December 18, 2010

வாழாமலே செத்துப்போனவள்!

ஒரு வேப்பமரத்தின் நிழலில் -2

ஒரு பதினைந்து குடும்பங்கள் வாழும் ஒரு சின்ன கிராமத்தில் நாட்டாமையாக வீற்றிருக்கும் ஒரு வேப்பமரத்தின் நிழலில் அவ்வப்போது தங்களுடைய ஆற்றாமை,வெறுப்பு,மனச்சோர்வு இவற்றை பகிர்ந்து கொள்ளும் மனிதர்களைப்பற்றிய இரண்டாவது பார்வை.

அப்பனே முருகா எல்லாரையும் காப்பாத்துப்பான்னு வேப்பமர நிழலில் காலை நீட்டிய படி உட்கார்ந்தவாறு தன்னுடைய சக தோழியைப்பற்றி மீனாச்சி வேப்பமரத்திடம் புலம்ப ஆரம்பித்திருந்தாள் .

நல்லாத்தேன் இருந்தா இந்த சம்முகம், திடீர்ன்னு நேத்து காலங்காத்தால கீழத்தெரு சின்ராசு தண்டோரா போட்டுகிட்டே வந்தப்பதான் தெரிஞ்சது சம்முகம் செத்துப்போய்ட்டான்னு.சம்முகம் யாருன்னு கேக்குறீகளா நானும் சம்முகமும் ஒரு சோட்டு வயசுக்காரிக எவீடும் அவ வீடும் ஓட்ட்டியொட்டியிருக்கும் சிறுசுல இருந்தே ரெண்டுபேரும் ஒரே பள்ளிகோடத்துல ஒரே தட்டுல சாப்ட்டு வளர்ந்தவக.இந்த சம்முகம் இருக்காளே கொஞ்ச நஞ்சமில்ல அம்புட்டு கருப்பா இருப்பா, கருப்புனாலும் கண்மைய மொகம்பூரா பூசுன மாரியொரு கருப்பு.ஆள்தான் கருப்பேயொழிய அவளோட மனசு சுத்த வெள்ள அவ அப்பங்காரன் என்ன வாங்கியாந்தாலும் எனக்கும் ஒரு பாகம் கொடுத்துட்டு திங்கிற மனசுக்காரி பாகம்பிரிக்கமுடியாத ஒத்த முட்டாயா இருந்தால் அவ சட்டையில முட்டாய சுத்தி வாயில வச்சி கடிச்சி எச்சி படாம கடிச்சு பாதியெனக்கு கொடுத்துட்டுத்தான் திம்பா.

ஒரு நா பள்ளிக்கோடம் போய்ட்டு வீட்டுக்கு வந்துகிட்டிருக்கையிலயே அடியே மீனாச்சி எனக்கு கண்ணு கொஞ்சம் மங்களா தெரியுதுடி என்னனே தெரியலைன்னு கண்ணக்கசக்கிகிட்டே வந்தா நானும் எதோ தூசுதுரும்பு கண்ணுக்குள்ளாற விழுந்துபோயிருக்கும்டி இரு நான் ஊதிவிடறேன்னு சொல்லி கண்ணாம்பட்டைய மேலதூக்கிபிடிச்சு ஊதிவிட்டேன் அப்போவும் அவ இல்லடி இன்னும் அப்படியேத்தான் இருக்குடின்னு சொன்னா. வீட்டுக்கு போனதும் அவங்கப்பங்காரன்கிட்டயும் ஆத்தாக்காரிகிட்டயும் சொல்லியிருக்கா அவங்களுக்கு இவ மேல அக்கறையே இல்லன்றதால அவ சொல்றத காதுலயே வாங்கிக்கவேயில்ல அப்படியே விட்டுட்டாங்க கொஞ்ச நாள்லயே கண்ணுல பூவிழுந்திடுச்சு வீட்டை விட்டு வெளியவே வர முடியாத அளவுக்கு கண்ணு மங்கிப்போச்சு.பள்ளிக்கோடத்துக்கு வர்றதையும் நிப்பாட்டிட்டாங்க.

