்கிவிடு என்ற மாத்திரத்தில் தன்னுடைய இறகால் வருடிக்கொடுத்து என்னை தேவதை தாசனாக்கிவிட்டாள்.

காய்ச்சல் இருமல் தும்மல் போன்ற உணர்வுகளைப்போல் உன்னைப் பார்க்கும்பொழுதெல்லாம் வரும் ஒருவித மயக்க உணர்வுக்கு பெயர் தேடிக்கொண்டிருக்கிறேன் கிடைத்தபாடில்லை , நீயே சொல்லிவிடு என்றால் ஐ லைக் யூ என்று சொல்லிப்போகிறாய்.

கவிதையில் உவமை சம்மனமிட்டு அமர்ந்து கவிதையோடு சேர்ந்து தானும் அழகாவது போல் உன் முகத்திலிருக்கும் மூக்குத்தியும் உன்னோடு சேர்ந்து அழகாகிறது.

பிரிக்க முடியாதது எதுவென்ற உன் திருவிளையாடல் கேள்விக்கு உன்னையும் அழகையும் என்ற பதில் சொல்லி உன்னிடம் ஆயிரம் முத்தங்கள் வாங்கலாமென்று பார்த்தால் நெற்றியில் ஒற்றை முத்தமிட்டுவிட்டு நெற்றியிலிட்டாலும் முத்தம் முத்தமே  என்று ஏக வசனம் பேசுகிறாய்.

நாளைக்கு சென்னை போகிறேன் என்றவளிடம் அப்போ நாளையிலிருந்து நீ இருக்கும் வரை அது சிங்காரச்சென்னையல்ல சிங்காரிச்சென்னை என்று சொல்லி ஒரு கட்டியணைப்பு பரிசில் பெற்றேன்.

ஹோம்சிக் வந்து விடுமுறை கேட்டால் உடனே விடுப்பளித்துவிடும் மேலாளரிடம் உன்சிக் வந்திருப்பதை சொன்னால் மட்டும் முறைக்கிறார், அவருக்கெப்படி தெரியும் இரண்டு சிக்கும் நீதான் என்று.

கோவில் பிரகாரத்தைச்சுற்றியிருக்கும் ரத வீதிகள் எல்லாம் நீ நடந்து வரும்பொழுது  ரதிவீதிகளாக மாறிப்போகின்றன.