நா பள்ளிக்கோடம் விட்டு எப்போ வாறேன்னு எதிர்பார்த்துகிட்டேயிருப்பா நான் வந்ததும் அன்னிக்கு பூரா அவ ஆத்தாக்காரி திட்டுனதையெல்லாம் சொல்லி சொல்லி அழுவா. பொண்ணு சமஞ்சா சந்தோசப்படற பெத்தவுக இருக்குற ஒலகத்துல இவ சமஞ்ச விசயத்துக்காக அவ அப்பனும் ஆத்தாளும் இவளப்போட்டு அடியடின்னு அடிச்சுருக்காக.அதுக்கப்பறம் கொஞ்ச நாளைக்கு இவளை வெளியவே விடலை . அவளுக்கு ஒரு தம்பிக்காரன். அவனை டவுன்ல இருக்குற கான்மெண்ட் பள்ளிக்கோடத்துல சேத்து படிக்கவச்சு அவனை ஒரு ராசாவாவும் இவளை தீண்டத்தாகதவ மாதிரியும் நடத்துனாக அவக அப்பனும் ஆத்தாளும் வீட்ல.நெசமாலுமே சம்முகம் பாவப்பட்ட பெறவி.

நாளும் வருசமும் வெரசா ஓடிப்போச்சு நானும் உள்ளூர் மைனர் ஒருத்தருக்கு வாக்கப்பட்டேன். எனக்கும் நாலஞ்சு புள்ளகுட்டிங்க ஆயிப்போச்சு என்னோட ஒவ்வொரு சீமந்தத்துக்கும் என் ஆத்தாக்காரி வீட்டுக்கு போறப்போ சம்முகம் என்கிட்ட வந்து எனக்கும் உன்னமாதிரியே புள்ளதச்சியா ஆவணும்போல இருக்குன்னு சொல்லியழுவா . கஷ்டமாத்தேன் இருக்கும் என்ன செய்ய விதி அவளை ஆண்டவன் அஷ்டகோணலா படைச்சுட்டான். ஒரு நாள் அவளோட ஆத்தாக்காரியோட தம்பி சம்முகத்தோட மாமங்காரன் இவளோட பாவாட சாக்கெட்டெல்லம் கிழிச்சு அசிங்கம் பண்ண பாத்திருக்கிறான் அந்த நேரம் இவளோட தம்பிக்காரன் வந்து ரெண்டு அறை விட்டு காப்பாத்திப்போட்டான் இல்லைனா பாவம் ஏற்கனவே நாறி நமுத்துப்போன இவ இன்னும் அழுகி சின்னாபின்னமாயிருப்பா.பாவம் அவ அப்பங்காரனும் ஆத்தாக்காரியும் செத்துப்போனபெறகு இவ தம்பிக்காரந்தான் இவளுக்கு கஞ்சியூத்திகிட்டு கெடந்தான்.

ஒரு நா நான் வீட்ல இருக்கறப்போ பூனக்குட்டிகனக்கா மொல்லமா நடந்து வந்தவ சொன்னத கேட்டதும் எனக்கு தூக்கிவாரிப்போட்டுச்சு.கொஞ்சம் சோறு இருந்தா போடுடின்னா என்னடி ஒன்னோட நாத்தனாக்காரி சோறுதண்ணி கொடுக்கரதில்லையான்னு கேட்டதும் அழுதிட்டா அதுயேண்டி கேக்குற முந்தாநாளு ஆக்குன சோத்த புழுவச்சத வக்கிறா வாய்ல வக்க முடியல குருட்டுச்சிறுக்கிதான எதப்போட்டாலும் தின்னுடுவான்ற நப்பாசை போல தம்பிகிட்ட சொன்னா நீ வாழ்றதே வீண் இதுல வீணாப்போனத தின்னா குறைஞ்சா போய்டுவன்னு சொல்லி கேலிபேசறான் நான் என்னடி பாவம் பண்ணேன் ஏன் எனக்கும் உன்னைமாதிரி கல்யாணம் காட்சி ஆயிருந்தா இந்த சிறுக்கி மவகிட்ட எல்லாம் வசவு வாங்கணும்ன்ற அவசியமும் அவ போடற சோத்ததின்னுட்டு உயிர் வாழணும்ன்ற அவசியமும் எனக்கிருந்திருக்காதுடின்னு அழ ஆரம்பிச்சா..

ஏண்டி எனக்கு இன்னும் கல்யாணம் ஆவலைன்னு சொல்லி கேட்டவளுக்கு என்னால பதிலே சொல்லத்தெரியலை அதுக்கப்பறம் அவ நாத்தனாக்காரி கொடுமை இன்னும் அதிகமாயி அந்த வீட்டுக்குள்ளாறயே தெனமும் நொந்து நொந்து செத்துக்கெடந்தவ நேத்தைக்கு நெசமாலுமே செத்துப்போயிட்டா நீயே சொல்லு ஏன் அவளுக்கு கண்ணு போச்சு? ஏன் அவளுக்கு கல்யாணம் காட்சி ஆகலை இது ரெண்டுத்துக்கும்  நீதான் பதில் சொல்லணும்..

வேப்பமரம் தன்னுடைய கிளையிலிருந்து பசுமையான இரண்டு இலைகளை உதிரவிட்டது...


.

22 comments:

Vaitheki said...

மிகவும் உருக்கமான கதை. நல்ல கிராமிய சொல் நடை..வாழ்த்துக்கள் சார்!

பனித்துளி சங்கர் said...

எதார்த்தமான பேச்சு வழக்கை மிகவும் நேர்த்தியாக எழுத்துக்களில் புகுத்தி ரசிக்க வைத்திருக்கும் விதம் சிறப்பு நண்பரே . தங்களின் முதல் பகுதியை இன்னும் வாசிக்கவில்லை அதையும் வாசித்துவிட்டு மீண்டும் வருகிறேன் . பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

யதார்த்தம் எழுத்து நடையில் ...
அருமை சகோ

பனித்துளி சங்கர் said...

இன்னும் தமிழ்மணத்தில் பதிவை இணைக்கவில்லையோ !? ஓட்டு இட இயலவில்லை . புரிதலுக்கு நன்றி

Unknown said...

மீனாச்சி, வேப்ப மரத்திடம் கதை சொல்லும் பாணி, பழுத்த இலை விட்டு, மரம் பதில்
சொல்லும் பாணி அருமை.
திருமணம் ஆகாத முதிர்கன்னிகளின் சோகம் சொல்லிதீராது என்பதற்காகவா வேப்ப மரம் இலை சிந்தி அழுததது?

Unknown said...

nalla iruku kadhai thank you

Unknown said...

unmayaga nadapadhai azhagaga solli irukinga

sakthi said...

வட்டார வழக்கில் கதை நல்லாயிருக்கு வசந்த் தொடரட்டும்.....

பாவம் சம்முகம்.....

மாணவன் said...

யதார்த்தம் கலந்த நெகிழ்வான எழுத்துநடையில் அற்புதம் அண்ணே,

தொடருங்கள்....

தேவன் மாயம் said...

வசந்த்! கிராம வாசனையுடன் உருக்கமான கதை!

Unknown said...

பாராட்டுக்கள் மாப்ளே ...

Anonymous said...

மச்சி ரொம்ப உருக்கமா இருக்கு டா..
சில மனிதர்களின் வாழ்வே வேதனையாகி விடுகிறதே :(

சீமான்கனி said...

அழகான கிராமத்து நடைல உயிர் தடவும் உருக்கமான கதை மாப்பி...

//வேப்பமரம் தன்னுடைய கிளையிலிருந்து பசுமையான இரண்டு இலைகளை உதிரவிட்டது...//


இந்ந்த வரிகள் ஸ்பெசல்...

'பரிவை' சே.குமார் said...

கிராமிய பேச்சு வழ்க்கில் மனதை வருடும் அழகான கதை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாப்பு இதுக்கு மைனஸ் ஓட்டா பிளஸ் ஓட்டா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கணகலையும் மனதையும் கலங்க வைத்த கதை*
வளமான பேச்சு நடையிலான தன்னிலை
கதை சொல்லல்* அருமை வசந்த்*

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கண்களையும் மனதையும் கலங்க வைத்த கதை*
வளமான பேச்சு நடையிலான தன்னிலை கதை சொல்லல்*
அருமை வசந்த்*

Chitra said...

மிகவும் அருமை.

சாந்தி மாரியப்பன் said...

உருக்கமான கதை..

ஹேமா said...

விதி வலியது...இது எல்லோருக்குமே பொருந்தும் !

மாதேவி said...

சண்முகத்தின் சோகம் படிக்கும்போதே தொண்டையை அடைக்கிறது.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சில கேள்விகளுக்கு பதில் இல்லை. சில மனிதர்களின் வாழ்வுக்கும்..

நிஜக் கதையா? இல்லை பார்த்து வளர்ந்து மனிதர்களின் தாக்கத்தில் எழுதப்பட்ட புனைவா வசந்த்?